போதைப்பொருள் உற்பத்தி மையம் இணுவிலில் சுற்றி வளைப்பு!

 யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் உற்பத்தி மையம் ஒன்று  காவல்துறையினரினால் சுற்றி வளைக்கப்பட்டு போதைப்பொருள் உற்பத்தி பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் பிரித்தெடுக்கும் உற்பத்தி நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. 
 
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த வீட்டினை சுற்றி வளைத்த போது வீட்டில் இருந்த நபர்கள் தப்பியோடியுள்ளனர்.
அதனை அடுத்து வீட்டினுள் சென்று காவல்துறையினர் சோதனை நடாத்திய போது , அறை ஒன்றினுள் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கான கட்டமைப்பு காணப்பட்டுள்ளது.  ஆய்வு கூடங்கள் போன்று அக் கட்டமைப்பு காணப்பட்டுள்ளது. 
 
அதனை அடுத்து தடயவியல் காவல்துறையினர் , சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டோருக்கு காவல்துறையினர் தகவல் வழங்கிய நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தமது துறை சார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  அத்துடன் சில மாதிரிகளை மேலதிக ஆய்வுகளுக்காக சம்பவ இடத்தில் இருந்து சேகரித்து சென்றுள்ளனர்.
அதன் ஆரம்ப கட்ட தகவலின் அடிப்படையில் , இரசாயன பதார்த்தங்களை பிரித்தெடுத்து , ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் கட்டமைப்பு காணப்படுகிறது. இவை சாதாரண நபர்களால் இலகுவில் செய்ய கூடியதில்லை. 
 
 
இவை இராசயன பதார்த்தங்களை கையாள கூடிய நபர்களால் தான் மேற்கொள்ள முடியும். இரசாயனவியல் தொடர்பிலான அறிவு உள்ள நபர்கள் மூலமாக தான் இவற்றை செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது குறித்த வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் , இரசாயன பகுப்பாய் பிரிவினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  
 
 
அத்துடன் தப்பி சென்ற நபர்களையும் , குறித்த வீட்டில் வசித்து வந்தவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
 
அதேவேளை குறித்த வீட்டில் வசித்து வந்தவர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் , பிரதான சந்தேகநபர் கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய வன்முறை கும்பல் ஒன்றுடன் இணைந்து வன்முறைகளில் ஈடுபட்ட குற்றங்களில் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள நபர் எனவும் , தற்போது வன்முறை சம்பவங்களில் இருந்து விலகி வாழ்வதாக நீதிமன்ற வழக்குகளில் குறித்த நபர் தெரிவித்து வந்த நிலையில் , போதைப்பொருள் உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளமை  காவல்துறை தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.