ஈரத்தீ (கோபிகை) - பாகம் 36!!
தேவமித்திரனின் அந்தக் கேள்வி நான் எதிர்பார்த்தது தான் என்றாலும் அப்போது சட்டென்று என்னால் சம்மதம் சொல்ல முடியவில்லை.
சிறிது நேரம் மௌனமாகிவிட்டேன்.
"சமர், இந்த மௌனத்தை நான் சம்மதம் என்று எடுத்துக் கொள்ளவா, அல்லது....? "
அவர் பேச்சை முடிக்கவில்லை.,
"இ.. இல்.. இல்லை... அது.. இப்ப எனக்கு... " முதல் நாள் என் தோழி ஒருத்தி சொன்ன விசயங்கள் தான் என் முன்னால் வந்து நின்றது.
'கலியாணம் செய்திட்டால், எங்களுக்கேயான தனிப்பட்ட கனவுகள், இலட்சியங்கள் பற்றி நாங்கள் நினைக்கவே ஏலாது, அதைப்புரிஞ்சு கொண்டு எங்களுக்காக பாடுபடுறவையளா கணவன்மார் இருக்கவே மாட்டினம், முதலிலை எல்லாரும் நல்லாத்தான் கதைப்பினம், கலியாணம் முடிஞ்ச பிறகுதான் சுயரூபத்தைக் காட்டுவினம், பிறகு, விருப்பும் வெறுப்புமாகத்தான் கலியாண வாழ்க்கை முடியும்'
அலைபேசியில் அவள் சொன்னதெல்லாம் மீண்டும் காதுக்குள் ரீங்காரம் இட்டது.
"உன்னுடைய தயக்கம் எனக்கு புரியுது சமர், என்னோட , உன்ரை வாழ்க்கையை இணைக்க உனக்கு விருப்பமில்லை... அப்பிடித்தானே... "
"அது... அதில்லை...
வண்ணமதி... அவளுக்கான கடமைகள்....அதைவிட, எனக்கு நிறைய கனவுகள் இருக்கு, அதையெல்லாம் நிறைவேற்ற வேணும், இப்ப கலியாணம் செய்திட்டால் அதெல்லாம் முடியாமல் போயிடும்.... " என்றேன்.
"நான் அதில எல்லாம் துணையா இருக்க மாட்டன் எண்டு நினைச்சிட்டியா சமர்... நான் உன்னைவிட உன்ரை கனவுகளைத்தான் அதிகமா நேசிக்கிறன், சரி... பரவாயில்லை விடு... உன்னைக் கட்டாயப்படுத்தியோ வில்லங்கமாவோ கலியாணம் செய்த மாதிரி ஆகக்கூடாது, அதனாலை இந்தக் கதையை இப்பிடியே விடுவம்... "
"ஒரே ஒரு விசயம் தான், இவ்வளவு நாளும் அப்பா கலியாணத்தைப் பற்றி கேட்க கேட்க நான் தான் மறுப்புச் சொன்னனான். காரணம், எனக்கே தெரியேல்லை.. மனசுக்கு பிடிக்கேல்லை... அப்பிடித்தான் நான் நினைச்சன்... ஆனா, உன்னைப் பாத்த பிறகு காரணம் எனக்குத் தெரிஞ்சிட்டுது, "
சட்டென்று நிமிர்ந்து தேவமித்திரனைப் பார்த்தேன்,
"நீதான்.. நீதான் காரணம் சமர், என்ரை மனசின்ரை அடி ஆழத்திலை உன்ரை நினைவுகள்தான் பதிஞ்சு கிடந்திருக்கு, சின்ன வயசிலை ரெண்டு பேரும் சண்டைதான் பிடிப்பம்... ஆனா, அந்தச் சண்டைகளுக்குள்ள ஒரு அன்பை வளர்த்திருக்கிறம், அந்த நேச இழை அறுபடாமல் இப்ப வரைக்கும் சுத்திச்சுத்தி ஓடுது, நீ வண்ணமதியையும் நான் அகரனையும் தத்தெடுக்க நினைச்சபோது, ரெண்டு பேருமே இனி கலியாண வாழ்க்கை வேண்டாம் எண்டுற முடிவிலைதானே இருந்தம்,
அங்க... அந்த அலுவலகத்திலை உன்னைப் பாத்ததும் நான் உணர்ந்த அந்த உணர்வை, எனக்கு ஏற்பட்ட சந்தோசத்தை வார்தையிலை சொல்ல ஏலாது, அகரனை நீ நல்லா பாத்துக்கொள்ளுவாய் என்றுதான் நினைச்சன் ...வண்ணமதியை அப்பா என்ற நிலையில் இருந்து நான் நல்லபடியா பார்த்து படிக்கவைக்கவேணும் எண்டுதான் நினைச்சன்,
நீ யோசிக்கிறது பிழையில்லை சமர், ஏனெண்டால் இண்டைக்கு நிறைய ஆண்கள் இப்பிடித்தான் இருக்கிறார்கள்...
கலியாணத்துக்கு முதல் ஒரு மாதிரியும் கலியாணத்துக்குப் பிறகு ஒரு மாதிரியும் மாறி விடுகிறார்கள்,
ஆனா எனக்கு ஒரே ஒரு விசயம் தான் விளங்கேல்லை, நீ எல்லாரையும் போல, என்னையும் நினைக்கிறதுக்கு, என்ன காரணம்... ..
சொல்லு... கலியாணம் செய்யாட்டி பரவாயில்லை.. நீயும் நானும் சின்ன வயசிலை நண்பர்கள் தானே, நான் நடந்து கொண்ட எந்தச் சந்தர்ப்பம் உனக்கு என்னிலை பிடிக்காமல் போனது, உன்னை உணர்ந்துகொள்ளாதவனா எப்ப நடந்து கொண்டனான், இவன் என்னுடைய கனவுகளுக்குப் பொருத்தமற்றவன் என்று எப்ப உணர்ந்தனி, சொல்லு சமர்...? "
எனக்கே அப்போது என் மீது கோபம் வந்து விட்டது, நான் தேவமித்திரனை வெறுக்கிற மாதிரி அவர் எப்பவுமே நடந்து கொண்டதில்லையே... பிறகு எப்படி அவருக்குப் பதில் சொல்வது?
"சமர்... சரி.. விடு... நீ யோசிக்க வேண்டாம், எனக்கு ஒரே ஒரு விசயம் தான், என்ரை அம்மாவும் உன்ரை அம்மாவும் ஆசைப்பட்ட விசயம் இது, காலம் கடந்தெண்டாலும் அவையளின்ரை ஆசை நிறைவேறட்டும் எண்டு நினைச்சன், பரவாயில்லை விடு,
அதுக்காக உன்னை அப்பிடியே விட்டிடுவன் எண்டு இல்லை, நான் நீ இருக்கிற இடத்துக்கு வந்து போவன், எனக்கு சந்ததி எண்டால் அகரனும் வண்ணமதியும் தான், உன்னையும் வண்ணமதியையும் நல்லாப் பாத்துக் கொள்ளுவன், பெரிசா மனுசனுக்கு என்ன தேவை சமர், தன்னுடைய உணர்வுகளைப் புரிஞ்சு கொள்ளவும் இன்பமோ இன்னலோ பகிர்ந்து கொள்ள ஒரு துணைதானே, அது எனக்கு நீதான்... "
தேவமித்திரன் சொல்லச் சொல்ல நான் சுக்குநூறாக உடைந்து போனேன்.
"சரி.. வா... போவம், அப்பாட்ட நானே பக்குவமாச் சொல்லுறன், நீ பேசாமல் நிட்டால் சரி... " என்றுவிட்டு எழுந்து நடந்தார்.
"சமர்.. என்னடி நீ..இப்பிடி அவரை நோகடிச்சிட்டியே... " மனச்சாட்சி கேள்வி கேட்டது.
நாலடி நடந்திருப்பார்...
"தேவா மச்சான்..." என்றேன்.
சட்டென்று திரும்பிய அவருடைய முகத்தில் பெரிதாக ஒரு சிரிப்பு மலர்ந்தது. கண்களில் ஒரு பேரொளி வந்து சென்றது.
"மறக்கேல்லை...." என்றார்,
தலையை அங்கும் இங்கும் ஆட்டி இல்லை என்றேன்.
"முதல் மாதிரி நீ எப்பவும் எனக்கு பக்கத்திலை இருக்கவேணும் போல ஆசையா இருக்கடி " என்றார்.
"இருக்கிறன்... " என்றேன்.
"சமர்.. என்ன சொல்லுறாய்.... "
"நாங்கள் கலியாணம் செய்வம், எளிமையா பதிவுத் திருமணம் மட்டும் செய்வம், அகரனுக்கும் வண்ணமதிக்கும் அப்பா அம்மாவா சேர்ந்து இருந்து எல்லா நல்லதுகளையும் செய்வம்... என்னுடையகனவுகள் எல்லாம் நிறைவேற ஒரு துணைவேணும், நீங்கள் கூடவே வேணும், நான் மாமாவை நல்லா பாத்துக் கொள்ளவேணும்... " என்றேன்.
சிரிப்போடு தலையை ஆட்டியவர், அங்கே நின்றபடியே
"இங்க வா" என்றார்.
அருகில் சென்றதும் என் கைகளைப் இறுகப்பற்றியபடி, தன் நெஞ்சிலே வைத்துக் கொண்டார்.
அப்போது, அவருடைய இதயத்துடிப்பை என்னால் உணரமுடிந்தது.
அந்த லப்டப் ஒலி 'சமர்க்கனி.. சமர்க்கனி.. ' என்று துடிப்பதாகவே எனக்குப் பட்டது.
பயற்றங்கொடியில் அமர்ந்திருந்த கிளிகள் இரண்டு ஆரவாரமாகச் சத்தமிடாடபடி பறந்து சென்றன.
தீ தொடரும்.. ..
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை