ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு...!
மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி முதல் வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய வழிபாடு
இந்த வருடத்தில் வந்திருக்கக் கூடிய ஆடி முதல் வெள்ளிக்கிழமை(19-07-2024) அன்று மூன்று சிறப்புகளை கொண்டு வந்துள்ளது. முதல் சிறப்பு அம்பாளுக்குரிய ஆடி முதல் வெள்ளிக்கிழமை. அம்பாள் அவதரித்த நாள். இரண்டாவது சிறப்பு பிரதோஷம். சிவனையும் சக்தியையும் சேர்ந்து தரிசனம் செய்யக்கூடிய பாக்கியம் நமக்கு கிடைக்கும். மூன்றாவது சிறப்பு மூலம் நட்சத்திரம்.
அந்த அனுமனுக்கு உரிய நட்சத்திரமாக இது அமைந்துள்ளது. அனுமனுடைய 10 கரங்களில் ஒரு கரத்தில் அம்பாளது சூலாயுதமும் இருக்கும். கவனித்துப் பார்த்தால் உங்களுக்கு தெரியும். அந்த அம்பாளின் அனுகிரகம் பெற்ற கடவுள் அனுமன். அம்பாளிடம் இருந்து வரம் பெற இந்த நாளை நாம் தவறவிடவே கூடாது. ஆடி மாதம் வெள்ளிக்கிழமை என்றாலே பெண்கள் வழிபாடு செய்வதற்கு உரிய தினமாக சொல்லப்பட்டுள்ளது.
குறிப்பாக திருமணம் நடக்காத பெண்கள், திருமணம் நடந்தும் மாங்கல்ய தோஷம் இருப்பவர்கள் எல்லாம் இந்த ஆடி வெள்ளிக்கிழமை அன்று பின் சொல்லக்கூடிய வழிபாட்டை மேற்கொண்டாலே போதும். உங்கள் குடும்பம் சுபிட்சம் பெரும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும். திருமணம் ஆன பெண்கள் தீர்க்க சுமங்கலி வரத்தை பெறுவீர்கள். இதற்கு உண்டான வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
ஆடி வெள்ளி அம்பாள் வழிபாடு
ஆடி வெள்ளி அன்று அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து வாசல் கூட்டி கோலம் போட்டு, பூஜை அறையை அலங்காரம் செய்து கொள்ளுங்கள். முதலில் வீட்டில் விளக்கு ஏற்றி அம்பாளை வணங்கவும். சர்க்கரை பொங்கல் வடை நெய்வேதியம் செய்து கொள்ளலாம். உங்களுடைய வீட்டிற்கு மூன்று சுமங்கலி பெண்கள், அல்லது ஐந்து பெண்கள் இப்படி கூப்பிடுங்கள்.
அக்கம் பக்கம் வீட்டில் தெரிந்தவர்களை அழைத்தாலே போதும். வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் குங்குமப்பொட்டு கொடுத்து வரவேற்க வேண்டும். பிறகு அவர்களையும் அம்பாளை வழிபாடு செய்ய சொல்லுங்கள். நீங்கள் செய்த சர்க்கரை பொங்கலையும் வடையையும் பிரசாதமாக அவர்களுக்கு கொடுப்பது சிறப்பு. இதெல்லாம் நாம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் நமக்கெல்லாம் தெரியாத ஒரு விஷயத்தை இப்போது தெரிந்து கொள்வோமா.
அம்மனுக்கு உரிய ஒரு பிரசாதம் பானகம். அம்மனை குளிர வைக்கக்கூடிய தன்மை இந்த பானகத்திற்கு தான் உண்டு. ஆடி முதல் வெள்ளிக்கிழமை நீங்கள் செய்த பிரசாதத்தோடு, பானகமும் தயார் செய்து வையுங்கள். இந்த பானக பிரசாதத்தை உங்கள் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு, உங்கள் கையால் கொடுக்க வேண்டும். சின்ன டம்ளரில் 1/2 டம்ளர் ஒரு வாய் அளவு பானகத்தை கொடுத்தால் கூட போதும்.
ஆகவே இந்த பானகத்தை மிகக் குறைந்த அளவு, பெண்களுக்கு உங்கள் கையால் தானம் கொடுங்கள். ஒரு வாய் அவர்கள் குடித்தாலும் போதும் அந்த அம்மனுடைய மனது குளிரும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. பத்து சுமங்கலி பெண்களுக்கு பானகம் கொடுத்தாலும் தவறு கிடையாது. ஆனால் ஒரு சொட்டு பானகத்தை கூட கீழே வீணாக ஊற்றக்கூடாது.
வரக்கூடிய வெள்ளிக்கிழமை சுமங்கலி பெண்களுக்கு பானகம் தானமாக கொடுக்கும் போது அம்பாள் மனது குளிரும். மாங்கல்ய தோஷம் விலகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை வரும் வெள்ளிக்கிழமை செய்து பலன் அடையுங்கள்.
கருத்துகள் இல்லை