ஆர்வமற்றவர்களாகவே தமிழ் மக்கள் இருக்கின்றனர்!


 வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு பொறுத்த வகையில் அங்குள்ள தமிழர்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தமிழ் தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை. எனவே தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக தமிழ் மக்கள் ஆர்வமற்றவர்களாகவே இருக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

 

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (15) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசு கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது யாரை ஆதரிப்பது அல்லது தமிழ் பொது வேட்பாளர் குறித்து இதுவரை எவ்வித கலந்தாலோசனைகளையும் முன்னெடுக்கவில்லை.

தமிழ் பொது வேட்பாளர் குறித்து ஊடகங்களில் கருத்துக்கள் வெளிவருகிறது. என்னை பொருத்த அளவில் அவர்கள் கூறுவதன் பிரதான காரணம் தொடர்ச்சியாக ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் வாக்களித்தாலும் தமிழர்களின் உரிமைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்கின்ற சிலரது கருத்துக்கள் நிலவுகின்றன.

எனது தனிப்பட்ட கருத்தாக தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்பது மிகவும் கடினமான விடயம்.

வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு பொறுத்த வகையில் அங்குள்ள தமிழர்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தமிழ் தலைமையை மக்கள் இன்னும் அடையாளம் காணவில்லை. காணவும் முடியாது என்பது என்னுடைய கருத்து.

எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு கட்சித் தலைவர் அல்லது பொதுவானவர்களையோ அடையாளம் காண்பது என்பது கடினமான விடயம்.

குறிப்பாக தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்திற்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இருப்பதாக நான் காணவில்லை.தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக தமிழ் மக்கள் ஆர்வமற்றவர்களாகவே இருக்கின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும் போது வேட்பாளர்கள் தேர்தலில் நிறுத்தப்படும் போது அந்த நேரத்தில் கட்சி ஒரு தெளிவான முடிவை எடுக்கும் என தெரிவித்தார்.-மன்னார் நிருபர் லெம்பட்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.