ஒரு பயணம்!!


 ஒரு விடுமுறையில் போவது மகிழ்வை தருமா , திரும்பி வரும் போது  மகிழ்வை தருமா என்றால் பயணத்தை சிறந்த முறையில் வெற்றி கரமாக முடித்துக் கொண்டு வருவதே மிக்க மகிழ்ச்சி தரும் பயணம் என்பேன்.. விடுமுறை அதாவது வெக்கேஷன் என்பது ஒரு பரீட்சைக்கு போறது போல, எல்லாம் பக்காவாக திட்டமிட்டு , அப்படியே , விறைப்பா , டென்ஷன் உடன் போவது இல்லை. ஜாலியாக , ரிலாக்ஸ் பண்ண ஒவ்வொரு கணத்தையும் ரசித்து , இனிய அனுபவங்களை சேர்க்கும் ஒரு பயணமே.


எத்தனையோ நாள் எதிர்பார்ப்பு ஆனால் அது அருகில் வரும் போது அது நடக்கவே சாத்தியமில்லை எனும் ஒரு நிலை, ஒன்றுக்காக போராடும் போது இருக்கும் மன இறுக்கம் , கையை உதறி விடும் போது சுலபமாகி விடுகிறது. அப்படி தான் இந்த பயணத்தில் எனக்கு மட்டும் இல்லை, இதில் பயணிக்க இருந்த எல்லோருக்கும் எதோ ஒரு விதத்தில் மிகுந்த சிக்கலை பரபரப்பை கொடுத்தது. என் சகோதரியின் ஒரு நேர்த்தியை நிவிர்த்தி செய்ய போட்ட நீண்ட கால பிரயாணம் , இந்த இந்திய பயணம் , அதிலும் சீரடி போய் வர வேண்டும் என்ற வேண்டுதல், அவரை 

அழைத்து செல்லும் பொறுப்பு எனக்கு இருந்தது.


எத்தனையோ சிக்கல் , இடைஞ்சல் , கஷ்டங்களுக்கு இடையே இந்த பயணத்தை தொடங்கும் நாள் வந்தது. எனக்கு மட்டுமில்லை, சுபி அக்காவும் ஏகப்பட்ட தடைகள் எல்லா தடைகளையும் தாண்டி புறப்பட்டோம் என்பது எண்ணி பார்க்க வியப்பாக இருந்தது. பயணித்த அனைவரும் தனி தனி பிரஜைகள் என்றாலும் எல்லோரும் தனித்துவமானர்கள், இந்த  பயணத்தை சிறப்பிக்க ஒவ்வொருவரின் சிறப்பு இயல்புகளும் பிரயாணத்தை சுவாரசியம் ஆகியது என்பேன்.


மற்றவர்கள் பற்றி சொல்வதை விட என்னை பற்றி நானே சொல்லி விடுவது நல்லது. பயணம் என்றால் முக்கியமான சில குறிப்புகள் , தேவைகள் என்பன இருக்குமே தவிர , நான் இறுக்கமாக , பயமாக , பதட்டமாக பயணத்தை எண்ணுவது இல்லை.எல்லாமே சாத்தியம், அதில் என்ன தடைகள் சிக்கல்கள் வந்தாலும் அவற்றை 

வென்று பயணம் செய்யலாம் , இவை எல்லாம் அனுபவம் எனும் எண்ணம் மட்டுமே எனக்கு.


என் கணவர் கூடவே டென்ஷனை கட்டி சுமந்து கொண்டு வருவார்.செக்கிங் என்ற பார்டர் கடக்கும் மட்டுமே அந்த டென்ஷன். அதற்கு பிறகு , நகைச்சுவைக்கு சிரிக்க வைக்கவும் குறைவில்லை.காரணமே இல்லாமல் சிரிக்க வைக்க அவர்.


எனக்கு நேரே மூத்த சகோதரி , எச்சரிக்கை எதிலும் எங்கும், கவனம் கவனம், குறிப்பாக இந்தியா என்றால் யாரவது கடத்தி போய் விடுவார்கள் , தூக்கி போய் விடுவார்கள் என்று இடைத்தரகர்கள் பேச்சு , சினிமா பார்த்ததன் பாதிப்பு பயமாக உருமாறி காண்பவர்கள் எல்லோரும் சந்தேகத்துக்கு உரியவர்களாக பார்க்கும் கெட்டிக்காரி, நிஜ வாழ்க்கையில் மிக சாதுரியமானவர் .என் இளைய சகோதரி , அமைதியாக, பொறுமையாக எது நடந்தாலும் பேசாமல் தன் தேவைக்கும் எங்களை பேச விட்டு மௌனமாக இருக்கும் பெண்.


சுபி அக்கா , ஒவ்வொருவரையும் அன்போடும் கனிவோடு கவனித்து, மற்றவர்களின் தேவைகளையும், அவர்களின் மனம் நோகாமல் , எல்லோருடனும் ஒத்து அதற்கேற்றது போல, அக்கறையோடு கவனித்து கொள்பவர்.துஷி இவர் , எல்லோரும் தனி தனி மனிதர்கள், அவர்கள் தேவைகள், விருப்பங்கள் எல்லாம் லிஸ்ட் போட்டு அவற்றை செயல் படுத்துவதில் தீவிரமாக நின்று அவற்றை பிசகு இன்றி ஒப்பேற்றிய சாதனையாளர்.


நரேன் அண்ணா எங்கள் தேவைகளை ஒழுங்கு படுத்தி கொடுப்பவர் உணவு , போக்குவரத்து பொறுப்பாளர் காசாளர்,மனோ எல்லாவற்றுக்கும் ஒத்துழைப்பு அளிக்கும் ஒரு அழகான சேர்க்கை .

நாம் போகும் இடங்கள் மட்டுமல்ல , நாம் சந்திக்கும் மனிதர்களும் ஆச்சரியமானவர்கள். தினமும் நமக்காக காலையில் போக்குவரத்துக்கு என்று காத்திருக்கும் ஆட்டோ டிரைவர்கள் , 


xxxxxxxx   xxxxxx xxxxxxxx xxxxxxxx   xxxxxx xxxxxxxx 


நாம் விடுமுறையை கழிக்க, உல்லாசமாக இருக்க , அதிசயங்களை பார்க்க மற்றது தொழில் ரீதியாக இப்படி பல இடங்கங்களுக்கு விஜயம் செய்தாலும் ,  அது என்னவோ எனக்கு இந்தியாவுக்கு போகும் மட்டுமே  இந்த  ஒரு கனெக்ட் உண்டாக்கிறது. மற்ற இடங்களில் இல்லாத ஒரு ஆத்மார்த்தமான திருப்தி ,  ஆனந்தம் , எல்லாம் ஆழ்மனதில் தோன்றுகிறது என்றால் மிகையாகாது . 


அதற்கு , மொழி , கலாசாரம் ,  உணவு முறை , காலநிலை , எல்லாவற்றையும் விட அதிகமாக கோயில்கள் ,  நாங்கள் அங்குள்ள கோயில்களுக்கு போகும் போது ஒரு ஈடுபாடுடன் போக முடிகிறது ,  பழம்பெரும் கோயில்கள் ,  என்று நிறைய ஒற்றுமைகள் உண்டு .


எங்கே போனாலும் சாப்பிட என்று உணவுகளை ஆர்டர் கொடுக்கும் போது எனக்குள் ஒரு பெரிய போராட்டமே நடக்கும் , ஒரு தர்மசங்கடமான நிலைமை என்பேன் . எதை ஆடர் செய்வது ,  இது மச்சமா மரக்கறியா , என்று ஏகப்பட்ட குழப்பம் ,  எந்த குழப்பமும் இல்லாமல் ஆனந்தமாக எதுவானாலும் சாப்பிடலாம் என்றால் என் ஒரே ஒரு தெரிவு இந்தியா .  


வீட்டு காபி அல்லது டீ குடிப்பது என்றால் அது ஒரே ஒரு தேர்வு இந்தியா மட்டுமே .  அதற்காக வேறு எந்த நாட்டுக்கு போனாலும் காபி தான் ஆர்டர் .  தேநீர் ஆர்டர் பண்ணி கழனி தண்ணீர் குடிக்க முடியாது பாருங்கோ . 


இந்தியா சனத்தொகை கூட , ஆளை அடிச்சு காயப்போடும் வெயில் ,  ஊத்தை , குப்பை , நடக்க இடம் இல்லை  சன நெருக்கடி, திருட்டு பயம்  , ஏமாற்று  .  இப்படி ஏகப்பட்ட குறைகள் பலர் சொன்னாலும் எனக்கு என்னவோ , அவை எல்லாம் எல்லா நாட்டிலும் இருக்கிறது . அவை சனத்தொகை வைத்தே  மாறுபாடுகள் உண்டாகின்றன  . 


அடுத்தது யாரோடு போகிறோம் என்பதில் இருக்கிறது .  அப்படியே உர் என்று முகத்தை வைத்துக் கொண்டு அங்கே போனாலும் கஷ்டம் எங்கே போனாலும்  எல்லா இடங்களையும் ரசித்து , மகிழ்வோடு கொண்டாடும் கூட்டமாக சேர்ந்தது பெரு மகிழ்ச்சி.

பாமா இதயகுமார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.