ஈரத்தீ (கோபிகை) - பாகம் 38!!

 


அது ஒரு மெல்லிய மாலைப்பொழுது.  வல்வெட்டித்துறை - தொண்டமனாறு கடற்கரையில் நானும் தேவமித்திரனும் நின்றுகொண்டிருந்தோம்.  


ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு  இருவரும் இன்று தான் சந்தித்திருக்கிறோம்.  சுமார் மூன்று வாரங்களாக அவரைக் காணவில்லை.  


அலைபேசியிலும் அவ்வளவாகப் பேசவில்லை... 


இதற்கு இடையில் தான், ராஜீவ்காந்தி கொலை- வழக்கில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டு 33 ஆண்டுகள் சிறையில் வாழ்ந்த சாந்தன் அண்ணாவின் மரணம் நிகழ்ந்தது.  

அவருடைய உடல் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 

அவருடைய மரணமும் அவருடைய தாயாரின் கண்ணீரும் உலகத் தமிழர்களையே உலுக்கி விட்டிருந்தது.  


அந்தச் சம்பவமும் அவரது உடல் விதைக்கப்பட்ட முறையும் பெரும்பாலான இளைஞர்களின் மனதில் கடந்த இனவிடுதலை தொடர்பான கேள்வியையும்   வாழ்தல் பற்றிய  ஒரு அக உணர்ச்சியையும் மரணம் குறித்த தெளிவையும் ஏற்படுத்தியிருந்தது.  


சாந்தன் அண்ணாவின் உடல் ஆரத்தி எடுத்து அவரது சகோதரியால் வரவேற்கப்பட்டது.  அவர் உயிரோடு வருவார் என்றும் வரும் போது இப்படிச் செய்து வரவேற்க வேண்டும் என்றும் அவர்கள் நினைத்திருந்தபடியே,  சூடம் ஏற்றி வரவேற்றனர். 


பிறகு,  வல்வெட்டித்துறையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தீருவில் துயிலுமிலாலத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டது. 


ஒரு வீரவணக்க அஞ்சலியாகவே அந்த நிகழ்வு இடம்பெற்றது. 


இந்தச் சம்பவம் என்னையும் ஒரு உலுக்கு உலுக்கி விட்டிருந்தது. ஒரு தாயின் காத்திருப்பு வெறும் காத்திருப்பாகவே போனதில் மனம் பாறையாகக் கனத்திருந்தது. சாந்தன் அண்ணாவின் அம்மாவின் மன ஏக்கம் நினைவுகளில் வந்து மனதைப் பிசைந்தது. 


அவரது குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு வார்த்தைகளுக்குள் அடங்க கூடிய ஒன்றல்ல.  அதுவும் அன்னையின் வேண்டுதல்கள் அத்தனையும் பொய்த்துப் போனதே.... 


இதே காத்திருப்பு எமது மண்ணில் இன்னும் எத்தனையோ அன்னையருக்கு இருக்கிறது. 


அரசின் திட்டமிடப்பட்ட தமிழ் இளைஞர்கள் மீதான  காழ்ப்புணர்ச்சி,  அதன் விளைவாக  தமிழர்  பகுதிகளில் மலிந்து விட்ட போதைப்பாவனை,  வாள்வெட்டுச் சம்பவங்கள்,  ஏனைய சமூக சீர்கேடுகள் இவை எல்லாம் இளைஞர்கள் பலரைச் சிந்திக்கத் தூண்டியது. 


இது நடந்து சில நாட்கள் ஓடிவிட்டன.  என் அமைதி எதை உணர்த்தியதோ,  வண்ணமதியும் அகரன் அண்ணா,  இனியன் அண்ணாவோடை விளையாடப் போகிறேன் என்று எதுவும் கேட்கவில்லை,   வார இறுதி நாட்களுக்கான வகுப்புகளுக்கு  கூட நானே கூட்டிச் சென்று சென்றேன்.  அங்கே அகரனைப் பார்த்துகதைத்துவிட்டே வந்தேன். 


அவ்வளவு நாட்களாக எனக்கு எதுவும் தோன்றவில்லை,  இந்த இரண்டு நாட்களாகத்தான் 'தேவமித்திரன் என்னைத் தவிர்க்கிறாரோ' என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. 


'ஏன்... என்ன காரணம்... ' 

மனதில் இந்தக் கேள்வி குடைந்து கொண்டே இருந்தது. 


கேட்டுவிடவேண்டும் என்கிற ஆதங்கத்தில் தான் இதோ இன்று அவருடன் பேசவேண்டும் என்று அழைத்திருந்தேன். 


"சமர்... நான் உன்ரை மனசைக் குழப்பிப் போட்டன்,  என்னை மன்னித்து விடு,   எங்களுக்கு ஒவ்வொருவருக்கும் நிறைய கடமை இருக்கிறது,  அந்தக் கடமைகளில் இருந்து நாங்கள் விலகிவிட முடியாது. 

தனித்தனியே வாழ்கிற போது எதாவது பிரச்சினை வந்தாலும் அது எங்களோடை போயிடும்,  அதுவே, திருமணமாகிவிட்டால் வருகிறவர்களுக்கு நிறைய பிரச்சினைகள் , சமர், எது வந்தாலும் என்னோடை போகட்டும்,  எனக்கு ஏதும் என்றாலும் அகரனையும் அப்பாவையும் நீ பாப்பாய்,  இவ்வளவு காலத்துக்குப் பிறகு உனக்கு நான் துயரத்தையா தாறது?  


"அதுதான் யோசிச்சுப் பாத்தன்,  நாங்கள் கலியாணம் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறன்,  நீ உனக்கேற்றவரா ஒருவரை உனக்கு வாழ்க்கை துணையா ஏற்றுக் கொள் சமர்,  அப்பதான் மாமியின்ரை சீவன் சந்தோசப்படும் " என்றார். 


எதுவுமே பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.  


"சமர்,  என்ன பேசாமல் இருக்கிறாய்,   ஏதாவது சொல்லன்,  கோபமோ?" என்றார். 


"எவ்வளவு சுலபமா சொல்லிப் போட்டியள், என்னை எவ்வளவு உயர்ந்த இடத்திலை யோசிச்சிருக்கிறியள்......கேட்கவே மகிழ்ச்சியா இருக்கு " என்றேன். 


சொல்லும் போதே என் கண்கள் கலங்கி விட்டன. 


"சமர்... நான்,  உனக்காக யோசிச்சுத்தான் இந்த முடிவு எடுத்தனான்.  


நீ சந்தோசமா,  சௌகரியமா வாழவேணும்.... 


உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் எண்டு உனக்குத் தெரியாது சமர்,  


உன்னை திரும்பவும் பார்த்த பிறகுதான் எனக்குள்ள ஒரு உயிர்ப்பு வந்தது,  


நீ,  எனக்கு அவ்வளவு முக்கியமானவள் தெரியுமா ,  என்னைவிட நான் உன்னை நேசிக்கிறன் சமர்,  அதனாலைதான் என்னுடைய ஆசைகளைவிட  என்னுடைய மகிழ்ச்சியைவிட நீ இன்பமாக வாழவேணும் எண்டு நினைக்கிறன்... "


அவர் சொல்லி முடித்த போது,  அந்தக் கடற்கரை மணலில் தொப்பென்று அமர்ந்து விட்டேன்.  


 தேவமித்திரன், " சமர்க்கனி..." என்றபடி என் அருகில் வர,  அவருடைய கரங்களை இறுகப் பற்றிக் கொண்டேன். 


"நான் உங்களை நேசிக்கவில்லை என்றா நினைக்கிறீர்கள்?  எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நீங்கள் தான் என் சிந்தனையில் இருந்தீர்கள்,  பல்கலைக்கம் போன போது எத்தனை பேர் பின்னால் திரிந்தார்கள், எவ்வளவு தொல்லை கொடுத்தார்கள் தெரியுமா,  அந்த நேரத்தில் எல்லாம் என் மனதில் ஒரே ஒரு எண்ணம் தான்,  நடக்கிறதோ இல்லையோ,  தேவமித்திரன் தான் என்னுடைய வாழ்க்கைத்துணை.....இல்லையோ,  தனியவே வாழ்ந்து முடிக்கிறது,  இப்படித்தான் நினைப்பேன்,  அம்மா ஆசைப்பட்டா என்றோ,  மாமி ஆசைப்பட்டா என்றோ நான் உங்கள் மீது விருப்பப்படவில்லை,  எனக்கு உங்களை நிறையவே பிடிக்கும்.... 

அதுவும் அந்த நாடகத்திலை கணவன் - மனைவியா நடிச்ச பிறகு....சின்ன வயசென்றாலும்  நீங்கள் எனக்கு மிகவும் நெருக்கமான உறவாக வேண்டும் என்கிற எண்ணம், அப்பவும் சரி,  இப்பவும் சரி,  அதை தவறென்று நான் நினைக்கவே இல்ல, தவிர புரட்சியாளர்களிடம் தான் உண்மையான அன்பும் காதலும் இருக்கும்,  எனக்கும் உங்கட கடமைகளிலை பங்கு இருக்குதானே,  நான் உங்களுக்கு துணையா நிப்பன்.... "


சொல்லமுடியாமல் திணறினேன். ...


"நீ துணையாக நிற்கமாட்டாய் என்று நான் நினைக்கவேயில்லை சமர்,  நிரந்தரமில்லாத என்னுடைய வாழ்க்கையிலை நீயும் வந்து துன்பப்படவேண்டாம் என்று தான்... எனக்கு ஏதாவது நடந்திட்டால்... " 


"வாயை மூடுங்கோ... ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்கள்...என்ன கதை இதெல்லாம்... இப்ப எல்லாருக்கும் வாழ்க்கை நிரந்தரமில்லைதான்... அது ஒரு விசயமே... எனக்கு நீங்கள் மட்டும் தான்.. இல்லாட்டி நான் இப்பிடியே வாழ்ந்திடுவன்.... "


"சரி.. சரி... அப்பிடி எல்லா செல்லாத சமர்... " என்றவர். 


என்னைத் தன்னோடு சேர்த்து அணைத்தபடி, 


"சரியடா...நாங்கள் கலியாணம் செய்வம்?" என்றார். 


மெல்ல நிமிர்ந்து அவருடைய கரங்களை இறுகப்பற்றிக்கொண்டேன். 


நான்கு விழிகளிலும் வைரம் போல நீர் முத்துகள் பளபளத்தன. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

தீ தொடரும்... 








 





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.