லப்பர் பந்து!!

 


நல்ல விஷயங்களை உள்ளடக்கிய ஆபத்தில்லாத வணிகப் படம் எப்படி இருக்க வேண்டும்?  என்பதற்கு இந்தப் படம் மிகச் சிறந்த உதாரணம்.


கிரிக்கெட் குறித்து தமிழில் வெளிவந்த படங்களில் இதுதான் முக்கியமான படம். 


சில மூர்க்கமான அரசியல்வாதிகள் மேடைகளின் வழியே கட்டமைத்த பிம்பத்தை  இந்தப் படம்  எவ்வித விஷேஷ மெனக்கெடலும் இன்றி சர்வ சாதாரணமாக உடைத்திருக்கிறது. ஒரே இடத்தில் நெருக்கமாய் வாழும் இரு  சமூகங்கள் இந்த அளவுக்கான மோதலும், ஏற்பும் கொண்டதாகவே இருக்க முடியும். ஒரு தரப்பை அப்பாவிகளாகவும், மற்றொரு தரப்பை மோசமான ஆதிக்க சக்திகளாகவும் காட்டாமல் உள்ளதை உள்ளபடியே பதிவு செய்திருக்கிறார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஹரீஷ் கல்யாணை விட இடைச்சாதியைச் சேரந்த தினேஷின் வாழ்நிலையும், பொருளாதாரச் சூழலும் கீழே இருக்கிறது . சூது நிறைந்த அரசியல்வாதிகளின் தூண்டுதலால்தான் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்த எளிய மக்கள் மோதிக் கொள்கின்றனர்.  திரைப்படம் உருவாக்கும் சித்திரம் அந்தக் கோணத்திலும்  நம்மை யோசிக்கத் தூண்டும்.


சமீப காலமாக எந்தப் படத்திலும் இவ்வளவு  இயல்பான வசனங்களைப் பார்த்த ஞாபகமில்லை.


" ராசா ராசாதாங்கிறது இருக்கட்டும். ஆனா இது தேவா" 


என்று பேருந்தில் ஆரம்பிக்கிற ரகளை 


" பொய்ச் சத்தியம் போகப் போக பழகிரும்  "


என்று கடைசி வரை தொடர்கிறது.


ஒரு நல்ல கலைஞன் சமூக முரண்களை கறுப்பு × வெள்ளைச் சித்திரமாக அணுகக் கூடாது. அதற்கு காளி வெங்கட் கதாபாத்திரம் மிக முக்கியமான உதாரணம்.எல்லா சமூகங்களிலும் பெரும்பகுதி மக்கள் ' காளி வெங்கட்டுகள்தான் " அவர்களை இரு தரப்பும் உசுப்பேற்றி, உசுப்பேற்றியே தாம் விரும்பும் எல்லைகளை நோக்கி நகர்த்தி விடுகின்றன. காளி வெங்கட்டை நோக்கி பாண்டி பேசும் அரசியல் வசனமும் உறுத்தலில்லாத கூர்மையுடன் எழுதப்பட்டிருக்கிறது.


சமீக காலமாக முற்போக்குப் படங்களில் பெண் கதாபாத்திரங்களை வலிந்து ஆண்தன்மை மிகுந்தவர்களாக காட்டுகின்றனர். அந்த கதாபாத்திரங்கள் நிலத்தில் கால் ஊன்றுவதே இல்லை. பத்துப் பேரை அடிக்கும் நாயக சாகசங்களின்  இன்னொரு வடிவம்தான் இவை. ஆனால் இந்தப் படத்தில்  ஐந்து பெண் பாத்திரங்களும் அவ்வளவு இயல்பாக இருக்கின்றன. நாயகியும், அவர்  அம்மாவும்  எனக்கு கண்மணி குணசேகரன் எழுதிய ' அஞ்சலை ' நாவலின் அஞ்சலையையும், நிலாவையும் நினைவூட்டினர் .உக்கிரமான அன்பும், பிடிவாதம் நிறைந்த சுயமாரிதையும், வாழ்தலின் மீதான தீராத ஆசையும் கொண்ட நடுநாட்டுக்காரிகள்.


விளிம்பில் இருக்கிற இரு சமூகங்களையும் பகையாளிகளாகக் காட்டாமலேயே 'சாதிய எதிர்ப்பை ' பதிவு செய்திருப்பதே படத்தின் பலம். கலப்புத் திருமணம் செய்த தம்பதிகளின் அன்னையர் இருவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சி அத்தனை யதார்த்தம்.


சாக்லேட் பாயான ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் வேறெருவராக மாற்றமடைந்திருக்கிறார்.


தினேஷ் வாழ்க்கையில் இதுதான் மிக முக்கியமான படம். வாழ்க்கையில் தோல்வியடைந்த ஒருவனின் அர்த்தமே இல்லாத ஈகோவையும்,   காதலையும், மகள் மீதான பாசத்தையும் மனிதர் அவ்வளவு அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரை விஜகாந்த் ரசிகராகக் காட்டிய இயக்குநரின் நுணுக்கமான அரசியல் கூருணர்வை வியந்தேன். இந்தப் படம்தான் விஜயகாந்துக்கான மகத்தான அஞ்சலி. எனக்குள் இருக்கிற டவுசர் போட்ட விஜயகாந்த் ரசிகன் படம் முழுவதும் எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தான்.படம் முடிந்ததில் இருந்து இந்த நொடி வரை " பொட்டு வச்ச தங்கக் குடம்.ஊருக்கு நீ மகுடம். நீ தங்கக் கட்டி. சிங்கக் குட்டி..அகுதா..அகுதா " என்கிற வரிகள் என் உதடுகளை விட்டுப் பிரியவேயில்லை.


 ரப்பர் பந்தில் கிரிக்கெட் விளையாடுகிற போது ஊரையே மிரட்டுகிற வீரர்கள் காரட் பந்தில் தடுமாறுவது , சில அதிரடி மட்டையாளர்களின் ஆஃப் சைடு வீக்னெஸ், மைதானத்திலேயே சட்டையை சுழற்றி ஆட்டிய கங்குலியை வியக்கும் ரசிக மனநிலை  ஆகிய  நுண் சித்திரங்கள் தொன்னூறுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரனாக என்னை ' அட ' போட வைத்தன.


மாட்டுக்கறி, கலப்புத் திருமணம், கிராமப் புற விளையாட்டுகளில் கலந்திருக்கும் சாதி அரசியல் உள்ளிட்ட பல விஷயங்கள் உண்மைக்கு மிக நெருக்கமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 


மெலோ டிராமாவுக்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தும் இயக்குநர் அதைத் தவிர்த்திருக்கிறார்.   'அழுத்தமான காட்சியென்று எதுவுமில்லை' .அது படத்தின் பலவீனம். ஆனால் 'ஒரு காட்சியில் கூட இயல்புத் தன்மை கெடவேயில்லை 'என்பது அந்தக் குறையை நம் கவனத்திற்கு வராமல் செய்து விடுகிறது.


சினிமாவோ, நாவலோ வெறுமனே கருத்துச் சொல்வதற்கானதல்ல. அதன் வழியாக ஒரு வாழ்க்கையை நம் மனதிற்கு நெருக்கமாக உணர வேண்டும். அதைச் செய்து விட்டு எதை வேண்டுமானாலும் பேசலாம். இந்தப் படத்தின் வெற்றி அதுதான்.


' தமிழரசன் பச்சைமுத்து ' நம்பிக்கை ஊட்டும் இயக்குநர் என்பதில் சந்தேகமில்லை.


மானசீகன் 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.