தியாக தீபம் திலீபன் -ஏழாம் நாள் நினைவலைகள்!

  


இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடின…… நேற்றைய பேச்சுவார்த்ததையின் முடிவு என்னவாக இருக்கும்….? இந்தக் கேள்விதான் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக் கொண்டிருந்தது.காலை 10 மணிவரை எவ்வளவோ முயன்றும் அவர்கள் இருவரும் என் கண்களில் படவேயில்லை. ஆனால், திடீரென்று “இந்தியா ருடே” (India Tiday) பத்திரிகை நிருபரும் இந்திய துரதஷனின் (இந்தியத் தொலைக்காட்சி ஸ்தாகனம்) வீடியோப் படப்பிடிப்பாளரும், யோகியுடன் வந்து திலீபனைப் படம்பிடிக்கத் தொடங்கினர்.


“இந்தியா ருடே” நிருவர் என்னிடம் திலீபனின் உடல் நிலையைப்பற்றித் துருவித் துருவித் கேட்டுத் தெரிந்துகொண்டார். என்னால் முடிந்தவரை முதல் நாள் உண்ணாவிரத்திலிருந்து இன்றுவரை அவரின் உடலின் நிகழ்ந்த மாற்றங்கள் அனைத்தையும் விரிவாக எடுத்துக் கூறினேன். அவர்கள் சென்ற பின் யோகியை அழைத்து, என் மனதுக்குள் குடைந்துகொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டேவிட்டேன். அதற்கு யோகி கூறிய பதில் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.

‘இந்திய அமைதி காக்கும் படையின் மூத்த தளபதி ஒருவரும் பிரிகேடியர் ராகவன், எயர் கொமாண்டர் ஜெயக்ககுமார், கடற்படைத் தளபதி அபயசுந்தர் ஆகியோரும் வந்து பேசியதாகவும், உதவித்தூதுவர் வரவில்லை என்றும், திலீபனின் பிரச்சினையில் அவர்கள் ஓரு தீர்க்கமான முடிவை இதுவரை எடுக்கவில்லை” என்றும் யோகி கூறினார். அந்தப் பதிலைக் கேட்டால் அதை ஜீரணிக்க என் மனத்துக்கு வெகுநேரம் பிடித்தது. அந்தப் பேச்சுவார்த்தை பற்றிய முழு விபரத்தையும் யோகி திலீபனிடம் விளக்கிக் கூறி, என்ன செய்யலாம்…..? என்று கேட்டார்.

பேசச் சத்தியற்று, நடக்கச் சத்தியற்று துவண்டு கிடந்த அந்தக் கொடி, தன் விழிகளைத் திறந்து பார்த்துவிட்டு வழக்கம் போன்று தன் புன்னகையை உதிர்த்தது. “எந்த முடிவும்…. நல்ல முடிவாக இருக்க வேணும். ஜந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்தில் தர வேணும்…. இல்லையெண்டால்…. நான் உண்ணாவிரதத்தைக் கடைசி வரைக்கும் … கைவிடமாட்டன்.”

ஓவ்வொரு வார்தையாக கரகரத்த குரலில் வெளிவந்தது திலீபனின் பதில்.

 

படபடவென்று நடுங்கிய நடுங்கிய குரலில் மெதுவாகத் திடமாகத் திலீபன் கூறிமுடித்த போது யோகி மேடையில் இருக்கவில்லை.

யாழ்ப்பாணக் குடாநாடு விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் 1985 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வந்த பின்னர் அரசியல்ப் பிரிவுப் பொறுப்பாளராக திலீபன் இருந்து மிகச் சிக்கலான பிரச்சினைகளையெல்லாம் பொதுமக்கள் மத்தியில் தீர்த்து வைத்திருக்கின்றார். 1986 ஆம் ஆண்டு அச்சுவேலியில் ஏற்பட்ட ஒருசிறு பூசல் காரணமாக மினிபஸ்களின் சொந்தக்காரர்கள் ஒருவாரகாலமாக பஸ்களை ஓடவிடாமல் வழிமறிப்புப் போராட்டம் நடத்தியதால் மக்கள் மிகுந்ந துன்பப்பட்டனர்.

திலீபன் தனக்கேயுரிய புன்முறுவலுடன் அவர்களை அணுகி மிகவும் எளிமையாக அவர்களுடன் பேசி இரண்டு மணித்தியாலத்தில் பஸ்களை ஓடச் செய்தனர்.யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களுக்கு இடையே நடைபெறும் பூசல்கள் கடல் எல்லையிலே ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்படும் சில சிக்கலான பிரச்சினைகள்

பல்கலைக்கழகத்தில் ஏற்படும் சிக்கலான பிரச்சினைகள், கடை முதலாளிகள் – தொழிலாளர்களின் பிரச்சினைகள், மூட்டை தூக்குவோர், வண்டி ஓட்டுவோர் – இறைச்சிகாரர்கள், மாநகரசபை ஊழியர்கள், ஆசிரியர்கள், எழுதுவினைஞர்கள், டாக்டர்கள், தாதிமார், வைத்தியசாலை சிற்றூழியர்கள், வழக்கறிஞர்கள், லொறிச் சொந்தக்காரர்கள் இப்படிப் பலரகமானவர்களின் பிரச்சினைகளையெல்லாம் உடனுக்குடன் பேசிச் சமரசமாகத் தீர்த்து வைத்தவர் திலீபன்.


யாழ்ப்பாணக் கரையோரக் கிராமமான நாவாந்துறையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பலமான இனக்கலவரம் ஏற்பட்டது. கத்திகள், பொல்லுகள் கைக்குண்டுகள், துப்பாக்கிகள் எல்லாம் தாராளமாகப் பாவிக்கப்பட்டன. ஒரே நாளில் பலர் இருபக்கத்திலும் மாண்டனர். பலர் படுகாயமுற்றனர். திலீபன் தன்னந்தனியாக இரு சமூகத்தவர்களையும் இரவிரவாகச் சென்று சந்தித்தார். முடிவு? அடுத்த நாள் பெருமழை பெய்து ஓய்ந்தது போல் கலவரம் நின்றுவிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தமிழீழ மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்கு இருப்பதற்குக் காரணம் இவர்கள் சிங்கள இராணுவத்தின் அட்டூலியங்களிலிருந்து தம் உயிரையே அர்ப்பணித்து மக்களைக் காப்பாற்றுவது மட்டுமல்ல எந்தச் சிக்கலான சமூகப் பொருளாதாரப் பிரச்சினையானாலும் புலிகளின் அரசியல்ப் பிரிவுத் தலைவர் திலீபனால் அவை நிச்சியமாகத் தீர்க்கப்படும். என்ற உயர்ந்த நம்பிக்கையாலும் ஏற்பட்ட செல்வாக்குத்தான். அது.

மற்றவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இரவு பகலாக உறங்காது வேளா வேளைக்கு உணவின்றி அயராது உழைப்பதில் திலீபனுக்கு நிகர் திலீபன் தான். ஆவர் சுயமாக எப்போதாவது மினுக்கிய மடிப்புக் கலையாத ஆடைகள் அணிந்ததையும் நான் பார்த்ததில்லை. அவரிடம் இருப்பதெல்லாம் ஒரேயொரு நீளக்காற்சட்டை (ட்ரவுசர்) ஒரேயொரு சேர்ட் தான். அரசியல் விசயமாக ஊரெல்லாம் சுற்றி பல பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு காய்ந்த வயிற்றுடன் இரவு 12.00, 1.00 மணிக்கு தலைமை அலுவலகத்திற்கு வருவார். அந்த நள்ளிரவில் அழுக்கேறிய தன் உடைகளைக் களைந்து தோய்த்து காயப் போட்டுவிட்டே படுக்கச் செல்வார். பின்னர் அந்த இயந்திரம் அதிகாலையிலேயே தன் இயக்கத்தை மீண்டும் ஆரம்பித்து விடும்.

இப்படிப்பட்ட திலீபன் இன்று வாடி, வதங்கி தமிழினத்துக்காக தன்னையே அழித்துக் கொண்டிருக்கின்றாரே? ஏத்தனையே பேரின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்த இவரின் பிரச்சினையை, தமிழினத்தின் பிரச்சினையை யார் தீர்க்கப் போகின்றார்கள்.

சீலமுறு தமிழன் சிறப்பினை இழப்பதோ?

 

சிங்கள இனத்தவர் நம்மை மிதிப்பதோ?

 

கோலமுறு திரு நாடினிக் கொள்ளையர்….

 

விரித்த வலையினில் வீழ்ந்து அழிவதோ?

 

காலமெனும் கொடும் கயவனின் கையினால்..

 

கண்ணை இழந்து நாம் கவலையில் நலிவதோ?

 

நீலமணிக்கடல் நித்தமும் அழுவதோ..?

 

நாடு பெறும்வரை நம்மினம் தூங்குமோ…?

“ஈழமுரசு” பத்திரிகையில் வெளிவந்த இந்தக் கவிதையை ஒருநாள் திலீபன் வாசித்துவிட்டு என் தோள்களைத் தட்டிப் பாராட்டியதை இன்று எண்ணிப்பார்க்கின்றேன். வாரா வாரம் பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் எனது கவிதைகளை ஒரு தொகுப்பாக்கி வெளிவிட வேண்டும். என்ற திலீபனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்ற வாரம் தான் அவைகளை ஒன்று சேர்த்து பிரதிகள் எடுத்து ஒருபிரதியை ராஜனிடமும் மறு பிரதியை யோகியிடமும் கொடுத்திருந்தேன்.

தலைவர் பிரபாகரன் “முன்னுரை” எழுதவேண்டும் என்ற என் விருப்பத்தை திலீபனிடம் வெளியிட்ட போது அவரும் அதற்குச் சம்மதித்தார். உண்ணாவிரதம் முடிந்த பின் முதல் வேலையாகத் தலைவரிடம் சகல கவிதைகளையும் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

தலைவர் பிரபா ஒர் “இலக்கிய ரசிகன்” என்பது பலருக்குத் தெரியாது.

அந்த நெஞ்சுக் கூட்டிற்குள் நிறைந்து கிடக்கும் இராணுவத்திட்டங்களும், அரசியல்ப் புரட்சிக் கருத்துக்களும் – இலக்கியக் குவியல்களும் – மலை போன்ற தமிழுணர்வும்…. அப்பப்பா! ஏராளம் ஏராளம்.! அப்படிப்பட்ட ஒரு தலைவனின் வழிவந்த திலீபனின் ஏழாம் நாள் தியாகப் பயணம் தொடர்கின்றது.

(எட்டாம் நாள் தியாக தீபம் திலீபன் நினைவலைகள் தொடரும்.)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.