என் ஜீவன் நீயே....!

 


எந்தன் இதயம் 

தினம் எழுதும் 

கவிதையானவனே 


அன்று

கரிப்பட்ட முறிப்பில்

எந்தன்

கண்ணில்பட்டு

நெஞ்சோடு கலந்தாய் 


இன்று

நந்திக்கடலின் கரையில்

காத்திருக்கிறேன் 

உனக்காக 


உன்னையெண்ணி

ஒரு குயில்

தினமும் கானமிசைத்தபடி

காத்துக்கிடப்பதை நீ அறியாயோ 


இந்த

வைகாசி மாதத்தில்தான்

உன்னை 

இறுதியாகப் பார்த்தேன்

உன்னோடு 

இறுதியாக கதை பேசினேன் 


உனது மூச்சடங்கிய 

இம் மாதம்

எனக்கு வேண்டாத மாதம்

என் கண்கள்

குளமாகும் மாதம்

என் மனம்

இருள் சூழ்ந்த மாதம் 


கடலலைக்குள்

ஆடி அசையும் 

நிலாவின் நிழலாக

நடுச்சாம வேளையிலும்

கண்விழித்து அல்லாடுகிறேன் 


வானம் தொலைத்த

நீலம்போல்

நான் தொலைத்த

என் ஜீவன் நீயே....! 


-பிரபா அன்பு-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.