கரிகாலர் காவியம் (கோபிகை) - பாகம் 7!!

 


கம்பீரமாக வந்திறங்கிய இளையவீரன் கானக மைந்தன், முதலில் ஈழநிலத்தின் மாண்புறு மங்கையும் அன்னை என்ற சொல்லுக்கு இலக்கணமானவருமான மாமங்கை கோப்பெருந்தேவியின் பாதக்கமலங்களைப் பணிந்துவிட்டு, இடைவரை குனிந்து கரிகாலருக்கு தன் வணக்கங்களை தெரிவித்தான். 


"சகல செல்வங்களும் கிட்டட்டும் மகன்" என்ற மாதாவின் வார்த்தைகள் மனதில் குதூகலத்தைக் கொடுக்க, திரும்பி மன்னரைப் பார்த்தான் கானகமைந்தன். 


தலை அசைத்து அவனுடைய வணக்கத்தைப் பெற்றுக் கொண்ட, கரிகாலர்,  

"இப்போது இது அரச அவையும் அல்ல, இங்கு, நான் மன்னனும் அல்ல,   நீ சேனைத்தலைவனும் அல்ல,  அதையும் தாண்டி, நான் ஆட்சியும் அதிகாரமும் இழந்து வருடங்கள் இரண்டு கடந்து விட்டதே,  அப்படி இருக்க,  இந்த வீண் உபச்சாரங்கள்   எதற்காக,  கானகமைந்தனே?"  என்றார். 


"அரியணை போய்விட்டது என்பது சரிதான், ஆனால் அது கிட்டவே கிட்டாது என்பதல்ல  மன்னவரே... ... 

தாங்கள் எதற்காக இப்படி நம்பிக்கை குறைந்து பேசுகிறீர்கள், காலம் மாறும்... நீதியற்ற எதுவும் நிலைப்பதில்லை கரிகாலரே.... " என்றான். 


"கானகமைந்தா... 

பன்னிரு திங்கள் கடந்து உங்களை எல்லாம் பார்க்க வந்திருக்கிறேன்.... மன்னரென அழைத்து என்னை  தள்ளி நிறுத்தாதே .... தோழமையோடு தோள் சாய்வதற்காக வடக்கிலிருந்து பயணித்து வந்துள்ளேன்"  என்ற கரிகாலரை,  அன்பு ததும்ப பார்த்த கானகமைந்தன் 


"மன்னித்துவிடு நண்பா... நின் சிந்தை நான் அறியாததல்ல... இருப்பினும் தாங்கள்,  எங்கள் மகாராஜா என்கிற நினைப்பு மனதைவிட்டு ஒருபோதும் மறையவில்லை என்பதை,  நினைவுபடுத்தவே அவ்வாறு நடந்து கொண்டேன் " என்று கூறிவிட்டு, 


தன் இரு கரங்களையும் விரிக்க,  அந்த நேசச்சிறைக்குள் தன்னைப் புகுத்திக் கொண்ட கரிகாலன், தலை அசைத்து மற்றவர்களையும் அழைக்க,  ஈழத்திருநாட்டின் இளைய வேங்கைகள் ஒன்றாகி நின்றனர். 


கண்கள பனிக்க,  நின்றிருந்த ராஜமாதா கோப்பெருந்தேவி, பேரன்பு மலர்ந்து மணம் வீசிய அக்கணத்தை தன் விழிகளுக்குள் மட்டுமல்லாது இதயத்திலும் நிறைத்துக் கொண்டார். 


அந்த அழகான பொழுதினை இன்னும் நான்கு கண்கள் பார்த்து, விழிகளில் நீர் துளிர்க்க நின்றிருந்தன. 


அவசரமாக அவ்விடத்தில் இருந்து அகன்று சற்றே நிமிடத்தில் மோர்க்குவளையோடு வந்து சேர்ந்தார் கோப்பெருந்தேவி அம்மையார். 


வெண்கல குவளைக்குள் நிறைக்கப்பட்டிருந்த வெள்ளைநிற மோரின்  மேலாக,  பச்சை மிளகாயும் சின்ன வெங்காயமும் மிதந்து கொண்டிருந்தது. 


அளவாக உப்பு  இடப்பட்டு உறைப்பும் புளிப்புமாக இருந்த மோர்,  வறண்டு கிடந்த நாவை நனைத்து, அமிர்தமாக தொண்டைக்குளியால் கீழிறங்கியது. 


அவர்கள் நால்வருக்குமே மோர் என்றால் அவ்வளவு விருப்பம்... 


மைந்தர்கள் ராஜவிவகாரங்களைப் பேச ஆரம்பிக்க,  கையசைத்து தடுத்த,  அன்னை,  


"பேசுவதற்கும் ஆராய்வதற்கும் நிறைய விடயங்கள் இருக்கின்றனவே,  பசி ஆறிய பின்னர் அரச விடயங்களைப் பற்றிப் பேசுவோம் " என்றார். 


தலைஅசைத்து ஆமோதித்த நால்வரும் ஒருவரை ஒருவர் மேலிருந்து கீழாகப் பார்த்து, புன்னகைத்துக் கொண்டனர். 


"தாயாரே... எங்களில் யார் தோற்றத்தில் வேறுபாடு கொண்டிருக்கிறார்? என்று கேட்ட பொற்செல்வனுக்கு,  


"கடவுளின் ஆசி,  உங்கள் நால்வரோடும் எப்போதும் இருக்கவேண்டும் என்று கூறி விட்டு,  

" அன்றாடப் பயிற்சியின் காரணமாக, நீங்கள் நால்வருமே தோற்றத்தில் எந்த வேறுபாடும் பெறவில்லை...அப்படியே இருக்கிறீர்கள்" என்றார். 


சிறு சிரிப்புடன் தாயாரை நோக்கிய நால்வரும் 

"காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதான் "  என்றனர் ஒன்றாகவே. 


மன்னவனாக மணிமுடி சுமந்தானே தவிர, கரிகாலனின் குறும்பும் கொஞ்சலும் ஒருபோதும் மாறவேயில்லை. 


போர் என்று வந்து விட்டால் புயலைப் போல,  சுழன்றடிக்கிற கரிகாலன்,  நண்பர்களோடு குதூகலிப்பதையும் அன்னையிடம் செல்லம் கொண்டாடுவதையும் அதிகம் விரும்புபவன். 


அரசவையில் கம்பீரமாக  ஒலிக்கிற கரிகாலரின் குரல், அந்தபுரத்தில் இதமாகவும் பிள்ளைகளிடம் இனிமையாகவும் தாயிடம் பாசத்தோடும் நண்பர்களிடம் நேசத்தோடும் நாட்டுமக்களிடம் பரிவோடும் எதிரிகளிடம் கர்ஜ்ஜனையோடும் ஒலிக்கத் தவறுவதே இல்லை. 


"கரிகாலரே எப்போது வன்னிக்குத் திரும்புவதாக உத்தேசம்? " என்ற பொற்செல்வனிடம் 


"பேச வேண்டும் என்று எனக்கு ஓலை அனுப்பியது சேனாதிபதி புகழேந்தி தான்,   இங்குள்ள சில அலுவல்களை முடித்துக் கொண்டுதான் நான் புறப்படுவேன்" என்றார் கரிகாலன். 


"எதற்காக கேட்டாய் பொற்செல்வா? " என்ற கரிகாலனிடம் 

"பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளதா என்பதை கவனிப்பதற்காகத்தான்....."  என்றான் பொற்செல்வன். 


அப்போது சற்றே நிமிர்ந்து நோக்கிய அவனுடைய வதனம்,  அன்னை கோப்பெருந்தேவியின் பார்வையை ஒருகணம் சந்தித்து மீண்டது. 


"என்ன விடயம் நண்பா... "என்ற தோழன் கரிகாலனிடம்,


"பிரமாதமாக ஒன்றும் இல்லை.. ..போகும் போது தங்களுக்கு தருவதற்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன், அதற்காகத்தான் கேட்டேன் மன்னவரே " என்றான் சிரிப்புடன். 


"பரிசா... எனக்கா... "

என்று கேட்டுவிட்டு கடகடவெனச் சிரித்த கரிகாலனை நிறைவோடு பார்த்தனர் மற்ற நால்வரும். 




காவியம் தொடரும்... 



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt









கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.