ஒரு கடிதம்!!

 


வணக்கம் சமன் அய்யா,


உங்களுக்கும் ஒரு கடிதம் எழுத வருமென்று நினைக்கவேயில்லை.காலம்தான் எவ்வளவு விசித்திரமானது.


எனது இருபத்தைந்து மற்றும் முப்பது வயது கால கட்டத்தில் நான் உங்கள் தொழிற்சங்கத்தில் தீவிர உறுப்பினர்.என்னை அந்நாட்களில் கவர்ந்த ஒரு தலைவர் இருந்தார்.அதற்கு பிறகு உங்களை மிகவும் பிடித்து போனது.கொழும்பு நகரத்தில் நடந்த ஊர்வலங்கள் மற்றும் தொழிற்சங்க வகுப்புக்களில் ஆர்வத்துடன் வருவது உங்களோடு பேசணும் என்பதற்காகவே.அவ்வளவு அபிமானமல்ல பேரபிமானம்.


நீங்கள் அந்த நாட்களில் சிறந்த மனிதநேயவாதி மற்றும் சனநாயகவாதி.என்ன நடந்தாலும் நம்ம சமன் அய்யா இருக்கிறார் என்ற தைரியம் இருந்தது. எத்தனையோ தடைகளின் மத்தியிலும் அரச தாதியர் சங்கத்தை இலங்கையின் முன்னணி தாதியர் சங்கமாக வளர்த்தெடுத்தீர்கள்.இளைய தாதியர்கள் அதிகமதிகமாக உங்கள் சங்கத்தில் உறுப்பினராயினர்.


பட்டதாரி தாதியர்களை அரச சேவைக்குள் உள் வாங்கிய உங்களை வரலாறு மறக்கப்போவதில்லை.இதையும் விட எனது தாயின் இழப்பில் துயரமுற்றிருந்த காலத்தில் உங்களின் ஆறுதல் வார்த்தைகளை மறக்க முடியாது. அப்படி ஒரு நெருக்கம்.அதெல்லாம் ஒரு காலம் சமன் அய்யா.


வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இல்லை. எனது நாற்பதுகளில் இன்னோர் உலகில் நான் நுழைகிறேன்.எனது தீவிர வாசிப்பு ,எல்லாவற்றின் மீதும் மறுவிசாரணையை கோரியது.அப்போதுதான் நான் தலைவர்களை கொண்டாடும் மனநிலையிலிருந்து வெளியேறி விடுகிறேன்.முதலாவது விருப்புக்குரிய தலைவர் மீதும் நான் மறுவாசிப்பை செய்து தனிப்பட்ட தீர்மானங்கள் கொண்டு வந்த அவலங்களையும் உணர்கிறேன்.


இந்த நிலையில்தான் உங்கள் மீதான மறுவாசிப்புக்களையும் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது. தலைவர்களை கொண்டாடுவதை விடவும் தாதியர்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டிய தேவையை நண்பர்களிடமும் கூறுகிறேன். சிலர் ஏற்றுக்கொண்டாலும் உங்கள் மீதான அபிமானம் அவர்களை மௌனிகளாக்கி விடுகிறது.


ஆனாலும் தனிப்பட்ட ரீதியில் நான் தங்களில் இருந்து தூரமாகி போனேன். ஏனெனில் ஒரு அரசியல் கட்சியின் பிரதிநிதியாகிய நீங்கள் எப்படி தொழிற்சங்க ரீதியாக நேர்மையாக செயற்பட முடியும் என்பதே என் கேள்வி?இதன் பின்பே நோயாளர்களை பணயம் வைத்து சடுகுடு ஆடும் தொழிற்சங்க நடவடிக்கைகளை வெறுக்க ஆரம்பித்தேன். அப்படி கலந்து கொண்டாலும் மலத்தின் மேல் நிற்பது போல அசூசை உணர்வு எனக்குள்ளிருந்தது.


இப்போது கிட்டத்தட்ட இருபத்து மூன்று வருடங்களை எனது சேவையில் கடந்த பிறகு திரும்பி பார்க்கிறேன். எனது தொழிலில் பெரிதாக ஒன்றுமே மாறியிருக்கவில்லை.ஆனால் எங்கள் பலத்தை அடித்தளமாக கொண்டு எழும்பிய நீங்கள் எங்கோ உயரத்தில்.


கடைசி ஆட்சியில் சனாதிபதிக்கான தொழிற்சங்க பணிப்பாளர் என்றோர் பதவியில் இருந்தீர்கள். நாங்களும் அரசியல் தெரிந்தவர்கள் தான். இவ்வளவு காலமும் இல்லாத இந்த பதவி உங்களுக்காக உருவாக்கப்பட்டது போல இருந்தது. கடைசியில் வாகன ஊழல் பட்டியலிலும் நீங்கள்.


சமன் அய்யா, உங்களிடமிருந்து நான் விலகி போனதன் நியாயங்களை இப்போது காலம் ஆமோதிக்கிறது.ஆச்சரியம்தான்.


சமன் அய்யா,அறம் என்றோர் விடயம் எங்கள் மொழியில் இருக்கிறது. அது பிழைத்தால் பிறகு அப்படி வாழ்வதும் வாழ்வல்ல.


எத்தனையோ நம்பிக்கைகளுடன் உங்கள் பின்னே அணிதிரண்ட தாதியர்கள் இன்னமும் நட்டாற்றில்தான்.


எனது ஒரு காலத்தைய தலைவர் என்ற வகையில், உங்களை பெரிதாக என்னால் திட்டவும் முடியவில்லை.


ஆனாலும் பட்டறிவு என்பது மிகப்பெரிய அனுபவம் அய்யா.


கடைசியில் ஒன்றை மட்டும் கூறுகிறேன். நல்ல தொழிற்சங்கவாதி என்பவன் ஆசிரியர் சங்கத்தின் தோழர் ஜோசப் ஸ்டாலின் போன்றும், நல்ல  அரசியல்வாதி என்பவன் ஜேவிபியின் தோழர் ரில்வின் சில்வா போன்றும் இருந்தாலே போதுமானது.


நன்றி.


முகநூல்  -  லலிதகோபன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.