66 ஓட்டங்களால் வென்றது நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா!


 ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஒன்பதாவது மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் பலசாலிகளுக்கு இடையிலான போட்டி என வருணிக்கப்பட்ட ஏ குழு போட்டியில் நியூஸிலாந்தை 60 ஓட்டங்களால் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது.

அப் போட்டியில் நியூஸிலாந்தை 88 ஒட்டங்களுக்கு கட்டுப்படுத்திய அவுஸ்திரேலியா, இந்த வெற்றி மூலம் தானே பலசாலி என்பதை உறுதிப்படுத்தியது.

பெத் மூனி, எலிஸ் பெரி ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்களும் மெகான் ஷுட், அனாபெல் சதலண்ட், சொஃபி மொலினொக்ஸ் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் அவுஸ்திரேலியாவை இலகுவாக வெற்றி அடையச் செய்தன.

இந்த வெற்றியுடன்  ஏ குழுவில் முதலாம் இடத்தை அடைந்துள்ள அவுஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான தனது வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது.

இலங்கையை தனது முதல் போட்டியில் வெற்றிகொண்ட  அவுஸ்திரேலியா தனது எஞ்சிய இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகளை சந்திக்கவுள்ளது.

ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (08) இரவு நடைபெற்ற அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது.

நியூஸிலாந்து சார்பாக அமேலி கேர் திறமையாக பந்துவீசி 4 ஓவர்களில் 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தியபோதிலும் அவுஸ்திரேலியா ஒரளவு கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.

பெத் மூனி, எலிஸ் பெரி ஆகிய இருவரும் வேகமாக ஓட்டங்களைக் குவித்து அவுஸ்திரேலியாவைப் பலப்படுத்தினர்.

மூனி 32 பந்துகளில் 40 ஓட்டங்களையும் எலிஸ் பெரி 24 பந்துகளில் 30 ஓட்டங்களையும் பெற்றனர். அத்துடன் அவர்கள் இருவரும் 2ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அவர்கள் இருவரை விட அணித் தலைவி அலிசா ஹீலி 26 ஓட்டங்களையும் ஃபோப் லிச்பீல்ட் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அமேலிய கேரை விட ப்றூக் ஹாலிடே 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரோஸ்மேரி மாய்ர் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

149 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஆரம்ப வீராங்கனை ஜோர்ஜியா ப்லிம்மர் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபோது மொத்த எண்ணிக்கை 7 ஓட்டங்களாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து சுஸி பேட்ஸ் (20), அமேலியா கேர் (29) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்க்க முயற்சித்தனர்.

பத்து ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 54 ஓட்டங்களைப் பெற்றிருந்த நியூஸிலாந்து ஓரளவு பலமான நிலையில் இருந்தது.

ஆனால், அதன் பின்னர் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 9 விக்கெட்களை இழந்த நியூஸிலாந்து படுதோல்வி அடைந்தது.

மத்திய வரிசையில் லீ தஹுஹு (11) மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.

பந்துவீச்சில் மெகான் ஷுட் 3 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அனாபெல் சதலண்ட் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையம் சொஃபி மொலினொக்ஸ் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.