போர் !!


அரசியல் தொடர்பாடலின் ஒரு வழி முறைதான் போர் எனப்படுகிறது.  இன்றைய காலத்தில் இந்தப் போரானது நாடுகளை தின்று இயற்கையை அழித்து கொப்பளிக்கிற எச்சமானது மனித வாழ்வையும் அதன் இருப்பையும் கேள்விக்குறியாக்கி நிற்கின்றது. 


வலிகளை மட்டுமே நிரந்தரமாக்கி மனிதன் வாழும் நிலையை கொடுக்கிற போரானது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளும் தள்ளி விடுகிறது.  அதிலிருந்து மீண்டுவிடத்துடிக்கிற மனிதனின் போராட்டம் பாரியதொரு வாழ்வியல் அவலம். 


போரால் உண்டாகிற பெரிய வெற்றிடத்தை நிரப்ப முடியாது தத்தளிக்கிற மனிதர்கள்  அதன் பொருட்டு பல்வேறான குற்றச்செயல்களை முன்னெடுக்கின்றனர். போர் தருகின்ற விதவைகளின் நிலையோ சொல்லில் அடக்கமுடியாதது. குடும்பத்தின் தலைவனை இழந்துவிட்டு சமூகமும் பொருளாதாரமும் கழுத்தை நெரிக்கிறபோது அவர்கள் அடையும் அவலம்...

சமூகத்தின் கசடு நிறைந்த பார்வைகளில் அதன் மோசமான வெளிப்படுத்தல்களில் இருந்து தப்புவது சாதாரணமானதா....


தகப்பனை இழந்த பிள்ளைகள் தங்களின் வாழ்க்கையை வாழ அடைகிற பிரயத்தனம்...

தாயிடம் பால் குடிக்கும் போதே கொல்லப்பட்ட குழந்தைகள் எத்தனை ...எத்தனை....

அந்தப் பிஞ்சுக்குழந்தைகளின் காவுகொள்ளப்பட்ட கனவுகளுக்கு  போர் சொல்லப்போகிற பதில்தான் என்ன...

தாய் மரித்தது தெரியாமல் பால் குடித்த பிஞ்சுகள் எங்கள் மண்ணிலும் உள்ளனர். 


வல்லரசுகளின் கோரப்பசிக்கு இரையாகுவது சின்னஞ்சிறு நாடுகள் என்கிற சோழப்பொரிதான். போரைத்திணிக்க நினைக்கிறவர்கள் ஒரு விடயத்தை நினைக்கவேண்டும். போர் அவலங்களையும் அச்சுறுத்தல்களையும்  நோய்களையும் மட்டுமே தருகிறது.  அதிலிருந்து ஒரு சாதனைகளும் பிறப்பதில்லை. 


இனியவைகள் தொலைந்து கோரங்களையும் கொடூரங்களையும் தருகிற போரை நாம் ஒவ்வொருவரும் வெறுக்கவே செய்கிறோம். ஆனாலும் எங்கோ ஒரு மனித மனதில் இருந்துதான் போர் உருவாகிறது. 


மனிதர்கள் ஒவ்வொருவரும் மனிதர்களாக வாழ்கிறவரை போர் என்கிற சொல் சாத்தியமற்றது. 


போரையும் அதன் துயரங்களையும் இந்நாளில் நினைவுகூர்ந்து  சுபீட்சமான ஒரு பூமியை யாசிப்போம்...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.