நாடுகளின் தேவை!!.


  "மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி" என்று அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் மக்களாட்சிக்கு வரையறை கூறியுள்ளார். 


மக்களாட்சியும் ஜனநாயகமும் இன்றைய பெரும்பான்மையான நாடுகளில் இல்லாத ஒன்றாகக் காணப்படுகின்றது. 


ஒற்றை ஆட்சி என்கிற தனிப்பாதையில் பயணித்து இலக்கை அடைந்து விடலாம் என சில நாடுகள் பகல் கனவு காண்கின்றன. 


அது ஒருபோதும் சாத்தியமில்லை.  


இவ்வாறு சீரற்ற சிந்தனை கொண்ட நாடுகளின் நிலைமை என்பதும் அந்த நாட்டுக் குடிகளின் நிலைமை என்பதும் அன்றாடம் அல்லலுறும் ஒன்றாகவே உள்ளது.

வேலையின்மையும் வறுமையும் தாராளமாகக் காணப்படும். 


சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கின்ற நாடுகள்  மக்களாட்சியை முன்னிறுத்தியதாக இருக்கவேண்டும். 

ஜனநாயகத்தை தார்மீகப் பொறுப்புடன் கொண்டிருக்க வேண்டும். 


இன்றைய காலத்தில் பல்லினக் கலாசாரங்கள் பெருகியிருக்கிறது.  பல்லின வாழ்வியல் பற்றிக் கொண்டிருக்கிறது.  


இத்தகையதொரு காலகட்டத்தில் செம்மையான வழிப்படுத்தல்களையும் சிறந்த நடைமுறையையும் கொண்ட நாடுகளே முன்னேற்றப்பாதையில் பயணிக்கின்றன.


ஏனைய நாடுகள் மேலெழவும் முடியாமல் அழிந்து புதையவும் முடியாமல் திரிசங்கு நிலையில் தத்தளிக்கின்றன. 


இனவாதத்தையும் உட்பூசலையும் கொண்டிருக்கிற நாடுகளால் அபிவிருத்தியையோ அமைதியையோ நிலைக்க வைக்க முடியாது. 


அந்த நாட்டு மக்கள்,  சுதந்திர உணர்வுடன் பயணிப்பதோ வன்முறையற்ற வாழ்க்கை வாழ்வதோ சாத்தியமில்லை.  இவ்வாறான நாடுகளில் ஆர்ப்பாட்டமும் போராட்டமும் தான் அதிகமாக இருக்கும். 


இலங்கை போன்ற நாடுகள் இதற்கு உதாரணமாகும். 


எந்த ஒரு நாடு,  மக்களை முதன்மைப்படுத்தி,  ஊழல்,  இலஞ்சம்,  கையூட்டு போன்றவற்றை இல்லாது ஒழித்து நல்லாட்சியை நல்குகிறதோ அந்த நாடு பொருளாதார வளர்ச்சியும் ஆளணி வளமும் கொண்டிருக்கும். 


அத்தகைய நாடுகள் பூமிப்பந்தில் அரிதாகவே உள்ளன. 


அரசியல் என்பது மக்களுக்காகச் செய்கின்ற சேவையாகும் என்கிறார் மேதகு. 


காலத்தைக் கையில் எடுத்து அவர் வழி,  பயணிப்போம். 


கோபிகை.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.