திண்டுக்கல் சௌந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் தேரோட்டம்!
திண்டுக்கல் சௌந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடமிழுத்தனர்!
சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயில் ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் 400 வருடங்களுக்குமேல் பழைமையான சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப் பெரும் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு திருவிழா ஜூலை 13 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சௌந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் கருட வாகனம், சேஷ வாகனம், ஆஞ்சநேயர் வாகனம் யானை வாகனம் ஆகியவற்றில் அமர்ந்தவாறு தேரோடும் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்து அருள்பாலித்தார்.
ஜூலை 19 -ம் தேதி திருக்கல்யாணம் கோயில் வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
தேர் நான்கு ரத வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றது. முன்னதாகக் கோயில் வளாகம் முன்பு பெண்கள் வள்ளி கும்மி நடனமாடினர். வருகின்ற 23 -ம் தேதி தெப்ப உற்சவத்துடன் ஆடிப்பெரும் திருவிழா நிறைவு பெறுகிறது.
கருத்துகள் இல்லை