ஈரத்தீ (கோபிகை) - பாகம் 43!!
காலநதி சில மாதங்களைக் கடந்து ஓடியது. அகரனும் வண்ணமதியும் தங்கள் அழகான உலகத்தில் அன்போடு ஒட்டிக்கொண்டனர். கூடவே, இனியனும் சேர்ந்து கொள்ள, சொல்லவா வேண்டும்.
அவர்கள் அப்படி என்றால், பெரியவர்கள் தங்கள் மன ஆழத்தில் புதைந்து கிடந்த துயரங்களை ஓரளவு ஒதுக்கி வைத்து விட்டு, அன்றாட வாழ்க்கையோடு இசைந்து பயணித்தனர்.
அன்று, புதன்கிழமை, மேகவர்ணன் - பார்கவி இருவருக்கும் திருமண நிச்சயமும் திருமணப் பதிவும் செய்ய முடிவு செய்திருந்தனர்.
அதற்கான வேலைகளில் தான் நானும் தேவமித்திரனும் மும்முரமாக ஈடுபட்டிருந்தோம்.
பெரிதாக இல்லாமல் ஓரளவு நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் சொல்லி, நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த போதும், வேலைகளுக்கு குறைச்சல் இல்லை.
ஆரம்பம் சிறிதென்றாலும் அது பிறகு நீண்டுவிடுவது வழமை. ஆனால் இங்கு, அவ்வாறு நீளவில்லை என்றாலும் வேலைகள் முடிந்தபாடில்லை.
வெளிவேலைகளை தேவமித்திரனோடு சேர்ந்து நானும் பார்க்க, மற்ற ஏற்பாடுகளை பாமதி அக்காவும் அவர்களின் சிறியதாயாரும் கடையில் வேலை செய்கிற மற்றப் பெண்களோடு சேர்ந்து பார்த்துக் கொண்டனர்.
வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. பாமதி அக்காவின் சிறிய தாயாரான தவறாணி அம்மாதான் சமையல் பொறுப்பைப் பார்த்துக் கொண்டார்.
அவர்களின் வீட்டுக்கு பின்பக்கமாக மா., பலா என்று மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. .
கறுத்தக்கொழும்பான் மாமரத்துக்குக் கீழே தான் சமையல் நடந்து கொண்டிருந்தது. உறவுக்கார ஆண்கள் சிலரும் பாமதி அக்காவின் கமநல கடை உறவுகளுமாக சமையலைக் கவனிக்க மற்றவர்கள் எல்லாவற்றையும் வெட்டி வெட்டிக் கொடுத்தனர்.
மாமரக்காற்று சில்லென்று வீசி, உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தந்து சென்றிருந்தது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையாகச் செய்ய மளமளவெனச் சமையல் நடந்தது.
'ஆடம்பரமாக எதையும் செய்யக்கூடாது ' என்கிற பார்கவியின் கண்டிப்பான வேண்டுகோளும்
'எளிமையான முறையில் செய்தால் போதும்' என்கிற மேகவர்ணனின் வார்த்தைகளுமாக கட்டிப் போட்டதில் பெரியளவில் எந்த ஏற்பாடும் செய்யவில்லை பாமதி அக்கா.
நேரம் காலை பத்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
அறையில் பார்கவியின் ஒரு சில தோழியரோடு சேர்ந்து, பார்கவிக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் சமர்க்கனி.
"கனக்க வேண்டாம்... கனக்க வேண்டாம் ..." என்று தடை சொல்லிக் கொண்டிருந்தாள் பார்கவி.
எப்போதும் எளிமையாக இருக்கும் பார்கவிக்கு ஆடம்பரமோ அலங்காரமோ பிடிப்பதில்லை.
தோழிகளின் தொல்லையால் என்னை நிமிர்ந்து பார்க்க, "ஏதாவது செய்யுங்கோ " என்பது போல இருந்தது அந்தப் பார்வை. .
அவளுடைய நிலைமையைப் புரிந்து கொண்ட சமர்க்கனி, உடனே "அண்ணாவுக்கு அதிகமான அலங்காரம் பிடிக்காது, அவருக்குப் பிடிச்ச மாதிரி எளிமையான அலங்காரம் போதும் " என்றாள்.
பார்கவியின் தோழிகளும் " சரிசரி... அப்படியென்றால் மெலிதான அலங்காரமே செய்வம்.... " என்றனர்.
நன்றியோடு பார்த்த, பார்கவியிடம், கண்களைச் சிமிட்டி புன்னகை புரிந்தேன்.
"ஏய்... கவி, பேசாமல் முதல்ல வைத்தியரம்மாவைச் கையுக்குள்ள போடு, பிறகு உன்ர அவர் தன்ரபாட்டிலை.... " தாழி ஒருத்தி சொல்ல, மற்றவர்கள் கலீரென்று சிரித்தனர்.
நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
மணித்துளிகள் நகர்ந்தன.
"தேவா.... பதிவாளருக்கு ஏடுத்துக் கேட்டனியே... ஐயா... "
பாமதி அக்கா கேட்கிற சத்தம் கேட்டது.
" ஓமக்கா... இப்பதான் எடுத்தனான்... இன்னும் சிறிது நேரத்தில் வந்திடுவாவாம்..." தேவமித்திரனின் பதிலும் காற்றோடு கலந்து அறைக்குள் வந்தது.
அன்றையதினம், முதியோர் இல்லம் ஒன்றுக்கும் ஆதரவற்றோர் இல்லம் ஒன்றுக்கும் தன்னுடைய செலவில் மேகவர்ணன் உணவு ஏற்பாடு செய்திருக்க, பார்கவி, தான் பொறுப்பேற்று நடத்தும் இலவச கல்வி நிலைய மாணவர்களுக்கு, மதிய உணவும் கற்றல் உபகரணங்கள் வழங்கவுமாக இருவரும் ஏற்பாடு செய்திருந்தனர்.
சிறிது நேரத்தில் மேகவர்ணன், அண்ணன், அண்ணன் மகள், இன்னும் ஒரு சில உறவினர்கள் என சிறு கூட்டமாக வந்து சேர்ந்தனர்.
நேரம் பதினொன்றைக் கடக்கும் போது , பதிவாளரது மகிழுந்து வந்து நிற்கவும் நானும் வண்ணமதியுடன் வந்து சேரவும் சரியாக இருந்தது.
கூச்சலும் கும்மாளமுமாக விளையாடடிய சிறார்கள் அமைதியாக வந்து கதிரைகளில் அமர்ந்தனர்.
வண்ணமதிக்கு வகுப்பு இருந்ததால் தான் நான் சென்று அழைத்து வருவதாகக் கூறிவிட்டுச் சென்றிருந்தேன்.
தான் சென்று அழைத்து வருவதாக தேவமித்திரன் கூறிய போதும், நான் தான் மறுத்து விட்டேன்.
தானும் அப்படியே வீட்டிற்குச் சென்று குளித்து உடைமாற்றி வருவதாகச் சொன்ன போது, .
"உடுப்புகளைக் கொண்டு வந்திருக்கலாமே... " மாமா கேட்டார் தான்.
,
"நான் கொண்டு வரேல்லை மாமா... " என்று சங்கடமாகக் கூறிவிட்டுப் போய் விட்டேன்.
ஏனோ, தேவமித்திரனின் வீட்டில் குளித்து உடை மாற்றுவது என்பது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
பெண்கள் விடுதி, பெண்களோடு வாழ்க்கை என்று வாழ்ந்து பழகிவிட்டதாலோ என்னவோ, இன்னும் ஆண் உறவுகளோடு ஒட்டிப் பழகுவது ஒருவித கூச்சத்தையே தந்தது.
நான் அவசரமாக வந்து சேரவும், தேவமித்திரனின் பார்வை, என்னைத்தான் துளைத்தது.
எதிரே வந்தவரை நிமிர்ந்து பார்த்தேன்.
ஊதா நிறச்சேட்டு, அதே கரை வைத்த வேட்டி, கறுப்பு நிறத்தில் சற்று விலை உயர்ந்த மணிக்கூடு என எளிமையாகவும் எடுப்பாகவும் இருந்தது அவருடைய தோற்றம்.
என்னையும் ஆழமாகவே பார்த்தார். இன்று தான் என்னை முதல்முதலாகச் சேலை கட்டி அவர் பார்க்கிறார்.
முதலில் வியந்து பிறகு மெச்சுதலாக விரிந்தது பார்வை.
சிவப்பேறிய என் கன்னங்களை மறைக்க, சட்டெனத் திரும்பி வண்ணமதியின் கைகளைப் பிடித்துக் கொண்டேன்.
விறுவிறுவென நான் உள்ளே நடக்க, பின்னாலேயே துரத்தியது பார்வை.
எனக்கு, தங்கள் மீது ஏதோ ஒரு தயக்கம் இருப்பது தேவமித்திரனுக்குப் புரிந்தது போல இருந்தது அவருடைய பார்வை.
அதன் பிறகு நேரம் இறக்கை கட்டிக்கொண்டது.
மளமளவென பதிவுத்திருமணம் நடக்கத்தொடங்க, நாங்களும் அதில் மூழ்கிப் போனோம்.
மதியப் பொழுது, நல்ல வெயில், பதிவாளர் சென்றுவிட, சாப்பாட்டு ஆயத்தங்கள் செய்யத் தொடங்கினோம்.
அப்போது, சீலன் அண்ணாவின் ஒன்றரை வயது மகன் அழத்தொடங்கிவிட்டான்..
என்ன செய்தும் அவனைச் சமாதானப்படுத்த முடியவில்லை. முன்னாலேயே வராமல், நின்று கொண்டிருந்த, பாமதி அக்கா, குழந்தையின் அழுகுரல் கேட்டு, ஓடிவந்து விட்டா.
அவவுக்கும் சின்ன மகன் முள்ளிவாய்க்கால் மண்ணில் குருதி கொப்பளிக்க மரணித்திருந்தான்.
கையில் வைத்து, ஆட்டிக்கொண்டிருந்த என்னிடமிருந்து, குழந்தையை வாங்கிய பாமதி அக்கா, அவனைத் தோள்மீதுபோட்டு தன்பாட்டில் தாலாட்டத் தொடங்கிவிட்டா.
நாங்கள் எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்க, அவனும் அவவின் தோளில் அமைதியாக உறங்கத் தொடங்கிவிட்டான்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை