பேட்டராப்: விமர்சனம்!



பிரபுதேவா ஏன் ’காதலன்’ படத்தில் நடித்தார்?

நடன இயக்குனராக அறிமுகமாகி, நாயகனாகி, பின்னர் இயக்குனராகி ரசிகர்களை மகிழ்வித்து வரும் கலைஞன் பிரபுதேவா. இடையில் சில காலம் நடிப்புக்கு ‘லீவ்’ விட்டவர், கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த படங்கள் வெளியாவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன அல்லது வந்த வேகம் தெரியாமல் தியேட்டரை விட்டு அகல்கின்றன. ஆனாலும், அவர் நடிக்கும் படங்கள் ஏதோ ஒரு வகையில் வழக்கத்திற்கு மாறானதொரு விஷயத்தைக் கொண்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

அதுவே, சரியான படம் அமைந்தால் பிரபுதேவாவின் ‘ரவுண்ட்’ மீண்டும் ஆரம்பிக்கும் என்ற எண்ணத்தை இன்றும் சில ரசிகர்களின் மனதில் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்திருக்கிற ‘பேட்டராப்’ திரைப்படம் அந்த எண்ணத்தைச் செயல்படுத்தியிருக்கிறதா?

கடுகளவு கதை!

சிறுவனாக இருக்கும் போதிருந்தே பிரபுதேவாவின் தீவிர ரசிகராக இருப்பவர் பாலசுப்பிரமணியம். பதின்ம வயதில் அவரைப் போல நடனமாடி, தான் படிக்கும் பள்ளியில் பிரபலமாக வலம் வருகிறார். அந்த வயதில் அவருக்கு ஒரு மாணவி மீது காதல் இருக்கிறது. அதே நேரத்தில், இன்னொரு மாணவியும் அவரைக் காதலிக்கிறார்.
காலங்கள் உருண்டோடுகின்றன.

சில ஆண்டுகள் கழித்து, ஒரு நடிகராக வேண்டுமென்ற வெறியுடன் கோடம்பாக்கத்தில் திரிகிறார் அதே பாலசுப்பிரமணியம் (பிரபுதேவா). ஆனால், ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாகவே திரையுலகில் இருந்து வருகிறார். அவரைத் தேடி வரும் நாயகன் வாய்ப்புகள் எல்லாம், ஏதோ ஒரு காரணத்தினால் நழுவிப் போகின்றன. அது தொடர்கதையானாலும், அவர் தனது நம்பிக்கையை ஒரு துளி கூட இழக்கவில்லை.

‘ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்’ என்றிருக்கும் பாலசுப்பிரமணியனுக்கு ‘அடிதடி’ என்றால் அல்வா சாப்பிடுவது போல.. ’இவர் இன்னார்’ என்று தெரியாமல், தன்னோடு மோதுபவர்களை முட்டித் தூக்குவது அவரது வழக்கம்.
அப்படித்தான் ஒருநாள் தன் மீது சேற்றை அடித்துவிட்டுப் போன காரை துரத்துகிறார் பாலசுப்பிரமணியன். அந்த காரை ஓட்டுவது ஜெனி (வேதிகா) எனும் பெண்.

ஆனால், வழியில் குறுக்கே வந்த மைக்கேல் (கலாபவன் சாஜன்) உடன் பாலாவின் பைக் மோத நேர்கிறது. அதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது. அப்போது, அவரையும் அவரது ஆட்களையும் அடித்து நொறுக்குகிறார் பாலா.
அப்புறமென்ன? அந்த மைக்கேலின் ஆட்கள் பாலாவைத் தேடி அலைகின்றனர்.

பாடகியாக இருந்துவரும் ஜெனியைத் திடீரென்று ஒருநாள் சந்திக்கிறார் பாலா. அவருடன் சேர்ந்து மேடையில் நடனமாடும் வாய்ப்பைப் பெறுகிறார். இருவருக்குள்ளும் நட்பு துளிர்க்கிறது. அந்த நேரத்தில், ஒரு நபர் ஜெனியைத் தீவிரமாகக் காதலிக்கிறார். அவரைக் கல்யாணம் செய்யவும் தயாராக இருக்கிறார்.

ஜெனியைக் காதலிக்கத் தொடங்கும் பாலாவுக்கு அந்த விவரங்கள் தெரிவதில்லை. ஆனாலும், ’நட்பைக் காதலாக குழப்பிக் கொள்கிறோமோ’ என்று அவரிடம் தனது காதலைச் சொல்லத் தயங்குகிறார் பாலா. அதேநேரத்தில், அவரை ஏற்கனவே தெரிந்தவர் போன்று செயல்படுகிறார் ஜெனி. தன்னுடைய குழுவில் சேருமாறு அழைக்கிறார். அதனைப் பாலா ஏற்பதாக இல்லை. காரணம், அவரது ‘ஹீரோ’ கனவு.

இந்த நிலையில், ஒரு படத்தில் இரண்டாவது கதாநாயகன் ஆகும் வாய்ப்பு பாலாவுக்குக் கிடைக்கிறது. ஆனால், படப்பிடிப்பில் நாயகனோடு ஒரு மோதல் ஏற்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, அதன் தயாரிப்பாளரை பாலா அடித்துவிடுகிறார். அது அவரது திரைவாழ்வுக்கே முற்றுப்புள்ளி ஆகிறது.

எந்த சினிமாவில் நாயகனாக வேண்டுமென்று நினைத்தாரோ, அதனை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழியில்லை எனும் நிலையில் தற்கொலைக்கு முயற்சிக்கிறார் பாலா. நண்பர்களோடு இருக்கும் நிலையிலேயே, அதனைச் செய்ய நினைக்கிறார்.

அந்த நேரத்தில்,  மீண்டும் ஜெனியைக் காண்கிறார் பாலா. அவரை எந்தச் சூழலில் காண்கிறார்? அதன்பின் பாலாவின் வாழ்க்கை என்னவானது? இந்தக் கதையில் பிரபுதேவாவின் சினிமா புகழுக்கும், அவரது ரசிகராக இருப்பதற்கும் என்ன வேலை என்று சொல்கிறது ‘பேட்ட ராப்’பின் மீதி.

மேற்சொன்ன கதையில் பிரபுதேவாவின் ரசிகராக பிரபுதேவாவே நடிக்கிறாரா என்ற கேள்வி எழலாம். அந்தக் கேள்வி எழுந்தால், நீங்களும் என்னைப் போல ஒரு சாதாரண ரசிகரே. ஏனென்றால், அதுவே இப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் கதை கடுகளவு தான். ஆனால், அதனை உருட்டித் திரட்டித் திரைக்கதை ஆக்கிய விதத்தில் கடுப்பின் உச்சத்தில் நம்மை நிற்க வைக்கிறது இந்த ‘பேட்ட ராப்’ படக்குழு.

மோசமான படத்தொகுப்பு!

ஒரு ‘ஜாலி எண்டர்டெயினர்’ படத்தில் தன்னை நாயகனாக ரசிகர்கள் பார்க்க வேண்டுமென்று பிரபுதேவா ஆசைப்பட்டதில் தவறில்லை. இந்த கதையை ஒப்புக்கொண்டதில் கூட தவறு ஏதுமில்லை. ஆனால், தன்னுடைய பாத்திர வார்ப்பு சரியில்லை என்று படப்பிடிப்பின்போது உணர்ந்த கணத்தில் திரைக்கதை ட்ரீட்மெண்டை மாற்ற அவர் முனைந்திருக்க வேண்டும். அது நிகழவில்லை என்பதால், ஒரு பிரபுதேவா ரசிகராக ஏமாற்றம் தருகிறது இப்படம்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடித்து வருகிறார் வேதிகா. இன்னும் அதே ‘சிக்’ உடலமைப்பைப் பேணுகிறார். ஆனாலும், அவருக்கு ஏற்ற பாத்திரம் கிடைக்காமல் ஏமாற்றத்தைச் சந்தித்து வருகிறார். இதிலும் அது நேர்ந்திருக்கிறது. விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக் ஆகியோர் இதில் பிரபுதேவாவின் நண்பர்களாக வருகின்றனர், போகின்றனர்.

மலையாள நடிகர் கலாபவன் சாஜனுக்குத் தமிழில் இப்படியொரு அறிமுகம் கிடைத்திருக்க வேண்டாம். அவரது நடிப்பு ஓகே என்றாலும், அதற்கேற்ற வரவேற்பைப் பெறும்விதமாக ‘ஸ்கிரிப்ட்’ அமையவில்லை. இன்னும் ஜெயபிரகாஷ், ரியாஸ்கான், மைம் கோபி, ராஜிவ் பிள்ளை உட்படப் பலர் இதில் ‘பரிதாபமாக’ தோன்றியிருக்கின்றனர்.

உச்சமாக, ஒரு பாடலுக்கு சன்னி லியோன் வந்து போயிருக்கிறார். படத்தைப் பார்த்தால், அவரே கடுப்பாகும் அளவுக்கு அவரது இருப்பு இதில் அமைந்திருக்கிறது. இது போக சுமார் ஒன்றரை டஜன் பேராவது இதில் தலைகாட்டியிருப்பார்கள். ஜித்து தாமோதரின் ஒளிப்பதிவு ‘பளிச்’ ரகம். ஒரு கமர்ஷியல் படம் என்கிற வகையில் திருப்தி தருகிறது அவரது கேமிரா பார்வை.

ஏ.ஆர்.மோகனின் கலை வடிவமைப்பில், பெரும்பாலான காட்சிகள் ஒரு மலையாளப் படம் பார்த்த உணர்வை ஊட்டுகின்றன. ஒருவேளை இரு மொழிகளில் இப்படம் எடுக்கப்பட்டு, பின்னர் தமிழில் வெளியிடப்பட்டிருக்கலாம். ஆனால், அந்த உழைப்பு படத்தோடு நம்மை ஒன்றவிடுவதில்லை.

டி.இமானின் இசையில் ’அதிரட்டும் டும்’, ‘ஆரத்தி ஆரத்தி’, இளவரசி’, ‘யூ ஆர் மை ஹீரோ’, ’வச்சி செய்யுதே’, ’போகாதே’, ‘டான்ஸ் டான்ஸ்’ என்று எல்லா பாடல்களுமே திரும்பத் திரும்பக் கேட்டால் பிடித்துப் போகும் ரகம். ஆனால், படத்தில் இடம்பெற்றிருக்கும் விதம் நம்மை எரிச்சலில் தள்ளுகிறது. ஏனென்றால், பாடலுக்கேற்ற சூழல் ஏதும் சரியாக வடிவமைக்கப்படவில்லை.

பாடல்களுக்கே இந்த கதி என்பதால் பின்னணி இசை பற்றித் தனியே விவரிக்க வேண்டியதில்லை.
படத்தில் சண்டைக்காட்சிகள், நடனக்காட்சிகள் வடிவமைப்பு எல்லாமே ஓகே தான். அவை சிறப்பாக இருந்தும் நம்மைக் கவராமல் போனதற்குக் காரணம், மோசமான திரைக்கதை.

டினில் பி.கே என்பவர் இதன் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார். ஏற்கனவே பார்த்த படங்கள் நினைவுக்கு வரும் வகையில் பல காட்சிகள் இருந்தும், அது போன்ற காட்சியாக்கம் திரையில் கிடைக்கப் பெறவில்லை. அந்த குறை எதனால், யாரால் நேர்ந்தது என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம்.

இயக்குனர் எஸ்.ஜே.சினுவின் திரைப்பார்வையில் மேற்சொன்ன கதை ஒரு படமாக உருவாகியிருந்தாலும், அது நம்மைத் திருப்திப்படுத்தும் வகையில் இல்லை. உண்மையைச் சொன்னால், அது அதிருப்தியின் உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறது. அனைத்துக்கும் மேலே, இந்த படத்தின் படத்தொகுப்பினைக் குறிப்பிட்டாக வேண்டும். நிஷாத் யூசுஃப் அதனைக் கையாண்டிருக்கிறார்.

பரிசோதனை முயற்சியாகச் சில படங்களில் பல காட்சிகளில் இருக்கும் ஷாட்களை முன்பின்னாக கலைத்துப்போட்டு பார்வையாளர்களைச் சோதிப்பார்களே, அதே உத்தி இதிலும் கையாளப்பட்டிருக்கிறது. ‘ஒரு மசாலா படத்தில் இலக்கிய உத்திகளா’ என்று வியப்படைய வைக்காமல், நம்மை ரொம்பவே படுத்தி எடுக்கிறது.

பிளாஷ்பேக் காட்சியொன்று படத்தில் வருகிறது. அதில்  யார் யாரைக் காதலிக்கிறார் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இத்தனைக்கும் அதனை மையமாக வைத்தே நாயகன், நாயகி பாத்திரங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

இந்தப் படமானது பிரபுதேவா, காதலன், பேட்டராப் பாடலைக் கொண்டாடும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டிருக்கிறது. அருமையான பாடல்கள் இமானிடம் இருந்து பெறப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப அம்சங்கள் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. அனைத்துக்கும் மேலே சிறந்த நடிப்புக்கலைஞர்கள் படத்தில் இருக்கின்றனர்.

அத்தனையும் இருந்தும், புரொஜெக்டர் ரூமை அடிக்கொரு முறை திரும்பிப் பார்த்து எரிச்சலடையும் வகையில் இருக்கிறது இந்த ‘பேட்டராப்’. இந்த படத்தைப் பார்த்தபிறகு, ‘பிரபுதேவா ஏன் காதலன் படத்தில் நடித்தார்’ என்று அவரது ரசிகர்கள் வெறுப்படையலாம். அப்படி வெறுப்படைந்த ஒரு ரசிகனின் விமர்சனமே இது..!


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.