ஈரத்தீ (கோபிகை) - பாகம் 41!!
பருத்திதுறையில் உள்ள மூக்கம் கடற்கரையில் நாங்கள் நால்வரும் அமர்ந்திருந்தோம்.
மேகவர்ணன் அண்ணா, பார்கவியுடன் கதைக்க வேண்டும் என்று சொன்னதால் தேவமித்திரனும் நானும், கூட வந்திருந்தோம்.
நேரம் 5 மணி என்றது கடிகாரம்.
தங்கப்பளிங்கென தகதகத்து வந்த சூரியன், மேற்கு வானத்தை அளந்து கொண்டு வீடு செல்ல ஆயத்மானான்.
வாரநாள் என்பதால் கடற்கரை மக்கள் கூட்டத்தால் நிறைந்து வழியவில்லை அன்று.
சூரியனின் பொன்னொளி அந்த இடத்தையே ஒருவித மஞ்சள் நிறமாக மாற்றிக் கொண்டிருந்தது.
பழுப்பு நிறக் கம்பளத்தை விரித்து வைத்தது போல பரந்து கிடந்தது மணல்.
வீட்டில் கூட சொல்லாமல்தான் நால்வரும் வந்திருந்தோம்.
பார்கவியை அரை நேரத்துடன் விடுப்பு எடுத்துக் கொண்டு வரச்சொல்லி, நெடுங்கேணியில் இருந்து நெல்லியடி வந்திறங்கியதும் காரில் அழைத்துக்கொண்டு செல்வதாகவே திட்டம். .
நான், தேவமித்திரனிடம் சொன்னேன், வீட்டில் சொல்லிப்போட்டுப் போவம் என்று.
அவர் அதற்கு,
"உனக்கென்ன பைத்தியமோ சமர், காதலிக்கிறதுக்கு யாரும் வீட்ட சொல்லிப்போட்டுப் போவாங்களோ?" என்று நக்கலாகக் கேட்க, நான் அமைதியாகி விட்டேன்.
"ஆ.... அது.. அண்ணாவும் பார்கவியும்.. கதைக்கத்தானே... " நான் இழுக்க, தேவமித்திரன் ஓரு பார்வை பார்த்தார்.
நான் தலையைக் குனிந்து கொண்டேன்.
"என்ன... வைத்தியர் அம்மாவுக்குப் பேச்சு வரவில்லை... " மீண்டும் அவர் சிரிக்க,
நான் அவரை முறைக்க முயன்று தோற்றுப் போனேன்.
வீடு என்கிற கட்டமைப்பில் வளராததாலோ என்னவோ, எனக்கு பெரியவர்களிடம் சொல்லி விட்டுச் செல்வதென்பது மிகப்பிடித்தமான ஓரு விசயமாக இருந்தது.
தேவமித்திரனின் மோட்டார் சைக்கிளை என்னுடைய வீட்டில் விட்டு விட்டு, ஒருவழியாக என்னுடைய காரிலேயே மூவரும் புறப்பட்டு, வந்து பார்கவியையும் ஏற்றிக்கொண்டோம்.
கடலோரத்தின் ஒரு முனையில் ஆட்கள் அரவம் அதிகமற்ற ஒரு இடத்தில் நால்வரும் அமர்ந்து கொண்டோம்.
நேர முள் நகர்ந்துகொண்டிருந்தது.
மணல் திட்டை கையால் கலைத்தபடி அமர்ந்திருந்த பார்கவியைப் பார்த்து,
" கதைக்க எண்டு வந்திட்டு, இப்பிடி மணலை அளைஞ்சு கொண்டிருந்தால் என்ன அர்த்தம்....? " என்று விட்டு,
மேகவர்ணன் அண்ணாவைப் பார்த்தேன்.
அவரும் பார்கவியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
"பார்கவி.. நிமிர்ந்து பார்த்து கதையுங்கோ... என்னை உங்களுக்கு முதலே தெரியும் தானே.... " என்று மேகவர்ணன் அண்ணா கேட்க நானும் தேவமித்திரனும் ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தோம்.
" என்ர பிரச்சாரத்திலைதான் ஆள் போராட்டத்துக்கு வந்தவா...." என்றார் மேகவர்ணன் அண்ணா.
"ஓ... அடடா... அப்பிடி ஒரு தொடர்பு இருக்கோ " என்று கேட்டேன்.
மெல்ல தலையை ஆட்டிய பாமதியைப் பார்த்து மூவரும் சிரித்தோம்.
"பார்கவி...வர்ணனுக்கு உன்னை கலியாணம் செய்ய விருப்பமாம்... உனக்குச் சம்மதமா"
என்று கேட்டார் தேவமித்திரன்.
சட்டென்று நிமிர்ந்து மேகவர்ணன் அண்ணாவைப் பார்த்த பார்கவி, சம்மதம் என்று தலையை ஆட்டியதும் மூவருக்கும் கட்டுக்கடங்காத மகிழ்ச்சி.
நான் பாமதியின் கைகளை இறுகப் பற்றியதும் என் தோளில் சாய்ந்து கொண்ட பார்கவி, சிறிது நேரம் எழுந்திருக்கவே இல்லை.
மேகவர்ணன் அண்ணாவுக்கும் கண்கள் கலங்கி விட்டது. மறுபுறமாக முகத்தை திருப்பியவர், கண்களைத் துடைத்துக் கொண்டார்.
நானும் தேவமித்திரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.
பத்து நிமிடங்கள் கடந்திருக்கும். இருவரும் இயல்புக்குத் திரும்பினர்.
முதலில் பேசத்தொடங்கிய பார்கவி,
" நான் வனவளத் திணைக்களத்திலை தான் வேலை..." என்றதும்
"அதுக்கென்ன.... வனத்திலை பணி செய்யிறது எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமே..." என்றார் மேகவர்ணன் அண்ணா.
"நான்.. அங்க.. அந்தக் கிராமத்திலை சில சமூகப்பணிகளைச் செய்யிறன்... என்ர சொந்த முயற்சியிலை இலவச கல்வி நிலையம் கூட நடத்திறன்... எனக்கு சில பொறுப்புகள் இருக்கும்... "
"அதுக்கென்ன... அப்பவும் சரி.. இப்பவும் சரி.. மக்களுக்காக வாழுவது எங்கட கடமைதானே... " என்றார் உடனே.
"பிறகென்ன பார்கவி...
நீ , போடு தோப்புக்கரணம் எண்டால், இவன் ,
எண்ணிக் கொள்...தேவி, என்று சொல்வான் போல.. உனக்குச் சோலியில்வை.... " என்றார் தேவமித்திரன்.
எனக்கு சிரிப்பு வந்து விட்டது. மேகவர்ணன் அண்ணாவைப் பார்க்க அவரும் சிரித்தார்.
சிறிது நேரத்தில் இயல்புக்கு வந்த மேகவர்ணன் அண்ணா,
ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டபடி பேசத் தொடங்கினார்.
"பார்கவி... நீங்களும் நானும் பதினெட்டிலையும் இருபதிலையும் இருக்கிற விடலைப்பருவத்தினர் இல்லை... எனக்கு முப்பத்தைஞ்சு கடந்திட்டுது, உங்களுக்கு முப்பது கடந்திட்டுது, இப்ப போய், நாங்கள் காதல் வானிலை பறக்கப்போறதில்லை...
நாங்கள் எதிர்பார்க்காத மாதிரி எங்கட போராட்டம் ஒரு முடிவை அடைஞ்சிட்டுது, அதுக்காக, முழுதுமே தோல்வி அடைஞ்சிட்டம் எண்டு இல்லை...
அடுத்த கட்டம் பற்றி யோசிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது, சரி.. தொழில், துறை இதுகள் அவசியம் தேவை, அதுக்குப் பிறகு படிச்சு, ஒரு உத்தியோகத்துக்கு தந்திட்டம், அடுத்தது, எதிர்கால சந்ததியை அறிவுபூர்வமாக உருவாக்க வேணும், தனித்தனியாக இருக்கிற நாங்கள் சேர்ந்து இயங்கினால் எங்களுக்கும் அது ஒரு பலம், மற்றது, மன ஆரோக்கியம்...
வயிற்றுக்கு செரிமான உணர்வு இருக்கிறது போல மனசுக்கும் இருக்கு,
நீங்கள் போராட்டத்தில் இணைஞ்ச உடனே, ஆரம்ப பயிற்சி முடிச்சிட்டு, முகமாலையிலை நிக்கேக்க, உங்கட விருப்பத்தைச் சொன்னீங்கள்....
அப்ப, நான் ஒரு பெரிய பொறுப்பிலை இருந்தனான், அதனாலை உங்கட விருப்பத்தை ஏற்க முடியேல்லை, அதோடை, நீங்கள் அப்ப தான் இணைஞ்ச புதுசு, நான் எப்பிடி சம்மதிக்க முடியும்?
அந்தக் கோபம் உங்களுக்குள்ள இருக்கு, எனக்குத் தெரியும்... அதனாலைதானே என்னைத் தெரியும் எண்டு ஒருத்தரிட்டையும் சொல்லேல்லை...
பார்கவி ...மிச்சம் இருக்கிற வாழ்க்கையை சேர்ந்து வாழுவம்...
எங்கட இனம் தனித்துவமடைய, அடுத்த சந்ததி வாழ, எங்களாலை முடிஞ்ச சமூகப் பணிகளைச் செய்வம்... "
மிச்சம் இருக்கிற நாட்களை உங்களோடு சேர்ந்து வாழ்ந்தால் என்னுடைய வாழ்க்கை ஆக்கபூர்வமானதாக இருக்கும் என்று நினைக்கிறன்... " என்றார்.
அவரையே பார்த்த பார்கவி,
"வீட்டுத்திட்டம் வந்துதான் அக்கா அந்த வீடு கட்டினவா...வங்கிக்கடனும் எடுத்துத்தான்..
அதனாலை... இனியன்.. .."
"இனியன்ரை படிப்பு நீங்கள் தான் பாக்கிறியள்... தெரியும்... அதோடை, இன்னொரு விஷயமும் தெரியும்.. " மேகவர்ணன் அண்ணா சொல்ல,
"எ... ன்.. ன" சற்றுத் தயங்கியபடியே கேட்ட பார்கவிக்கு,
" என்னை விரும்பினதாலைதான் இன்னும் கலியாணம் செய்யாமல் இருக்கிறியள்... "
சடாரென்று நிமிர்ந்து பார்த்த பார்கவியின் விழிகளில் நீர்ப்பிடிப்பு.
அவ்விடத்திலிருந்து எழுந்து கொண்ட, தேவமித்திரன் தலையை அசைத்து என்னையும் அழைத்ததும் நானும் எழுந்து கொள்ள இருவருமாக நடக்க ஆரம்பித்தோம்.
பார்கவி விம்மி அழுவதும் மேகவர்ணன் அண்ணா, பார்கவியின் கரங்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டு ஆறுதல் சொல்வதும் ஓரப்பார்வையில் தெரிந்தது.
தீ தொடரும்...
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை