காவோலைகள் அழுகின்றன...!.
தங்கள் குருத்துவ காலத்துக்
குதூகலப் பொழுதுகளையெண்ணி
கண்கள் கசிகின்றன! - மனித
வாழ்க்கையென்னும் நெடுமரத்தில் உதிரப்போகும் காவோலைகள்...!.
இளங்குருத்துகளாய் முகம்நீட்டிய
நேற்றைய குருத்தோலைகள்தான்,
காலத்தின் கடுகதி ஓட்டத்திலின்று
பச்சையமிழந்த காவோலைகளாய்
காய்ந்து சுருண்டு தொங்குகின்றன...!.
பச்சை இலைகளின் மீதில்
பழுப்பு விழுவதெல்லாம்
இறைவன் படைப்பின் இயற்கை! - அதன்
பழுப்பை விலக்கிப் பசுமைகொடுக்க
பாரினில் ஏதுண்டு செயற்கை!.
சுட்டெரித்துச் சுருட்டிய வெயிலையும்,
சூறாவழியாய் சுழன்றடித்த காற்றையும்
எதிர்த்து வாழ்ந்துகடந்த பட்டறிவு - இந்தப் பழுத்தோலைகளுக்கு மட்டுமே
படிப்பினையானதாய் நிற்கின்றன...!
கனமழையில் ஊறிக்கடந்து,
பனிப் புகட்டலில் விறைத்துக்கிடந்த
கனத்த காலத்து அனுபவங்கள்! - இந்தக்
குருத்தோலைகளுக்கு இல்லை! - அவை காவோலைகளுக்கே உரித்துடையவை!.
அத்தகை காவோலைகளைப் பார்த்துப்
பல்லிழித்துக் கேலிசெய்யும் சில
இளவோலைகளைப் பார்த்து இன்னும்கூட
கண்ணீர் விடுகின்றன காவோலைகள்...,
இளவோலைகளின் எதிர்காலமெண்ணி...!
வன்னியூர்- வரன்
14/10/2024
கருத்துகள் இல்லை