உங்களுக்கும் இந்த அனுபவம் உண்டா…
நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த காண்போரைக் கவரும் அழகிய கிராமம் எங்கள் தீவு. பள்ளி விடுமுறை என்றாலே மகிழ்ச்சிக்கு எல்லை ஏது? பின்னால் தபால் பெட்டி உள்ள கால்சட்டை அது. எப்போ வேணுமென்றாலும் கழன்று விழலாம் அந்த மானத்தைக் காக்க ஒரு அரைஞாண் கயிறு உதவி செய்யும். ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் விளையாட ஆரம்பித்தால் சாப்பிட மட்டுமே வீட்டுக்குப் போவோம்.
ஒத்தையடிப் பாதையிலே காரக்காய் மற்றும் ஈச்சங்காய் பறிக்கப் போவோம். நறுக்கென நெருஞ்சிமுள் காலில் குத்த வலியுடன் அங்கேயே உக்காருவன். முன்னாடி நடந்து போன தோழன் இருடா இதோ வரேன்னு ஓடி வந்து கழிசானில் குத்தியிருக்கும் ஊசியை எடுத்து என் காலை தன் மடியிலே வைப்பான். முள் சரியா தெரியலை உடனே எச்சிலை தடவிப் பார்த்து முள்ளை எடுத்துவிடுவான். வீதியோரம் இருக்கும் வெடிபரவையைப் பிடுங்கி எச்சில் இட்டு அடுத்தவர் தலையில் வெடிக்க வைப்போம். கருக்கால் ஈச்சங்கொத்தை வெட்டி அங்கே பங்கு வைத்து சாப்பிடுவோம்.
எமது கிராமத்தில் நொறுக்குத்தீனி மருந்துக்குக் கூடக் கிடைக்காது. ஆனால் உடலுக்குத் தீங்கு தராத காய்களும் கனிகளும் சாப்பிடக் கிடைத்துக் கொண்டே இருக்கும். பனம்பழத்தினை சுவைத்துக்கொண்டே போனால் இருந்த பசி இடம் தெரியாமல் பறந்துவிடும். வழிநெடுக கிடைக்கும் காய்களையும் கனிகளையும் கால்சட்டையில் தேய்த்து விட்டு சாப்பிடுவோம். இலந்தைப் பழம் கொவ்வைப்பழம் தேனாக இனிக்கும். அணில் கடித்துவிட்டுப் போடும் தேக்கம்(கத்தாப்பு) பழத்தையும் கிளி கொத்திய கோணற்புளியம் பழத்தையும் மண்ணை ஊதிவிட்டுத் தின்போம். புளியம்பூ, பிஞ்சு, புளியம் பழம் சுவையோ தனிரகம. அதன் கொட்டையை சுட்டுத் தின்போம். முளைத்த பனங்கொட்டையை வெட்டி அதன் ஒவ்வொரு பாதியையும் நண்பர்களாக உண்பதில் அலாதியான சுகம் உண்டு. நாகதாளிப்பழம் மற்றும் பனங்கிழங்கு சுவை அபாரமானது. இவையெல்லாம் அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும் நண்பா.
அந்த பருவத்தில் தினம் செருப்பில்லாமல் பல மைல்கள் நடந்து நடந்து சென்றாலும் அலுப்பே தட்டியதில்லை. ஆடைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை ஆண்பெண் பாகுபாடில்லை காசுக்கு அலைந்ததில்லை பகுர்ந்துண்ண மறந்ததில்லை காமம் கண்ணை மறைத்ததில்லை .எதிலும் போட்டி பொறாமை இல்லாத துள்ளித் திரிந்த அந்தப் பொற்காலம் என் உடலில் உள்ள கடைசி மூச்சுவரை கலந்திருக்கும்.
துள்ளித்திரிந்த காலங்களை மறக்கமுடியுமா நட்புக்களே…
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை