புது யுகம் நோக்கி.....
உலகில் எந்தவொரு மனித இனமும் அடக்கப்படும்போதும் அதை எதிர்த்து அவ்இனம் ஆர்த்தெழுவதும் தம்முடைய இறைமையையும் தாய்நாட்டையும் மீட்பதற்கான விடுதலைப் போராட்டத்தில் குதிப்பதும் இயல்பானதே,
அது,தவிர்க்க முடியாத வரலாற்றுக் கடமையாகவும் உள்ளது. அந்த வகையில் பிறிதோர் நாட்டினால் அடிமை கொள்ளப்பட்ட எத்தனையோ நாட்டு மக்கள் தம்மீதும் தம் நாட்டின் மீதும் திணிக்கப்பட்ட அடக்கு முறைக்கு எதிரான பாதையில் குதித்து தம்மையும் தம் நாட்டையும் அடிமைத் தளையில் இருந்து மீட்டுள்ளனர்.
இன்று எத்தனையோ நாடுகளில் விடுதலைக்காகவும் அங்குள்ள மக்களின் சுபீட்சத்துக்காகவும் உலகில் எத்தனையோ விடுதலை கோரும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு, சுதந்திரப் போராட்டமே மனித வரலாறாகவும் உள்ளது. அந்த வகையில் எங்களின் வரலாறு ஒரு தனி இடத்தைப் பிடிக்கிறது. தந்தை வழிச் சமுதாயத்தில் தோற்றம்கொண்ட பெண் ஒடுக்குமுறை இன்றும் தொடர்கிறது. எனவே உரிமைகளை வென்றெடுப்பதற்காக உலகெங்கிலும் பல பெண் விடுதலை இயக்கங்கள் இயங்கி வருகின்றன.
ஒரு சமத்துவமான சமுதாயத்தை உருவாக்கி நாட்டு மக்களின் சுபீட்சத்தை பெற்றுக்கொள்வதற்கான விடுதலைப் போராட்டத்தின் மூலம் ஆசிய நாடுகளின் பெண்களின் மீது திணிக்கப்பட்டுள்ள அடக்கு முறைகள் ஓரளவுக்கேனும் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனாலும் சமூக பொருளாதார ரீதியில் ஓர் பெண் ஒரு ஆணை சார்ந்து வாழ வேண்டிய நிலையுள்ளது. இன்றுள்ள சமுதாய அமைப்பு மாற்றப்படாத காரணத்தால் இன்றும் உலகின் எந்தவொரு மூலையிலும் கூட பெண்கள் பூரண சுதந்திரத்தை உடையவர்களாக காணப்படவில்லை.
பெண் தனது ஆற்றல்களையும் ஆளுமையையும் வளர்த்துக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டாலும் இன்னும் பெண்களின் வாழ்வு இருட்டில் தான் உள்ளது.
இதனால் பெண் ஓர் ஊனப்பிறவி போல ஆக்கப்பட்டு ஆண் பிரஜையைப் போன்று சமூகத்தின் வளர்ச்சியிலும் நாட்டின் முன்னேற்றத்திலும் தனது பூரண பங்களிப்பை செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றாள்.
ஆனால் இத்தகைய அநீதியான சமூகம் சொல்லிக்கொள்வது என்னவென்றால் பெண்கள் மென்மையானவர்கள். கடின வேலைகளைச் செய்யமாட்டார்கள், தொழில் நுட்ப விடயங்களை புரிந்துகொள்ளமாட்டார்கள் என்பதாகும். மாறாக தமது ஆற்றல்களை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்த குறிப்பிட்டளவான பெண்கள் இன்று விண் வெளியில் பறப்பதிலும் அண்டங்களுக்கிடையிலான ஆராய்ச்சியிலும் தமது பங்கை செலுத்துகின்றனர்.
தான் சார்ந்த துறைகளில் பிரமிக்கத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளனர். தொழில்நுட்பத்துறைகளிலும் அரசியலிலும் முண்ணனியில் நிற்கின்றனர். மிகவும் கடினமான துறையென கருதப்படுகின்ற இராணுவ துறையிலைகூட இவர்களின் பங்களிப்பு இடம்பெற்றுள்ளது.
.இன்று மக்களின், மண்ணின், விடிவுக்காக ஆயுதம் ஏந்திய புரட்சிகர போராட்டங்களினால் விடுதலையடைந்த நாடுகளிலும் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் தம் மண்ணின் மக்களின் சுதந்திரத்துக்காக ஆயுதம் ஏந்திய பெண்களின் எண்ணிக்கை கணிசமானது.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எரித்திரியாவில் 65 வீத போராளிகள் பெண்களாக இருந்தனர் என்பது, அந்தாட்டின் விடுதலைக்காக பெண் இனம்தான் கூடிய பங்காற்றினர் என்பதைப் புலப்படுத்துகின்றது.
லிபியா,சீனா போன்ற நாடுகளில் இராணுவத்தில் இணைந்து நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பல பெண்கள் ஈடுபடுகின்றனர்.
மொத்தத்தில் ஒரு நாட்டின் மிகவும் முக்கிய துறைகளான,பாதுகாப்பு பொரளாதாரம், அரசியல் ஆகியவற்றில் பங்குகொள்வதன் மூலம் தம்மாலும் எதையும் செய்ய முடியும் என்பதை பெண்கள் நிரூபித்து வருகின்றனர்.
ஆனாலும் ஒரு புறம் நோக்கினால், தற்போதும் பெண்கள் சமூக பொருளாதார அமைப்புக்களில் ஆணைச் சார்ந்து நிற்கவேண்டிய நிலையே உள்ளது. இதனால்தான் சார்ந்து நிற்கும் ஆணின் இழப்பின் பின் அவர்களில் சிலரால் சுயமாக வாழ முடிவதில்லை.பல இன்னல்களை எதிர்நோக்க முடிகிறது.சமூகத்தின் பெண் இனத்தின் மீதான அடக்கு முறைகளே தவறான நடத்தை உடைய பெண்ணை உருவாக்குகின்றது.
பெண்கள், சின்னத்திரை போன்ற உப்புச்சப்பற்ற விடயங்களில் மூழ்கி கிடக்காமல், ஆக்கபூர்வமான செயல்களை முன்னின்று செய்வதன் மூலம் சிறந்த பெண் சமுதாயத்தின் பங்காளராகலாம்.
எம் தாய் வழிச்சமூகம் பல வீரதீர பராக்கிரமங்களின் சொந்தக்காரர்கள். பெண்கள் , தங்களை ஒரு வட்டத்திற்குள் சுருக்கி கொள்ளாது, தனக்கான பணிகளை மிளிர்வுடன் ஆற்றவேண்டும்.
உலகம் ஆயிரம் சொல்லட்டும், நேர் வழி நின்று, தன்னைத் தானே செதுக்குவதில் தான் பெண்ணின் பங்களிப்பு முழுமை பெறுகிறது.
கருத்துகள் இல்லை