ஈரத்தீ (கோபிகை) - பாகம் 31!!

 
நல்லூர் என்கிற புனித மண் அந்த மாவீரர் தூபியால் இன்னும் புனிதப்பட்டுக்கொண்டிருந்தது. 


அங்கேதான் திலீபன் அண்ணா மிக கம்பீரமாக அமர்ந்திருந்தார். 


காரை விட்டிறங்கியதும்  மனதை கனமாக துயரம் பற்றிக்கொண்டது. 

"வண்ணமதி இறங்கனம்மா..." பாமதி அக்கா சொன்னதும் ஓடி வந்து என் கைகளைப் பற்றிக் கொண்ட அவளது கையை மிக இறுக்கமாகப் பற்றிக்கொண்டேன். 


கார்த்திகை 27 தமிழ் மக்களான எங்களுக்கு மிக ஆத்மார்த்தமான நாள்.  இதயத்தை இறுக்கிக் கிடக்கும் அந்த பக்தியின் பிரவாகம் சொல்லிப் புரிவதல்ல. 

அந்த நாளில் தான் எங்கள் மன ஆழத்தில் அடைந்து கிடக்கும் துயரங்களை நாங்கள் எங்கள் உறவுகளின் கல்லறைகளில் கொட்டிக்கதறித் தீர்க்கிறோம். 


கழன்று கொள்ளும் எங்கள் எண்ணச்சிலுவைகள் அந்தக் கல்லறை பூமியின் மீதிருந்து எழும் சிவப்பு தாகத்துடன் ஆசுவாசமாகப் பேசிக்கொள்ளும். 


ஏதேதோ சிந்தனைகள் என்னை ஆக்கிரமித்திருக்க பேசாமல் நின்று கொண்டிருந்தேன். 

முன்னால் சென்று விட்ட பாமதி அக்கா, தேம்பி அழுதபடி செல்வதும் அவவுடைய மகன் இனியனும் அகரனும் அவவுக்கு இருபுறமும் இறுகிய முகத்தோடு போவதும் தெரிந்தது. 


என் கால்கள் அசைய மறுத்து அப்படியே வேருன்றியது போல நின்றுவிட்டது. 

காரை விட்டுவிட்டு வந்த தேவமித்திரன்,  "சமர்... என்ன.... வா.. போகலாம்.... " என்றதுதான் வண்ணமதியோடு நடக்க ஆரம்பித்தேன். 


இனம்புரியாத பயப்பந்து ஒன்று என் உள்ளத்தில் உருண்டு கொண்டிருக்க என்னைத் திடப்படுத்தியபடி சென்றேன். 


முதலில் திலீபன் அண்ணாவின் நினைவித்திற்குச் சென்றுவிட்டு மாவீரர் பெயர் பொறித்த நினைவிடத்திற்கு வரலாம் என்றபடி சென்ற தேவமித்திரனின் பின்னால் நானும் வண்ணமதியும் போனோம். 


இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற திலீபன் அண்ணாவின் தோற்றம் சட்டென என்னுள் ஒரு அதிர்வைக் கொடுத்தது. 


மகத்தான போராளி மட்டுமல்ல,  உன்னதமான மனிதப்பிறவியும் கூட.  இந்த உலகத்தில்,  திலீபன் அண்ணாவின் அன்புக்கு நிகரானதொரு ஜீவன் யாருமேயில்லை என்பது தான் எனது எண்ணம்.  


பன்னிரு நாட்கள் பசித்திருந்து,  பட்டினித் தீயில் தன்னை உருக்கிய சூரியன் அவர். 

அந்த ஈகத்திற்கு எந்த முக்கியத்துவத்தையும் கொடுப்பதற்கு பாரத தேசம் விரும்பாமல்,  கல்மனதோடு நடந்து கொண்டது. 


கருணையற்ற பாரதத்தின் கோரமுகத்தை அப்போது தான் தமிழ் மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டனர்.  அமைதிப்படையென நுழைந்து,  இந்திய இராணுவம் புரிந்த அராஜகம் என்பது,  வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சியது போன்றதொரு செயல்தான். 


எத்தனை மனிதக்கொலைகள் அவர்களால்... எத்தனை தமிழ் யுவதிகள் பாலியல் வதைக்கு உட்பட்டனர். அமைதி காக்க வந்தவர்கள் அட்டூழியம் செய்து விட்டுச் சென்ற போது,  நாங்கள் இழந்த உயிர்களும் கொடுத்த விலையும் கொஞ்ச நஞ்சமல்லவே. 


திலீபன் அண்ணா,  'மக்கள் புரட்சி வெடிக்கட்டும்'  என்று சொன்னது, தமிழ் மக்களுக்கான,  அவர்களின் உள்ளார்ந்த திரட்சிக்கான அழைப்பு.  


அந்த நாட்களில் அருகிருந்த தோழர்களும் சேனையின் நாயகனும் தவித்த தவிப்பும் அடைந்த வேதனையும் சாதாரணமாக வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதென்றும் 

உருகி உதிர்ந்த திலீபன் அண்ணாவின் உயிரின் துணிக்கைகளே,  அத்தனை பேருக்கும் ஆறுதல் கொடுத்த ஜீலசுவாசம் என்று அம்மா பல தடவைகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். கண்மூடி மௌனித்து நின்ற தேவமித்திரனின் விழிகளில் இருந்து கண்ணீர் கன்னங்களில் கோடிழுத்தது.  


எனக்கு தெரிய,  திலீபன் அண்ணா மீது,  தேவமித்திரனுக்கு எப்போதும் பக்தி இருந்தது.  நாங்கள் சிறுவர்களாக இருந்த நாட்களில் திலீபன் அண்ணாவின் நினைவு நாட்களில், பாடசாலை ரீதியாக அடையாள  உண்ணாவிரதம் செல்வது வழமை.  


அன்றைய நாட்களில் அலங்கார வேலைகளை எல்லாம் தேவமித்திரன்   சிரத்தையோடு செய்வதுடன் அன்று முழுவதும் யாருடனும் பேசாமல் மௌனவிரதமும் இருப்பதையும் பன்னிரு நாட்களும் வெள்ளைப்பூவோடு வருவதையும்

காணும் போது,  ஆசிரியர்களே பாராட்டுவார்கள். 


 கைகள் இரண்டிலும் மலர்களை அள்ளி அவரின் நினைவுத்தூபில் வைத்துவிட்டு,  என் கைகளை எடுக்க மனமில்லாது அப்படியேநின்றேன். 


வண்ணமதி,  மறுபுறத்தில் பூவை வைத்துவிட்டு என் கைகளின் மீது தனது கரங்களை வைத்தபடி,  அவரையே பார்த்தாள். 


"அண்ணா...." என் மன ஓலம்,  என்னுடைய அண்ணாவை அழைப்பது போன்ற ஏக்கத்தில் வெளிவந்தது. 


விதையாகிப்போனவர்கள் அத்தனை பேரும் அண்ணாக்கள்தானே,  அக்காக்கள் தானே,  ....


வழிந்து கொண்டிருந்த நீரை,  துடைக்க கூட  தோன்றாது,  வீதியைக்கடந்து இந்தப்பக்கம் வந்து,   அக்கா அண்ணாவின் பெயரைத் தேட ஆரம்பிக்க 

"சமர்... இங்க இருக்கு " என்று அழைத்த தேவமித்திரனிடம் விரைந்தேன். 


ஆண்டு வாரியாக பெயர்கள் முகவரியோடு பொறிக்கப்பட்டிருந்தது. 


கப்டன் பொஸ்கோ,  மேஜர் கலைச்சுரபி என்ற என் உடன்பிறப்புகளின் பெயரை என் கைகளால் தடவியபோது,   என் நாளங்களில் உருண்ட உணர்வை என்னவென்று சொல்ல.... ?


தீ தொடரும்.... 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.