கரிகாலர் காவியம் (கோபிகை) - பாகம் 6!!

 


விரிந்து நின்ற மாமரம் தன் கிளைகளைப் பரப்பியபடி ஆசுவாசமாக நின்றது.  அதில் குடித்தனம் செய்த குருவிகள் இரண்டு, தங்களுடைய மொழியில் ஏதேதோ பேசிக்கொண்டன.  


காய்ந்து கிடந்த இலைகள் காற்றில் அசைந்தபடி, விரைந்து வந்து நிலத்தை தொட்டது.  கிளைகளில் ஓடிக்கொண்டிருந்த அணில்கள் ஒன்றை ஒன்று விரட்டியபடி விளையாடிக் கொண்டிருக்க,  மாமரத்தின்  கீழே விரிக்கப்பட்டிருந்த அகன்ற பாயில் கம்பீரமாக அமர்ந்திருந்த கரிகாலரின் கண்கள் படலையையே பார்த்த வண்ணம் இருந்தன. 


சிறிது நேரத்திற்கெல்லாம் சற்று தூரத்தில் வரும் குதிரை வண்டியின் மணி ஒலி,  அவரது செவிகளைத் தீண்டியது. மன்னரின் முகத்தில் விரிந்து படர்ந்த புன்னகை, அவரது வதனத்திற்கே புது அழகை கொடுத்தது. 


படலையில் நுழைந்ததும்,  மெல்லிய கனைப்பால் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய புரவிகள், தலையை அசைத்து, 

"தங்கள் கட்டளையை நிறைவேற்றறிவிட்டோம்" என்கிற பாவனையில் கழுத்தை அசைத்தபடி மன்னரின் முகம் பார்த்தன. 


தலை அசைத்து ஆமோதித்த கரிகாலர்,  வண்டியில் இருந்து குதித்து இறங்கிய சேனாதிபதி புகழேந்தியைக் கண்டதும், சட்டென கைகளை விரித்தார். 


ஒரு நொடிப்பொழுதில் விரைந்து வந்த சேனாதிபதி புகழேந்தி, மன்னரின் விரிந்த கரங்களைப் பற்றிக் கொள்ளவும் இன்னும் இரண்டு கரங்கள், இருவரையும் சேர்த்து அணைக்கவும் சரியாக இருந்தது. 


இருவரும் ஒன்றாக நிமிர்ந்து நோக்க,  விரிந்த தோள்களும் உரமேறிய புஜங்களுமாக நிமிர்ந்து நின்ற படைத்தளபதி பொற்செல்வனைக் கண்டதும் ஒரு நொடி,  கண்  இமைக்க மறந்தவர்களாக ஆனந்த இன்பமடைந்து, பின்னர் இறுகப்பற்றிக்கொண்டனர். 


தான் வசித்த குடிலில் இருந்து வெளியே வந்த மாதரசி கோப்பெருந்தேவி, அந்தக் கணத்தில் கண்கள் கலங்க பார்த்தபடி நின்றார். 


மூவரையும் ஒரு சேர கண்டது ஆனந்தம் என்றால்,  எவ்வளவோ துன்பங்கள் வந்துவிட்ட போதும், தங்கள் அன்பிலும் நட்பிலும் சிறிதும் மாற்றம் இல்லாது,  அவர்கள் மூவரும் சிறுவர்கள் போல குதூகலித்த அத்தருணம் அகநிறைவைக் கொடுத்தது அவருக்கு. 


சற்று நிமிடத்தில் நிமிர்ந்து பார்த்த பொற்செல்வன்,  சரேலென அகன்று,  அன்னை கோப்பெருந்தேவியின் பொற்பாதங்களை தொட்டு வணங்கினான்.   அவன் நிமிரவும்,  சேனாதிபதி புகழேந்தி தானும் குனிந்து ராஜமாதா கோப்பெருந்தேவியின் விறைத்த பாதங்களை கைகளால் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டான். 


வயோதிபம் தொட்டுவிட்ட போதும் தளர்ந்து போகாத தன் வலிமையான கரங்களை அகல விரித்த,  ஈழதேசத்தின் இறைவியான கோப்பெருந்தேவி,  கண்ணீரோடு மூவரையும் தலையை ஆட்டியபடியே அருகில் அழைக்க,  மூவரும் ஒருவரையொருவர் முட்டி மோதியபடி,  அவரது கரங்களுக்குள்  ஒன்றாகி நின்றனர். 


"நீங்கள் நால்வரும் எமது தேசத்தை தாங்கப் போகும் நாற்தூண்கள்..... அதனால் எப்போதும் நால்வரும் இதே போல ஒற்றுமையாகவே இருக்க வேண்டும்" என்றார். 


"மூவர் தானே இருக்கிறோம் அன்னையே... "  என்ற கரிகாலருக்கு, 

அதோ...என விழிகளால் பதில் தந்தார் அன்னை கோப்பெருந்தேவி. 


காற்றைக்கிழித்தபடி,  விரைந்து வந்து கொண்டிருந்தது  கானகமைந்தனின் கருநிறப்புரவி. 


அதன் குளப்பொலி,  விடுதலை... விடுதலை... என்று ஆர்ப்பரிப்பது போல இருந்தது. 


எது மறைக்கப்படுகிறதோ,  அது பாவம் என்று ஒரு கருத்து உண்டு.  இங்கு ஒரு பெருவீரம்,  ராஜமாதா கோப்பெருந்தேவியால் மறைத்து வளர்க்கப்பட்டு, வாழவைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. 


அரண்மனை வாசம் கண்டதில்லை, அகிற்புகை சுவாசம் கொண்டதுமில்லை,  அவன்... 

வனந்திடை வேங்கையாய் வளர்க்கப்பட்டு வீரத்தினதும் விவேகத்தினதும் முழுஉருவாக நிறுத்தப்பட்டிருந்தான். 

அவன்தான் கானகமைந்தன். 


பொற்செல்வனின் இரட்டைப்பிறவி அவன். 


படைத்தலைவனாக இருந்த அவர்களின் தந்தை,  வீரசிங்கருணாகரன், எதிரிகளுடனான போரில்,  வியுகம் ஒன்றை உடைத்து உள்நுழைந்து, பலபேரைக் கென்று குவித்து, அந்த மண்ணிலேயே வீரசுவர்க்கம் கண்டுவிட,   கணவனின் வழியிலே,  பெண்களுக்கான போர்ப்பயிற்சி ஆசானாக இருந்து பல பெண்களை வீரத்தின் தடங்களாக மாற்றிய.  அவர்கள் இருவரினதும் அன்னை ,  வனமங்கை ,  வேடடுவர் இனப்பெண்ணும் மகாராணி கோப்பெருந்தேவியின் சிறுவயது தோழியும் ஆவார். 


இருவரும் ஒன்றாகவே போர்ப்பயிற்சிகளைப் பயின்றவர்கள். பயிற்சி ஆசானாக வந்த வீரசிங்க கருணாகரனையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் வனமங்கை நாச்சியார். 


கணவனின் இழப்பிற்குப் பின்னர,  அதிகமாக போர்க்கலையையே தனது முழு மூச்சாக நேசித்த அவர்,  வன்னியின் வனத்திலே பதித்த தடங்கள் ஏராளம். 


சில ஆண்டுகளுக்கு முன்னர்,  அவரை,  நோய் காவுகொண்டுவிட,   அவர்களின் அன்னையாக மாறினார் கோப்பெருந்தேவி. 


காவியம் தொடரும்... ..



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt











































கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.