ஈரத்தீ (கோபிகை) - பாகம் 39!!
நாங்கள் வரும் போது, மாமா சாய்மனைக் கதிரையில் படுத்திருந்தார். அகரனும் இனியனும் பாமதி அக்கா வீட்டில் கிட்டிப்புள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
மாமா அந்தரப்பட்டு வீடு துப்பரவு செய்வார் என்பதால் நான் சொல்லிவிட்டு வரவில்லை..
என்னைக் கண்டதும் மாமாவின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி..
"வாம்மா... வா.. வா... ..." ஆர்ப்பரிப்போடு வரவேற்றார்.
நானும் விரைந்து சென்று அவருடைய கரங்களைப் பற்றிக் கொண்டேன்.
அவரை மெதுவாக அழைத்துச் சென்று அமரவைத்துவிட்டு,
"எப்பிடி இருக்கிறியள் மாமா?" என்றேன்.
"எனக்கென்னம்மா இருக்கிறன்... தேவா என்னை நல்லா பாத்துக் கொள்ளுறான், பாமதியும் பாவம், வடிவா சாப்பாடுகள் செய்து தாறது...
உவன் அகரன் பொடியன்... தாத்தா.. தாத்தா.. எண்டு சுத்திக் கொண்டு நிப்பான்... என்னை அங்கால இஞ்சால அசையவிடான், எல்லாத்தையும் காலடிக்கே கொண்டு வந்து வைச்சிருவான்...அதோடை பிள்ளையும் இருக்கிறாய்... பிறகென்ன எனக்கு" என்றார் பெருமிதமாக.
எனக்கு மனதில் பெரும் நெருடல், மாமாவுக்கு அருகில் இருந்து கடமைகள் செய்ய வேண்டிய எனது பொறுப்பை நான் நிராகரிப்பது போல தோன்றியது.
"பிள்ளை இரம்மா ...நான் கோப்பி போட்டுக்கொண்டு வாறன்" என்று எழப்போனார்.
"இருங்கோ மாமா... அதெல்லாம் நான் செய்ய மாட்டனே... இருங்கோ, நான் போட்டுக் கொண்டு வாறன் " என்று எழுந்தேன்.
"அதம்மாச்சி... அகரன் எனக்கு இப்பதான் போட்டுத் தந்தவன்... பிள்ளைக்குத்தான்... "
"மாமா.. எனக்கு இப்ப வேண்டாம், வர முதல் தான் சாப்பிட்டு வந்தனாங்கள், அவரும் வந்த பிறகு போடுவம்... இப்ப நான் வீட்டை ஒருக்கா கூட்டிப்போட்டு வாறன், நீங்கள் இருங்கோ" என்றேன்.
"ஏன் பிள்ளை, உனக்குச் சிரமம்?" என்றவரிடம்,
"எனக்கு என்ன சிரமம் மாமா.. வீடு கூட்டுறவு பெரிய வேலையே, அதொண்டும் இல்லை... இருங்கோ வாறன்" என்று விட்டு நான் உள்ளே செல்ல வண்ணமதியும் பின்னாலேயே வந்தாள்.
"வண்ணமதி.. நீ.. போய் அண்ணாக்களோடை விளையாடன்.. நான் கூட்டிப் போட்டு வாறன்... " என்றேன்.
"இல்லை அம்மா... அண்ணாக்கள் கிட்டிப்புள் விளையாடுகினம்... நான் பிறகு விளையாடுறன்.. கூட்டுவம் வாங்கோ... " என்று விட்டு முன்னால் நடந்தாள்.
முதலில் பெரிய அறையைத் துப்பரவாக்கி கூட்டினோம்... பெரியளவில் வீடு குப்பையாக இருக்கவில்லை...
எல்லாமே அங்கங்கே நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தது.
அடுத்ததாக தேவமித்திரனின் அறை இருந்தது.
கதவைப் பூட்டி, அருகில் இருந்த ஆணியில் திறப்பைத் தொங்கவிட்டிருந்தார். மாமாவிடம் சொல்லிவிட்டு திறக்கலாம் என நினைத்து வெளியே வந்தேன்,
அப்போது, பாமதி அக்கா வீட்டில் இருந்து ஓடி வந்த அகரன்,
"அம்மா... எப்ப வந்தனீங்கள்? " என்றதும்
இப்பதான்.. நான் பாத்தனான், பிள்ளை விளையாடிக் கொண்டிருந்தபடியால் நான் கூப்பிடேல்லை "என்றேன்.
"மாமா... அவரின்ரை கதவு பூட்டிக் கிடக்கு...திறப்பு மேல கொழுவிக்கிடக்கு, எடுத்து திறக்கட்டே?" என்று கேட்டேன்...
"ஓமோம்.. இதென்ன பிள்ளை, என்னட்டைக் கேட்டுக் கொண்டு நிக்கிறாய் நீ திறவனம்மா... " என்றார்.
இன்பக்குறுகுறுப்பு ஒன்று உடம்பில் ஊர்ந்தாலும் நான் எதுவும் பேசாமல் உள்ளே சென்று திறப்பை எடுத்துகதவைத் திறந்தேன்.
எப்போதும் அவரிடம் இருந்து வருகிற பிரத்தியேக வாசனை அறை முழுவதும் நிரம்பி இருந்தது.
முதல் முதல் இந்த வீட்டுக்கு வந்த போது அப்பாவுடன் நாங்கள் நால்வரும் பாமதி அக்காவும் இனியனும் என்று எல்லோருமாக நின்று எடுத்த படம் பெரிதாக்கப்பட்டு சுவரில் மாட்டப்பட்டிருந்தது.
அவருடைய ஆடைகள், தாங்கியில் அழகாகத் தொங்கவிடப்பட்டிருந்தன, முதிரை மரத்தாலான பெரிய அலமாரி, பூட்டப்பட்டிருந்தது. மரமேசையில் பூச்சாடி வைக்கப்பட்டு, யூமா வாசுகியின் மஞ்சள் வெயில் புத்தகம் வாசித்து முடிக்கப்பட்ட நிலையிலும் மார்க்கிம் கார்க்கியின் 'தாய் ' நாவல் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையிலும் அடையாளமிடப்பட்டு இருந்தது.
மேசையில் இருந்த இன்னொன்று என்னை ஆச்சரியப்படுத்தியது.
அது... எங்கள் இருவரினதும் புகைப்படங்களை அருகருகாக மேசையில் வைத்திருந்தார்.
நானும் அவரும் மாமாவும் அகரன் வண்ணமதியுமாக நின்ற படம் ஒன்றை மேசையில் இருந்த கண்ணாடிக்கு கீழே வைத்திருந்தார்.
இன்ப ஆச்சரியத்தில் நின்று கொண்டிருந்த நான், வண்ணமதி வெளியே சென்றதைக்கூட கவனிக்கவில்லை.
"எங்கள் வீட்டு மகாராணி, ராஜாவின் அரண்மனைக்கு விஜயம் செய்திருக்கிறாரோ?"
என்ற சத்தத்தில் அவசரமாகத் திரும்பினேன்.
முட்டிவிடும் தூரத்தில் நின்று கொண்டிருந்த தேவமித்திரனைக் கண்டதும் ஏதோ செய்தது. மனம் கனத்துவிட்டது போலவும் இலேசாகி விட்டது போலவும் வித்தியாசமான ஒரு மனநிலை என்னை ஆட்கொண்டது.
இதயம் படபடக்க முகத்தில் திடீரென ஒரு பொலிவு தோன்றியது போல உணர்ந்தேன். இதுவரை காலமும் இப்படி ஒரு அண்மை நிலை எங்களுக்குள் கிட்டவில்லை.
எண்ணங்கள் எங்கெங்கோ சிதறிப் பறக்க, சடாரென்று அவரைவிட்டு சற்று விலகி நின்றேன்.
"ஏய்... சமர்... இது எங்கட வீடு, நான் உன்னுடைய தேவமித்திரன், " பயப்பிடாதை என்றார்.
என்னை நிதானப்படுத்திக் கொண்டு, "பயம் எல்லாம் இல்லை, நீங்கள் திடீரென்று வந்ததும் கொஞ்சம் பதற்றமாகிவிட்டன்" என்றேன்.
"நம்பிவிட்டேன்" என்றார்.
"ஏன்... மாமாவீட்டில எனக்கென்ன பயம்?" என்றேன்.
"ஓ... மாமா வீடு, ,அப்ப நான் ஆராம்?" என்றார்.
"மாமான்ர மகன்தான்.." .என்றேன்.
" அவ்வளவு தான்... வேற உறவு ஒண்டும் இல்லையோ? "
"இன்னும் உறவாகேல்லை.... " என்றேன்.
"ஆகா... அது வேற இருக்கெல்லே... சரிசரி... எனக்கு விளங்கிட்டுது... " ஏன்றார்.
"என்ன விளங்கீட்டுது?"
"அதை நான் சொல்லமாட்டன்... நீயே கண்டுபிடி... "
" சொல்லுங்கோ... என்ன விளங்கீட்டுது " என்றேன் பிடிவாதமாக.
"தெரியும் தானே , முந்தி நீ இப்பிடி பிடிவாதம் பிடிக்கேக்க நான் காதிலே நல்லா கிள்ளுறனான்.... " சொல்லிவிட்டு கடகடவெனச் சிரித்தார்.
நான் பேசாமல் பார்த்துக் கொண்டே நின்றேன்.
சிறிது தூரம் சென்றதும் திரும்பிப் பார்த்து,
" ஒரு காதலனா நான் இன்னும் உன்னட்டை நடக்கத் தொடங்கேல்லை தானே, அதுதான் தெரியேல்லை... இனி விளங்கும்..." என்று சிரித்தபடியே சொல்லிட்டு கடகடவேன கிணற்றடிக்குச் செல்ல ஆயத்தமானார்.
ஏதேதோ உணர்வுகள் என்னை ஆக்கிரமித்தது.
நான் அப்படியே நின்று கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு
"சமர்.. வர்ணன்ரை அண்ணா வாறனெண்டவர், ஏதோ காணி அலுவலா கதைக்கிறதுக்கு... நான் குளிச்சிட்டு வாறன்... கூட்டிப் போட்டு தேத்தண்ணி போடுறியா.. இல்லை.. அகரன் பால் கொண்டு வந்திட்டான்... பால் கோப்பி போட்டுத்தா..என்ன..என்ரை வீட்டவந்து முதல் முதலா நீ போட்டுத்தாற கோப்பியைக்குடிக்க ஆசையா இருக்கு ." என்றுவிட்டு குளிக்கப்போய் விட, நானும் விரைவாக கூட்டி முடித்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தேன்.
தீ தொடரும்...
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை