ஈரத்தீ (கோபிகை) - பாகம் 37!!
ஆதவன் நடுவானில் நின்று பூமியை ஆரத்தழுவியிருந்தான். வெள்ளொளியால் நிறைந்து கிடந்தது உலகம்.
தேவி அம்மாவினதும் பாமதி அக்காவினதும் கைப்பக்குவத்தில் மணமணக்கும் கறிகளோடு சுவையான மதிய உணவு தயாராகியிருந்தது.
ஊர்க்கோழி குழம்பு, நீத்துக்காயும் பருப்பும் சேர்த்த பால்கறி, வல்லாரைச்சம்பல், புடலங்காய் சுண்டல், முருங்கைக்காய் பிரட்டல், இறால் பொரியல் என்று கறி வகைகள் வரிசை கட்டியிருந்தன.
இறாலைத்தவிர மற்ற எல்லாமே தோட்டத்தில் பிடுங்கியதுதான்.
நாங்கள் சாப்பிட ஆயத்தமாக மேகவர்ணன் அண்ணாவும் வந்து விட்டார்.
"என்ன அண்ணா, திடீரென்று வந்திருக்கிறியள்?" என்றேன்.
"ஏன் சமர், வரக்கூடாதோ?" என்று பதில் கேள்வி கேட்டார்.
"அதுக்கில்லை அண்ணா, நான் இஞ்ச வாறதை உங்களுக்குச் சொல்லவும் இல்லை, திடீரெண்டு வந்திருக்கிறியள், தேவி அம்மாட்டையும் சொல்லேல்லையாம்... அதுதான் கேட்டன் " என்றேன்.
மேகவர்ணன் அண்ணா, தேவமித்திரனைப் பார்க்க,
"நான்தான் வரச்சொன்னனான்" என்றார்.
"அண்ணா வேலைக்கு போனதாலை, செங்கவினுடைய பள்ளியில் பெற்றோர் சந்திப்புக்கு போய்த்தான் வருவன் என்று சொல்லிவிட்டு இப்ப பேருந்திலை வந்தனான்" என்றார் பார்கவியைப் பார்த்துக் கொண்டே.
நானும் தலையை ஆட்டி விட்டு பேசாமல் நின்றேன்.
பாவம் மேகவர்ணன் அண்ணா, தனிய இருந்து எவ்வளவு கஷ்ரப்படுறார், அண்ணாவும் மகனும் அவரோடைதான், பெண்துணை என்றது, அவையளுக்கு அவசியம் என்றும் நினைத்துக் கொண்டேன்.
நேரம் நழுவி ஓடியது, எல்லோரும் வயிறார சாப்பிட்டார்கள். பார்கவியும் உதவி செய்ய நானே எல்லோருக்கும் பரிமாறினேன்,
ஆளாளுக்கு தேவி அம்மாவின் சாப்பாட்டை புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். அப்போது, அவருடைய முகத்தில் தெரிந்த சந்தோசத்தை வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாது, உண்மையில், பாராட்டு என்பது மனிதர்களுக்கு மிக முக்கியமான ஒன்று என்பதை அப்போது கண்களால் கண்டு கொண்டேன். பார்த்துப் பார்த்து சமைத்து தருபவர்களுக்கு "சாப்பாடு நல்லா இருக்கு" என்று எத்தனைபேர் சொல்கிறோம்? எல்லோருக்கும் அந்த மனநிலை இருக்கிறதா?
சமையல் தானே என்று சாதாரணமாக கடந்துவிடுகிறோம். ஆனால் அந்தச் சாப்பாடு தானே மனித வாழ்க்கையின் ஆதாரமாக இருக்கிறது? அதைச் செய்து பரிமாறுபவர்களை நாம் கொண்டாடுவதில்லை. ஏதேதோ எண்ணங்கள் எனக்குள் தோன்றியது.
சாப்பிட்டுவிட்டு கூடியிருந்து கதைத்துக் கொண்டிருந்தோம்.
"ஏன் தம்பியவை, மாவீரர் தினத்திலை சேட்டும் முழுக்கால்சட்டையும் போட்டு, இடுப்பு பட்டி கட்டி, எங்கட போராளிப் பிள்ளையன் மாதிரி தலையும் கட்டி, கறுத்த கயிறும் கழுத்திலை கட்டிக் கொண்டு வந்த சின்னனுகளுக்கும் குடும்பத்துக்கும் விசாரணையாமே...? " என்று கேட்ட துரை அப்பாவிற்கு,
சம்மதமாகத் தலை அசைத்த தேவமித்திரன்,
"ஓமப்பா... விசாரணைக்கு கூப்பிட்டிருக்கிறாங்கள் போல..." என்றார் தேவமித்திரன்.
"என்ன செய்யிறது, எங்கட நிலைமை அப்பிடியாப் போச்சுது, தமிழனுக்கு எண்டு பலமான சக்தி ஒண்டும் இல்லாததாலை தான் இப்படி எல்லாம் நிலைமை மாறிப்போச்சுது, சுதந்திரமா ஒரு உடுப்பு கூட போட முடியேல்லை, பயத்திலை நிண்டு பதறுறாங்கள்.... நாங்கள் பெற்ற பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளைப் பறிகொடுத்திட்டு நடைபிணமா வாழுறம், உந்த இனவாத அரசாங்கங்கள் தான் எல்லாத்துக்கும் காரணம், நான் மன்னிக்கவே மாட்டேன், அதுதான் நாங்கள் ஒரு தேர்தலுக்கும் ஓட்டு போடப் போறேல்லை " என்று சொன்னார் தேவிஅம்மா.
"ஓமோம்... உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து, எங்களை அழிச்சுப் போட்டம் எண்டு கனவு காண, சனம் இப்பிடி நினைவுகூருறதை பயப்பிடாமல் துணிச்சலா செய்த உடனே அவங்களுக்கு கிலி கிளம்பியிட்டுது, அதுதான் உப்பிடி ஆளாப்பறக்கிறாங்கள்... " என்றார் பாமதி அக்கா.
"உப்பிடி ஒண்டு ரெண்டு பேருக்குச் செய்தால், சனம் பயந்து போடும், இனிமேல் சத்தம் போடாமல் வீட்டுக்குள்ள இருக்கும் எண்டுதான் அவங்களின்ரை திட்டம்... "என்றார் மாமா.
"எங்கட சனம், மாவீரர்களுக்கான நினைவுகூரலை மட்டும் ஒருநாளும் விடாயினம், அது தமிழருக்கான ஒரு தெய்வீக நாள், ஆயிரமாயிரம் மாவீரர்களின்ரை கனவுகளுக்கான ஒரு அடையாள நாள்... அதைத் தடுக்க நினைச்சால் பிறகு விளைவுகள் பயங்கரமானதா இருக்கும், அது அவங்களுக்கும் தெரியும் ...." என்ற தேவமித்திரனுக்கு
"சரியாய் சொன்னாய் தேவா.. என்றார் மேகவர்ணன் அண்ணா.
"நெடுக உவங்களுக்கு பயந்து கொண்டே இருக்க, நாங்கள் என்ன கோழைகளே?" ஆக்ரோசமாக வந்தது பாமதி அக்காவின் பதில்.
"அடுத்த சந்ததிக்கு எங்கட கடந்து போன வரலாறை நாங்கள் காட்டத்தானே வேணும், வரலாறு தெரியாமல் வாழ்க்கை அர்த்தப்படுமே? " என்ற தேவி அம்மாவை ஆச்சரியமாகப் பார்த்தேன்.
சாதாரணமாக அவா சொன்ன வார்த்தைகள் எத்தனை வலிமை வாய்ந்தது?
'வரலாறு தெரியாமல் வாழ்க்கை அர்த்தப்படுமே? '
"சரி.. சரி... இருங்கோ, நான் போய் எல்லாருக்கும் இஞ்சி போட்டு தேத்தண்ணி கொண்டு வாறன், " என்றுவிட்டு,
"இஞ்சேப்பா, ஒரு இஞ்சிக்கண்டு பிடுங்கி வாங்கோ ....பிள்ளையளும் கொண்டு போகட்டும்" என்றார்.
மாலை நான்கு மணியானபோது, இஞ்சி சேர்த்த தேநீரையும் பருகிவிட்டு, காய்கறிகள், பழவகைகள் என்று எடுத்துக் கொண்டு எல்லோரும் புறப்பட, நானும் போவதற்கு ஆயத்தமானேன்.
"வர்ணன், நீ அந்த மகிழுந்தை ஓடிவா, நான் சமரையும் வண்ணமதியையும் அகரன், இனியனையும் கூட்டிக் கொண்டுவாறன்.... " என்றார் தேவமித்திரன்.
"அகரனும்இனியனும் எங்களோட வரட்டும்... வண்ணமதியையும் நாங்கள் கூட்டிக் கொண்டு போறம், நீங்கள் ரெண்டு பேரும் ஆறுதலா வாங்கோ, மதியம்மா வீட்ட நிப்பா , பிறகு சமர் வந்து கூட்டிப்போகலாம் " என்றார் பாமதி அக்கா.
"ஓம் பிள்ளை...நீ சொல்லுறதுதான் சரி... " என்றார் மாமாவும்.
எனக்கு வெட்கமாகவும் தயக்கமாகவும் இருந்தது.
நான் பேசாமலே நிற்க,
"தங்கச்சியம்மா.... வெக்கப்பட்டது காணும், போய் மகிழுந்திலை ஏறுங்கோ, " என்றார் மேகவர்ணன் அண்ணா.
எப்போதாவது அன்பு மிகுதியான நேரங்களில் தான் அவர் இவ்வாறு 'தங்கச்சியம்மா' என்பார்.
வண்ணமதியைப் பார்த்தேன்,
"நான் அகரன் அண்ணா, இனியன் அண்ணாவோடை வாறன் அம்மா" என்றாள்.
"பிள்ளையை நாங்கள் கூட்டிக் கொண்டு வாறம், நீ யோசிக்காதையம்மா... " என்றார் மாமா.
"அதுக்கில்லை மாமா, நேரமும் போட்டுது, உங்களுக்கும் சிரமம் எண்டுதான்.... " என்றேன் தயக்கமாக.
"சமர், நாங்கள் பாத்துக் கொள்ளுவம் , நீங்கள் யோசிக்காமல் போங்கோ" என்ற பார்கவியை புன்னகையோடு பார்த்து விட்டு எனது மகிழுந்தின் அருகில் சென்றேன்.
தேவி அம்மாவிடம் விடைபெற்று அவர்கள் எல்லோரும் சென்று விட, நானும் தேவமித்திரனும் மட்டும் நின்றோம்.
சுற்றி வந்து மகிழுந்து கதவைத் திறந்தவர்,
"ஏறுங்கள்... மகாராணி... " என்றார்.
நான் தேவி அம்மாவிற்கும் அப்பாவிற்கும் தலையை ஆட்டிவிட்டு, சிரிப்புடன் ஏறி அமர்ந்து கொண்டேன்.
எங்கள் இருவரையும் சுமந்தபடி, ஏ - 9 வீதியில் உருண்டது மகிழுந்து.
எங்கள் வாய்கள் பேசவில்லை, விழிகள் பேசிக்கொண்டன.
தீ தொடரும்....
கருத்துகள் இல்லை