கரிகாலர் காவியம் (கோபிகை) - பாகம் 5!!
காற்றைக் கிழித்தபடி வேகமாகப் புறப்பட்ட புரவி, வீதியை நிறைத்து நின்ற மரங்களை, வேகப்பார்வை பார்த்தபடி நகர்ந்தது.
மிக இலாவகமாக குதிரையை விரட்டிக் கொண்டிருந்த அவரது கைகள் உறுதியும் உரமுமாய் இருந்தது.
ஈழநாட்டின் எதிர்காலம் இந்தக்கைகளளிலும் தங்கியிருக்கிறது" என்று சொல்லாமல் சொன்னது அவரது கரங்கள்.
கரிகால வேந்தன், கண்களை அசைத்தால் போதும்...
அதைச் செய்து முடித்து விட்டே மறுவேலை பார்க்கும் அளவிற்கு நட்பும் விசுவாசமும் பக்தியும் இருந்தது மன்னரிடம்.
மட்டு மண்ணின் வாசனை, முகத்தில் மோதி சிந்தையை நிறைக்க, எண்ணங்களை மன்னரின் திட்டங்களில் வைத்தபடி, விரைந்து கொண்டிருந்த சேனாதிபதி புகழேந்தியின் புரவி திடீரென இடைவழியில் மறிக்கப்பட்டது.
பழுப்பு நிறத்தில் அரைக்கை சேட்டு அணிந்த அரசாங்க காவல்காரன் ஒருவன் நடு வீதியில் நின்று மறித்த போது, எதுவும் பேசாமல் தனது புரவியை விட்டு இறங்கினார்.
வரக்கூடிய ஆபத்தை அனுமானித்தவராக எச்சரிக்கையுடன் இறங்கிய சேனாதிபதியின் கண்களை நேருக்கு நேர் பார்க்க தயங்கியவனாக நின்று கொண்டிருந்த காவல்காரனிடம்,
"எனது புரவியை மறித்த காரணம் என்னவோ காவல்காரரே?" என்றார்.
"புரவியை இங்கேயே கட்டிவிட்டு அதோ அங்கே நிற்கும் குதிரை வண்டியில் வரவேண்டும் என்பது மன்னர் கரிகாலரின் உத்தரவு"
என்ற காவல்காரனை நன்றாகப் பார்த்த சேனாபதியின் மனதில் சிறுபொறி தட்டியது.
அவசரமாய் துளாவி எடுத்து,
"இதோ.... மன்னர் தன் கைபட எழுதிய ஓலை" என்ற காவல்காரனிடம் இருந்து அதனை வாங்கிப் பார்த்து விட்டு குதிரையைப் பார்த்தார்.
"நாங்கள் புறப்படுவோம், பின்னாலேயே புரவி வந்து விடும்" என்ற காவல்காரனிடம் அவர் வேறேதும் பேசவில்லை.
பார்வையை அங்கும் இங்குமாக வீசியபடி விரைந்து நகர்ந்த புரவி வண்டியில் சேனாதிபதி என்ற அடையாளம் சிறிதும் இன்றி அமர்ந்திருந்த புகழேந்தியின் சிந்தனைகளை அந்த அரசாங்க காவல்காரனே நிறைத்திருந்தான்.
ஏதோ ஒன்று அவனிடம் வித்தியாசமாகத் தோன்றியது.
அவனது வாயிலிருந்து வெளிவந்த நளினமான அந்த ஓரிரு வார்த்தைகளா ?
குதிரையின் சேணத்தை இறுகப் பற்றியிருந்த வெண்டைக்காய் விரல்களா?
பழுப்பு நிற அரைக்காற் சட்டையின் கீழே வழுவழுபோடு தெரிந்த வாழைத்தண்டு போன்ற கால்களா?
சட்டென்று நிமிர்ந்து பார்த்த போது மின்னி மறைந்த விழிகளின் வீச்சா... ..
ஏதோ ஒன்று வித்தியாசப்பட்டது.
தன்னை உலுக்கி அதற்கு மேலே எண்ணங்களை அலையவிடாது நிமிர்ந்து அமர்ந்த போது, தன்னுடைய புரவியான பரி, வேகமாக பின்னால் வருவதைக் கண்டு கொண்டவரின் முகத்தில் ஒருவித மகிழ்ச்சி துலங்கியது.
தன்னைத்தவிர மன்னர் கரிகாலரோ அல்லது படைத்தளபதி பொற்செல்வனோ தவிர பரியை வேறு யாராலும் ஓடமுடியாது என்பது அவருக்குத் தெரியும்.
மன்னர் அங்கே காத்திருப்பதால் பின்னால் வருவது பொற்செல்வன் தான் என்பது தெளிவானது.
நீண்ட நாட்களின் பின்னர் தாங்கள் மூவரும் சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணம் மனதில் ஒருவிதமான மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அரண்மனையில் அவர்கள் உலாவந்த நாட்களில், வாரத்தில் ஒரு நாளேனும் மூவரும் சந்திப்பார்கள். அதை விட, மாதா கோப்பெருந்தேவியின் கைகளால் உணவு சமைத்து அவரே நால்வருக்கும் பரிமாறுவதும் வாராந்தம் நடப்பதுதான்.
நந்திக் கடலலையோடு துள்ளி விளையாடி இருக்கிறார்கள். அங்கு சிறு குழி பறித்த நண்டுகளை அள்ளி எறிந்திருக்கிறார்கள்... அடியாடிய கடலில் புதுக்கவிதையாக அவர்களின் சிரிப்பொலி கேட்டிருக்கிறது.
இவர்கள் மூவரையும் தவிர நான்காவதாகவும் ஒருவன் இருக்கிறான். அவன்.....
எப்போதுமே வெளித்தெரியாத பெரும் சக்தி அவன். படைத்தளபதி பொற்செல்வனின் இரட்டைப்பிறவி. கானகமைந்தன்.
மன்னர் கரிகாலருக்கு மூவருமே நண்பர்கள் என்றாலும் சற்றே அதிகமான அவருடைய அன்பிற்கும் மரியாதைக்கும் சொந்தக்காரன்.
ஈழநாட்டின் வேங்கைப் படையில் வீரராக இருந்தவர், அவர்களின் தகப்பனார். தேசத்திற்கான போரில் மரணம் அடைந்து விட, அவரின் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள் இருவரும்தான்.
ஆனால், ராஜமாதா கோப்பெருந்தேவியின் பார்வையில் மிக முக்கியமான பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவன் தான் கானகமைந்தன்.
அன்றிலிருந்து இன்று வரை அவனது வாழ்க்கை இரகசியபானதே. பொற்செல்வன் தான் படைத்தளபதியாக அந்த நாட்டின் முதுகெலும்பாக இருந்தான்.
அன்னை கோப்பெருந்தேவியின பாசத்திலும் வழிகாட்டலிலும் நான்கு தூண்களாக நின்று அந்த தேசத்தை தாங்கியவர்கள், இவர்கள் நால்வரும் தான்.
அந்த நட்பையும் அன்பையும் உடைப்பதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் இடம்பெற்ற போதும் யாராலும் இவர்களைப் பிரிக்கவே முடியவில்லை.
ஆனால் தேசம்.... அவர்களின் மூச்சான மண்.... அது அவர்களிடம் இருந்து பறிபோயிருந்தது.
எங்கோ ஒரு தவறு நேர்ந்து விட்டது.
துரோகிகளும் எட்டப்பன்களும் சொந்த இராச்சியத்திலேயே உருவாகி நாட்டைக் காவு வாங்கிவிட்டனர்.
அந்நியருக்கு சொந்த மண்ணையே அள்ளிக்கொடுத்து விட்டனர்.
சேனாதிபதி புகழேந்தியின் உள்ளத்தில் நிறைந்து கிடந்த துயரம் சுமந்த நினைவுகள் பெருமூச்சாக வெளிப்பட்டது.

.jpeg
)





கருத்துகள் இல்லை