ஈரத்தீ ( கோபிகை) - பாகம் 44!!


அந்திச் சூரியனின் அழகுக் கதிர்கள் மேக மங்கையைத் தழுவியபடி இருந்தது. அன்றைய பரபரப்பு மெல்ல அடங்கிப்போய் அனைவரும் சற்று ஆசுவாசமாக அமர்ந்திருந்தனர். 


சின்னவர்கள் ஒன்றுகூடி, கலவாங்கோடு விளையாடிக் கொண்டிருந்தனர். அருகிப் போன அந்த விளையாட்டின் சுவாரஷ்யத்தை நாங்களும் ரசித்தபடி, பார்த்துக் கொண்டிருந்தோம். 


"ஒரு காலத்திலை இந்த விளையாட்டுகள் தானே எங்கட பொழுதுபோக்கு" என்றார் தேவமித்திரன். 


"ஓமோம்...உடைஞ்ச மண் சட்டி, பானைகளின்ரை ஓடுகள் கூட விளையாட்டு உபகரணமாகப் பயன்பட்டது எங்களுக்கு" என்றார் சீலன் அண்ணா.


"அது மட்டுமே, கிளித்தட்டு, நாயும் இறைச்சியும், சருகுடு, ஒளிச்சுப்பிடிச்சு, கெந்தித்தொடல், ஆடுபுலி, தாயம், ஏணியும் பாம்பும்...இப்பிடி எங்கட காலத்து விளையாட்டுகள் எங்களுக்கு திரவியம் தான்...என்ற தேவமித்திரன், 


பாமதி அக்கா, ஒரு இஞ்சித் தேத்தண்ணி குடிச்சால்  கொஞ்சம் தெம்பு வரும் போல கிடக்கு" என்றார்.


"அட...அதுக்கேன்ன...நல்ல பருத்தித்துறை வடையும் கிடக்கு, இருங்கோ, எல்லாருக்குமாக கொண்டு வாறன்..." என்றபடி, எழுந்து உள்ளே போனார்.



நாங்கள் எல்லோரும் சுற்றி அமர்ந்தபடி கதைத்துக் கொண்டிருந்தோம். 


மேகவர்ணன் அண்ணாவும் பார்கவியும் கதைத்தபடியே வந்து சேரவும் பாமதி அக்கா தேநீரோடு வரவும் சரியாக இருந்தது. 


"தம்பி... தேத்தண்ணி குடியுங்கோ... " என்றபடி தேநீரை நீட்டிய பாமதி அக்காவிடம்,  

"நன்றி அக்கா.... " என்றபடி தேநீரை எடுக்கவும் 


"தம்பி... அவா,  எங்கட கவிக்குத் தான் அக்கா, உங்களுக்கு மச்சாள்... " என்று பாமதி அக்காவின்சித்தி சொல்ல,  நானும் தலையை ஆட்டியபடி சிரித்தேன். 


'மச்சாளோ.... ' விழிகளால்  நளினம் செய்த மேகவர்ணன் அண்ணாவைப் பார்க்க, சிரிப்பு இன்னும் பெரிதானது அங்கே.


என்னைத் திரும்பிப் பார்த்து சிறு முறைப்பு ஒன்றை வெளிப்படுத்திய மேகவர்ணன் அண்ணா,  

"இருக்கு.... உனக்கு... "  என்பது போல தலையை ஆட்டினார். 


"சமரை ஏன் முறைக்கிறாய் மச்சான்....சித்தி சொன்னது சரிதானே...." என்று எனக்காகப் பேசிய தேவமித்திரனிடமும் அதே முறைப்பைக் காட்டிவிட்டு,  


"இரு... இரு... நானும் உன்னைக் கவனிக்கிறன்... " என்று விட்டு,  பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டார். 


அருகில் நின்ற பார்கவிக்கும் சிரிப்பை அடக்கமுடியவில்லை. 


நானும் பார்கவியும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தோம்.  மேகவர்ணன் அண்ணாவின் முறைப்பு பார்கவியிடம் மாறியது. 


"விடுங்கோ... சித்தி... அவர் எப்பிடியெண்டாலும் சொல்லட்டும்.... " என்ற பாமதி அக்காவை இடைமறித்த சித்தி,  


"அதேன் அப்பிடிச் சொல்லுறாய் பிள்ளை,  உறவுமுறைகளை அப்பிடியே சொல்லுறதுதான் வடிவு,  அதுதான் முறையும் கூட,  மச்சாள் என்று வாய் நிறைய கூப்பிட என்ன ஒரு சந்தோசம் தெரியுமே... இல்லிட்டி, அணாணி எண்டு சொல்லட்டும்...

உறவுகளை முறை சொல்லிக் கூப்பிடுற பழக்கம் கூட இப்ப அருகிப் போச்சு," என்று பெருமூச்சோடு கூறவும்...


"அண்ணி...." என்று மெதுவாகச் சொல்லிவிட்டு ஒரு நீண்ட மூச்சை இழுத்துவிட்டார்.


சீலன் அண்ணாவின் மனைவி மீது, மேகவர்ணன் அண்ணாவுக்கு சரியான பாசம், அண்ணியாக அல்லாது அன்னையாகவே அவவைப் பார்த்தவர், கலியாணம் செய்து நிறைய காலம் அவர்களுக்கு பிள்ளைகளும் இல்லை, அவ,  ஏற்கனவே ஒரு வகையில் உறவும் கூட, அதனால் ஆழமான அன்பு அவவில்...என மேகவர்ணன் அண்ணாவே என்னிடம் சொல்லியிருந்தார்.


சில நொடிகளில் இயல்புக்கு வந்து, 


"நீங்கள் சொல்லுறது சரிதான்.... " சிறிது தயங்கியவரிடம், 

"மாமி... " என்று பார்கவி சொன்னதும் 


"மாமி... எனக்கும் உறவுகளை முறை சொல்லிக் கூப்பிடுறது சரியான விருப்பம்..... " என்றார் மேகவர்ணன் அண்ணா. 


" சந்தோசம் தம்பி, இப்ப எல்லாம் பெற்றோர்மார், ஆசிரியர்மார் பிள்ளைகளோடை நண்பர்களாகப் பழகவேணுமாம்,  அப்பிடித்தான் பெரும்பாலானவையள் பழகினம் கண்டியளோ,  ஆனால் அதுதான் ஏகப்பட்ட பிரச்சினைகளைக் கொண்டு வருது, "


" ஓம் மாமி... நானும் நேற்று ஒரு முகநூல் பதிவு பாத்தனான்... ஒரு தகப்பன் வலியோடை எழுதியிருந்த பதிவு,  பிள்ளைகளைப் மெற்றவர்கள் நண்பர்களாக நடத்துவதின்ரை விளைவு பற்றியது,  

வாசிக்க சரியான கவலையா இருந்தது...? " சீலன் அண்ணா சொல்ல, 


"அது உண்மைதான் அண்ணா,  அளவுக்கு மீறிச் செல்லம் குடுக்கிறதாலை பெற்றோருக்குத்தான் மனக்கஷ்ரம்... " என்றேன். 


"உண்மைதான் சமர் , பிள்ளைகள் எந்தக் கஷ்ரத்தையும் அனுபவிக்ககூடாது என்று கேக்கிறது எல்லாத்தையும் வாங்கிக் குடுக்கினம்,  பிறகு,  பிள்ளைகள் குழப்படி,  சொல் கேட்கிறதில்லை,  நினைச்சமாதிரித் திரியுதுகள் என்று குடும்பத்திலை ஒரே சண்டை... " என்று மேகவி சொல்ல, 

எல்லோரும் தலையை ஆட்டினோம்.


சீலன் அண்ணா,  நித்திரையாகிவிட்ட மகனை மடியில் வைத்திருந்தபடி,  கதைத்துக் கொண்டிருந்தார். 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.