பஞ்சமுக ஆஞ்சநேயர்: அனுமனுக்கு ஐந்து முகங்கள் ஏன் தெரியுமா!
பஞ்சமுக ஆஞ்சநேயர்: குதிரை (ஹயக்ரீவர்), நரசிம்மம், கருடன், வானரம் (ஆஞ்சநேயர்), வராஹம் ஆகிய ஐந்து திருமுகங்களுடன் அருள்பாலிப்பவர்.
பஞ்சமுக ஆஞ்சநேயர்: மன நிம்மதி, தைரியம், பலம், பெரும் புகழ், புத்திக்கூர்மை, உடல் ஆரோக்கியம், நல்ல எண்ணங்கள், குடும்பத்தில் ஒற்றுமை, நல்லுறவு ஆகியவற்றுடன் சகல சௌபாக்கியங்களும் பெறவேண்டும் எனில், பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபடவேண்டும்.
குதிரை (ஹயக்ரீவர்), நரசிம்மம், கருடன், வானரம் (ஆஞ்சநேயர்), வராஹம் ஆகிய ஐந்து திருமுகங்களுடன் அருள்பாலிப்பவர் பஞ்சமுக ஆஞ்சநேயர். இப்படி, மகிமைமிகு ஐந்து திருமுகங்களுடன் அனுமன் தோன்றியதற்கான காரணத்தை விளக்கும் கதை இது:
பாதாள உலகின் வேந்தன் மயில்ராவணன். இவன், பிரம்மனைக் குறித்து தவம் செய்து அரிய வரங்கள் பெற்றவன்; மாயாஜாலங்கள் செய்வதில் நிபுணன். ராவணனின் கட்டளைக்கு இணங்க, ராம-லட்சுமணர்களை பாதாள லோகத்திலுள்ள காளிதேவிக்கு பலி கொடுப்பதாக சபதம் செய்து புறப்பட்டான்.
இதை விபீஷணனின் ஒற்றர்கள் மூலம் அறிந்த சுக்ரீவன், ராம- லட்சுமணரைப் பாது காக்கும்படி அனுமனிடம் கூறினார். அனுமன், ராம- லட்சுமணரை பர்ணசாலையின் உள்ளே அமர்த்தி, தன் வாலினால் பர்ணசாலையைச் சுற்றிலும் கோட்டை அமைத்து அதன்மீது அமர்ந்து காவல் புரிந்தார்.
ஆனால், மாயம் புரிவதில் வல்லவனான மயில்ராவணன், விபீஷணரின் உருவெடுத்து வந்து அனுமனிடம் அனுமதி பெற்று, வாலால் அமைக்கப்பட்ட கோட்டைக்குள் புகுந்தான். தனது மாய சக்தியால் ராம-லட்சுமணரைச் சிறிய பொம்மைகளாக்கி மறைத்துக் கொண்டு வெளியேறினான். பின்னர் பாதாள லோகம் வந்த மயில்ராவணன், ராம- லட்சுமணரை நிஜ உருவம் பெறச் செய்தபின் சிறை வைத்தான்.
சற்று நேரத்தில், ராம-லட்சுமணரைக் காணாது திகைத்தனர் வானர வீரர்கள். விபீஷணர் மயில்ராவணனின் மாய வேலையை அறிந்து எடுத்துரைத்தார். அனுமனிடம் மயில் ராவணனது இருப்பிடத்தையும் அவன் தம்பி மஹிராவணன் பற்றியும் எடுத்துச் சொன்னார் விபீஷணன். ஐந்து வண்டுகள் ஒரு பெட்டியில் இருக்கும் ரகசியத்தையும், அந்த வண்டுகளிடம் தான் மயில்ராவணனின் உயிர் இருப்பதையும் சொன்னார்.
பாதாள லோகம் விரைந்தார் ஆஞ்சநேயர், அங்கிருந்த காளிதேவி கோயிலுக்குள் நுழைந்து தேவியின் உருவத்துக்குப் பின்னால் மறைந்து கொண்டார். மயில்ராவணனும் மஹி ராவணனும் காளிக்கு பலி கொடுப்பதற்காக ராம- லட்சுமணரை அழைத்து வந்தனர். அப்போது, ‘‘மயில்ராவணா... உனது பக்திக்கு மெச்சினேன். நீ மஹிராவணனுடன் என் பலிகளை உள்ளே அனுப்பு. நீ வர வேண்டாம்!’’ என்று காளி போலவே குரல் கொடுத்தார் அனுமன்.
அதன்படி ராம- லட்சுமணருடன் மஹி ராவணன் கோயிலுக்குள் நுழைந்ததும் ஆஞ்ச நேயர் விஸ்வரூபம் எடுத்து அவனை அடித்துக் கொன்றார். பிறகு, தான் கொண்டு வந்திருந்த வில், அம்புகளை ராம- லட்சுமணர்களிடம் கொடுத்து மயில்ராவணனுடன் போர் செய்யும்படி வேண்டினார்.
நெடுநேரமாகியும், மஹிராவணன் திரும்ப வராததால் சந் தேகம் கொண்ட மயில்ராவணன் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். ராம- லட்சுமணர்களை தன் தோள்களில் அமரச் செய்து மயில்ராவணன் மீது அம்புகளைத் தொடுக்கச் செய்தார் அனுமன். மயில்ராவணன் மாயப் போர் புரிந்தான். போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வர எண்ணிய அனுமன், ராம- லட்சுமணரைக் கீழே இறக்கி விட்டார். அவர்களிடம் போரைத் தொடருமாறு கூறி, மயில்ராவணனின் உயிர் மூலமான வண்டுகளைத் தேடிப் புறப்பட்டார் அனுமன். விபீஷணர் கூறியபடி ஏழு கடல்கள் கடந்து, ஒரு தீவை அடைந்தார். அங்கு தன்னை எதிர்த்த அரக்கர்களை அழித்து, தடாகம் ஒன்றில் தாமரைப் பூவுக்குள் இருந்த விஷம் கக்கும் வண்டுகள் அடங்கிய பெட்டியை எடுத்துக் கொண்டு திரும்பினார்.
‘ஐந்து வண்டுகளையும் ஒரே நேரத்தில் கொன்றால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும்!’ என்று பிரம்மனிடம் வரம் வாங்கி இருந்தான் மயில்ராவணன். அப்படி முடியாவிட்டால், கொல்ல முயல்பவரே மடிய நேரிடும்! அசரீரி மூலம் இதையறிந்த அனுமன் வானரம், நரசிம்மம், கருடன், வராஹம், குதிரை முகங்க ளோடு விசித்திர உருவெடுத்தார்.
இதைக் கண்ட மயில் ராவணன் நிலை தடுமாறினான். அனுமன் அந்தப் பெட்டி யைத் திறந்து ஐந்து வண்டுகளையும், ஐந்து முகங்களின் வாயினால் ஒரே நேரத்தில் கடித்துத் துப்பினார். வண்டுகள் இறந்தன. மயில் ராவணன் பாதாளமே அதிரக் கீழே விழுந்து துடிதுடித்து இறந்தான்.
பிறகு ராம- லட்சுமணர்களை தோள்களில் தூக்கிக் கொண்ட ஆஞ்சநேயர் இலங்கையை அடைந்தார். வானர சேனைகள் மகிழ்ந்தன! பஞ்சமுக அனுமனை வழிபடுவதால், சிறப்பான பலன்கள் உண்டாகும். இவரின் ஒவ்வொரு திருமுகமும் திவ்ய பலன்களை அளிக்கவல்லது.
அனுமன் முகம்: கிழக்கு நோக்கியது. பாவங்களைப் போக்கி, தூய சிந்தனை யைத் தரும் இந்தத் திருமுகத்துக்கு வாழைப்பழமும் கடலையும் சமர்ப்பித்து வழிபடவேண்டும்.
நரசிம்ம முகம்: தெற்கு நோக்கியது. சத்ரு பயம் நீக்கி, வெற்றியைத் தரும். இந்த முகத்துக்குப் பானகமும் நீர்மோரும் நைவேத்தியம் செய்வது நலம்.
கருட முகம்: மேற்கு நோக்கியது. தீவினைகளையும் உடலில் உள்ள விஷத்தன்மையையும் அகற்றும். தேன் சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு.
வராக முகம்: வடக்கு நோக்கியது. கிரக தோஷங்களை நீக்கி, ஐஸ்வர்யம் அருளும். இவருக்குச் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்கவேண்டும்.
ஹயக்ரீவ முகம்: மேல்நோக்கிய இந்தத் திருமுகம் வாக்கு வன்மை, ஞானம், வெற்றி, நல்ல சந்ததி, முக்தி ஆகியவற்றை அருளும். அவல், சர்க்கரை, வெண்ணெய் நிவேதனம் செய்து வழிபடவேண்டும்.
கருத்துகள் இல்லை