“ஊழி” திரைப்படம் உலகெங்கிலும் திரையிடப்பட்டு பெரு வெற்றி பெற்றுள்ளது!📸

கனடாவில் இரு இடங்களில் பல்வேறு காட்சிகளாக திரையிடப்பட்டு உணர்வுள்ள தமிழ்த் தேசிய மக்களால் பார்த்துப் பாராட்டப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.


நேற்றைய மதிய 1:30 காட்சியில் Woodside Cinema வில் இத்திரைப்படத்தை பார்த்து வந்ததிலிருந்து படத்தின் காசி என்ற சிறுவன், மாணவன், இளைஞன் கதையின் உயிர்ப்பான மூவரும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறார்கள்…


சிறுவனின் அப்பா, அம்மா, தாத்தா, ஆசிரியர், இளையவனின் காதலி என எல்லோரும் இந்த நிமிடம்வரை என்னைச் சுற்றிச் சுற்றி வட்டமிடுகின்றார்கள்..


இது கதை அல்ல! பல்லாயிரம் உண்மைகளின் சில வலி சிந்தும் துளிகள்…


“எங்கே போகின்றது எங்கள் இளைய சமூகம்.. ?” எனத் தட்டிக் கேட்டு நோய் தீர்க்கும் சொட்டு மருந்து!


உயர் கொள்கைகளோடு தாய் மண் விடுதலைக்காகப் உயிர் விதைத்துப் போராடிய வீரர்கள் வாழ்ந்த எம் மண்ணில் …


இன்று எம் மரபுகளைக் காவி வரலாறு படைக்க வேண்டிய தமிழ் இளையவரை மடை மாற்றித் திசை மாற்றி …


இலக்குகள் இன்றி இலட்சியங்களைக் கோட்டை விட்டு வாழ்வு கெட்டு நடுத் தெருவிற்கு வர செய்யும் புறச் சூழல் காரணிகளால்…பகை செய்யும் சதிகளால்..


 சூழ்நிலைக் கைதிகளாகி வாழ்வு சிதைந்து மதிகெட்டு அழியும் இனமாக வாழ்வதுதான் இனி எம் தமிழர் விதியோ?


கேள்விகளைக் கணைகளாக்கி மூளையைக் குடைய வைக்கும் துளிச் சிந்தனைகளின் கடற் பெருக்கு திரை மொழியில்..


“இனியொரு புது விதி செய்ய இளந்தலைமுறையினர் எழ வேண்டும்!” எனக் கவலை கொள்ள வைக்கின்றது திரைப்படம்!


விழிப்பு ஒன்றே விடுதலைக்கு முதல் படி! 


ஆமாம்! இத்திரைப்படம் மாண்டு போய்க் கொண்டிருக்கும் எம் ஈழத் தமிழ் இனத்தின் இளம் தலைமுறையைத் தட்டி எழுப்பி மீண்டு வர விழிப்புணர்வை ஊட்டுகின்றது!


இப்படத்தை எழுதி இயக்கிய இயக்குனர் ரஞ்சித்திற்கும் நடித்த மற்றும் சிறந்த இத்திரைப்பட படைப்பில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களிற்கும் பாராட்டுக்கள்!


2009 காலத்திற்கு முன்பும் 2009 காலப் பகுதியிலும் …


எம் தாய் மண்ணில் இனவுணர்வாளர்களாக வாழ்ந்த ஒற்றைக் காரணத்திற்காக படையினரால் கைதாகி வலிந்து காணாமலாக்கப்பட்ட ஒரு இளைஞனின் மனைவியும்…


2009 க்குப் பின் போதை, கொலை, கொள்ளை என வாழும் இன்றைய தாயக இளைஞர்களின் கண் போன போக்கில் வாழும் இளைஞர்களில் ஒருவனான கதை நாயகனின் காதலியும்..


தம் கைதாகிக் காணாமல் போன கதை நாயகர்களிற்காகக் காத்து நிற்கும் கதை நாயகிகள் தமக்குள் என்ன உறவு என அறியாமலே கடற்கரையில் அலை ஓசை நடுவே சந்தித்துக் கொள்வதோடு கதை முடிகிறது..திரைக் கதை முடிகிறது..


இனித்தான் நாம் தொடர்ந்து எழுத வேண்டிய அவர்களின் எதிர்காலக் கதை தொடர்கிறது..


ஆம் மிகுதிக் கதையை எழுதப் போகின்றவர்கள் பார்வையாளர்களாகிய நாமே! எழுதுவோமா? 


மாற்றங்களை உண்டுபண்ணும் மகத்தான சக்தி மக்களே! 


மக்களை சிந்திக்க வைக்கும் மகத்தான சக்தி கலைஞர்களே!


சிந்திக்க வைத்த ஊழி திரைப்படத்திற்கு நன்றி🙏


எம் இளையவரை மீட்டெடுக்க தமிழினம் தம் இன வலிகளை வலிமையாக்கி தாய் மண் மீட்கப் போராடுவோம்!













கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.