இந்தியாவில் எந்த அரசாங்கம் வரினும் இணைந்து செயலாற்றுவோம் !

 


இந்திய மக்களவைத் தேர்தல்கள் அந்நாட்டின் உள்ளக விவகாரம் எனவும், அதில் இந்தியர்களே தீர்மானிக்கும் சக்தி எனவும் தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மக்களால் தெரிவுசெய்யப்படும் எந்தவொரு அரசாங்கத்துடனும் தாம் இணைந்து செயலாற்றத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் நேர்காணலிலேயே அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது;

இலங்கை - இந்தியாவுக்கு இடையில் நீண்டகாலமாக பல்துறை சார்ந்த வலுவான ஒத்துழைப்பு காணப்படுகின்றது. இருநாடுகளுக்கும் பொதுவான பரஸ்பர நலன்களை முன்னிறுத்தி இணைந்து பணியாற்றுகின்றோம். கொழும்பில் ஐ.ரி.சி ரத்னதீப நட்சத்திர ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. இது மேலும் பல இந்தியர்கள் இலங்கைக்கு வருகைதருவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கும். அதேபோன்று துறைமுகம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றில் மேலும் முதலீடுகளை எதிர்பார்க்கின்றோம். இந்தியா 'பொருளாதார சுபீட்சத்தை' நோக்கி நடைபோடுகின்றது. அது இப்பிராந்தியத்துக்கும், இலங்கை போன்ற நாடுகளுக்கும் நன்மையளிப்பதாகவே அமையும்.

அதேபோன்று இருநாடுகளுக்கும் இடையிலான மக்கள் மயப்படுத்தப்பட்ட கலாசாரத்தொடர்புகளும் நீண்டகாலமாக நிலவிவருகின்றன. பௌத்த மதம் இந்தியாவிடமிருந்து இலங்கைக்குக் கிடைத்த பெரும் பரிசாகும். எனவே இருநாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்புகளையும், சுற்றுலாத்துறையையும் மேலும் வலுப்படுத்துவதற்கான முதற்கட்ட நகர்வாக இராமாயணத்தை அடிப்படையாகக்கொண்ட இருநாட்டுத்தொடர்புகள் அமையுமென நம்புகின்றேன். 

அடுத்ததாக இந்தியாவில் நடைபெற்றுவரும் தேர்தல்கள் உள்நாட்டு விவகாரம் என்பதுடன், அதில் இந்தியர்களே தீர்மானம் மேற்கொள்ளவேண்டும். இந்திய மக்கள் மேற்கொள்ளும் தீர்மானத்துக்கு அமையத் தெரிவாகும் எந்தவொரு அரசாங்கத்துடனும் நாம் இணைந்து பணியாற்றவோம் எனத் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.