முள்ளிவாய்க்காலை மறந்து நிற்கும் தமிழ் அரசியல்வாதிகள்!!

 


"மக்களின் துன்பதுயரங்களில் பங்கு கொண்டு அவர்களின் தேவை எதுவோ அதனை நிறைவேற்றுவதே அரசியல்"  என்பது மேதகுவால் முன்மொழியப்பட்ட வார்த்தைகள். 


ஒரு காலத்தின் பதிவாக இந்த வார்த்தைகள் உள்ளன.  ஆனால் இன்றைய எமது அரசியல் நிலை எந்த அளவிற்கு இந்த வரிகளோடு ஒத்துப்போகிறது என்பது சிந்திக்க வேண்டிய விடயம். 


முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு பின்னர் தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டம் சதி.  துரோகம் என்பவற்றில் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் நிற்கதியாக நின்ற போது தமிழ்அரசியல் தலைமைகளையே முற்றுமுழுதாக நம்பினார்கள். ஆனால் மக்களின் அந்த நம்பிக்கை அவர்களால் காப்பாற்றப்பட்டதா என்றால் நிச்சயம் "இல்லை " என்பதே பதிலாகிறது.  


கட்சிப் பிளவுகளும் கருத்துப் பிளவுகளும் புதிய கட்சிகளின் உருவாக்கமும் என தமிழ் மக்கள் அரசியல் ரீதியான நம்பிக்கையை இழக்கும் படியான செயற்பாடுகளே தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன. 'விலைபோன அரசியல்வாதிகள்' என்று மக்கள் நினைக்குமளவிற்கு எமது தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் காணப்பட்டன. 


அரசியல் அதிகாரம் என்பது ஏகோபித்த மக்களின் குரலாக ஒலிக்கின்ற போது, அதிகாரங்கள் அந்த தரப்பிடம் காணப்படும்.  அதை விடுத்து,  வெறுமனே அரசியல் லாபத்துக்காக செயற்படும்போது அது கருத்து மோதல்களையும் நம்பிக்கையீனங்களையுமே மக்கள் மத்தியில் உருவாக்கும் என்பது அண்மைய காலங்களில் நாம் கண்ட  நிதர்சனம். 


பலதரப்பட்ட கட்சிகளாக பிரிந்து தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து,  ஒரே குரல் என்கிற ஒரு வலுவான ஆயுதத்தை பாகம் பிரிக்கப்பட்ட நிலத்தை போல செயலற்றதாக மாற்றியுள்ளனர். 


'தமிழ் தேசியம்'  என்கிற எமது சாணக்கிய வியூகம் இவ்வாறு உடைக்கப்படுவது தமிழ் மக்களுக்கு நலனற்றது என்பதே அறிவு ஜீவிகள் முதல் சாதாரண மக்கள் வரையான பலரின் கருத்தாக உள்ளது. 


தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமை என்பது விளையாட்டு போக்கான ஒன்று என்று தான் செல்லவேண்டும்.  அது செல்வாக்குடன் சம்பந்தப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அவரவர் தனிப்பட்ட சொகுசு வாழ்க்கையோடு ஒரு இனத்தின் அரசியல் தலைமைத்துவத்தை இணைத்துக் கொண்டுள்ளனர். 


பண்டிகைகளுக்கு அறிக்கை விடுவது மட்டும் தான் எமது பிரதான அரசியல் கட்சி செய்யும் பாரிய பணியாக உள்ளது.  இவர்கள் அரசியல் கட்சியா அல்லது அரசியல் குழுவா  என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் எழத்தொடங்கிவிட்டது. 


தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது செழிப்பு மிக்க அரசியல் கட்சியாக அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து உருவாக்கி கொடுக்கப்பட்ட ஒன்று.  ஆனால், 


அதன் ஆழமும் அவசியமும் புரியாத எம்மவர்கள் அதனை கலைத்துவிட்டு தமிழரசுக் கட்சியை தமிழர்களின் பிரதான கட்சியாக்கினர்.  


வேறு வேறு கட்சிகளும் உதயமாகிய போதிலும் எமது மண் சுமந்த இலட்சியமோ அல்லது தமிழர்களின் அபிலாஷைகளோ எந்த கட்சியாலும் பூரணப்படுத்தப்படவில்லை.


அதாவது உறுதியான அரசியல் தலைமைத்துவம் அல்லது கூட்டிணைவான அரசியல் முன்னெடுப்பு,  ஒற்றுமையான சிந்தனை என்பவை தமிழ் கட்சிகளிடம் இல்லை என்று தான் செல்லவேண்டும். உள்கட்சி பூசல்கள் ஏராளம்.  அதற்கான பிரிவினைகளும் நாம் அறிந்தவையே. 


தமிழரசுக் கட்சியின் மாண்பாக இதுவரை சிலாகித்து கூறப்பட்ட ஒரு விடயம் என்னவென்றால்,  கட்சித்தலைமைக்காக தேர்தல் நடத்தப்பட்ட வரலாறு அக்கட்சிக்கு இதுவரை இல்லை.  

 

ஆனால் தற்போது அக்கட்சி ஒரு உள்ளக தேர்தலை நடத்தி உள்ளது.  காரணம், வயது முதிர்ந்த இரண்டு உறுப்பினர்களுமேயாகும். தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என்பதில் அடுத்துள்ள இருவர் விடாப்பிடியாக உள்ளனர்.  இவர்களோடு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஒருவரும் இணைவதாக கூறப்படுகிறது. இவர்கள் மூவரில் யார் தெரிவு செய்யப்படுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  


தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு நமது தமிழரசு கட்சியாளர் ஒருவர் அளித்த செவ்வி ஒன்றில் அதன் தலைமையை நேரடியாகவே தாக்கி கருத்து கூறியிருந்தமையை நாம் இங்கு நோக்கவேண்டும்.  


ஒரு அரசியல் கட்சியின் அக ஜனநாயகம் சிறப்பாக உள்ள போது தான் அதன் பல்பரிமாணத்தன்மை பேசப்படும். தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை அது வெறும் பூச்சியமாகவே நோக்கப்படுகிறது.  


வெறுமனே,  ஆட்சிக்கதிரைக்காகவும் உலகம் சுற்றுவதற்காகவும் எமது பிரதான தமிழ் கட்சிப் பிரதிநிதிகள் அரசியல் செய்ய முனையும் போது,  அதன் விளைவு எவ்வாறு பலன் கொடுக்கும் என்பது யோசிக்க வேண்டிய விடயமே.  மக்களால் உணரப்படாத அல்லது மக்களால் நேசிக்கப்படாத எதுவும் அற்பமானது தான். 


தமிழ் மக்களைப் பொறுத்தவரை கேலிக்கும் நகைச்சுவைக்குமான பாத்திரங்களாகவே பிரதான அரசியல் கட்சியினர் பார்க்கப்படுகின்றனர் என்பது மறுக்க முடியாத ஒரு விடயமாகும். அதிலும் எமது எதிர்கால சந்ததியினருக்கு இவர்களின் அரசியல் நகர்வு ஒரு மிக பிற்போக்குதனமான முன்னுதாரணம் என்றே சொல்லவேண்டும். 


இது இவ்வாறிருக்க,  ஜனாதிபதி தேர்தல் களமும் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இக்களத்தில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பிரதிநிதி ஒருவரை களமிறக்கவேண்டும் என்பது அரசியல் சாணக்கியம் மிக்கவர்களால் பரிந்துரைக்கப்படுகிற ஒரு விடயமாக உள்ளது. ஆனால் இவ் விடயத்தில் எமது பிரதான தமிழ் கட்சிகள் எதிர் மனநிலையையே கொண்டுள்ளனர். தேர்தல் புறக்கணிப்பு என்கிற ஒரு கருத்தும் எம்மவர்களிடையே நிலவுகிறது.  பரீட்சை எழுதாமல் பெறுபேறு பற்றி சிந்திப்பது போல.  


தமிழர் தரப்பினர் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி அந்த தேர்தலை எதிர்கொண்டு அடுத்த கட்ட தமிழர் அரசியலை முன்னெடுக்க முடியும் என அரசறிவியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் பொங்குதமிழ் இணையத்தளத்தில் 2009 டிசம்பர் 14ஆம் திகதி கட்டுரை ஒன்றினை வெளியிட்டார்.


சிங்களத் தலைவர்கள் தமிழ் மக்களை இலங்கை தீவின் அரசியலின் சமபங்காளிகள் என்பதை ஏற்றுக் கொள்வதற்கு ஒருபோதும் தயாராக இருந்ததில்லை. தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்கக்கூடாது என்பதில் மிகத் தெளிவாகவே செயல்பட்டார்கள் இனியும் அவ்வாறே செயல்படுவார்கள். எப்போதும் எல்லா விடயங்களிலும் தமிழர்களை வெட்டிவிடுவதில், ஓரங்கட்டுவதில் குறியாகவே இருந்திருக்கிறார்கள்.


ஆனால்,  வாக்குச்சீட்டு ஒவ்வொரு குடிமகனும் பெற்றுள்ள வலிமையான ஆயுதம். இனங்களின் வெற்றியை இந்த துருப்பு சீட்டு தானே தீர்மானிக்கிறது. 


நிச்சயமாக தமிழ் பிரதிநிதி ஒருவர் ஜனாதிபதி சிம்மாசனத்தில் அமரப்போவதில்லை என்பதுடன் அது இலங்கையின் தேசிய அரசியலில் எதிரணிக்கு  சார்பான ஒன்றாக அமையும் என்பதும்அவர்களின் கருத்தாக உள்ளது. 

அவர்களின் கூற்று சரியானதே என்றாலும் தமிழ் மக்களின் ஐந்து இலட்சம் வாக்குகள் சாதாரணமான ஒரு விடயம் அல்லவே. 


இலங்கையின் அரசியல் வரலாற்றில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து பதில் கொடுப்பதென்பது ஜனாதிபதி தேர்தலில் தான் என்பது கடந்த காலத்தில் நாம் தெரிந்து கொண்ட ஒரு உண்மையாகும். 


இந்த ஐந்து இலட்சம் வாக்குகளும் இனப்பிரச்சினைக்கு தீர்வு தராது என்றாலும் பலமான ஒரு துருப்புச்சீட்டாக இலங்கை அரசின் முன்னால் நிற்கும் என்பது நிதர்சனமான ஒரு விடயம் தானே. 


ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கும் இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் இது ஒரு சவாலான விஷயமாகவே அமையும். 


சிங்கள வாக்குகளே சிதறிப்போயுள்ள நிலையில் தமிழ் மக்கள் ஒற்றுமையாக நின்று வெளி உலகத்துக்கு தமது கருத்தை கூறுவதற்கு இது ஒரு மிக அருமையான சந்தர்ப்பமாகவே நோக்கப்படுகிறது. 


தற்போது உள்ள கட்சிகளுக்குள்ளிருந்து வேட்பாளரைத் தெரிவு செய்யாமல் வெளியில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்து இறக்குவது சாலப்பொருத்தமாக இருக்கும் என்பது பலரது கருத்தாக உள்ளது. 


தமிழ் மக்கள் பாரிய சக்தியாக ஒன்றிணைந்து எடுக்கின்ற தீர்மானங்கள் தமிழர்களுக்கான தீர்வுக்கு ஏதோ ஒரு வழியில் உதவும் என்பதை தமிழ் அரசியல் கட்சிகள் புரிந்து கொள்வார்களா? 

தமிழரசி















கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.