தென்மராட்சிக்கு இம் முறை இரண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள்!
திரு.நவரத்தினம் ,ந.ரவிராஜ் ஆகியோர் தென்மராட்சியின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டியிருந்தனர்.நீண்ட இடைவெளிக்குப் பின் இன்று சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட இராமநாதன் அர்ச்சுனாவும் , தேசிய மக்கள் சக்தி கட்சியில் போட்டியிட்ட கருணை நாதன் இளங்குமரனும் தெரிவு செய்யப்பட்டு தென்மராட்சியின் இரட்டைப்பிரதிநிதித்துவத்தை நிலை நாட்டியுள்ள பெருமைக்குரியவர்களாக திகழ்கிறார்கள்.
திரு.நவரத்தினம் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக சாவகச்சேரி தொகுதியில் 1956 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.மார்ச் 1960,1965, 1970 தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1958 இனக்கலவரங்களை அடுத்து நவரத்தினம் உட்பட தமிழரசுக் கட்சித் தலைவர்கள் 1958 இல் சிறையிலடைக்கப்பட்டனர். 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தை நவரத்தினம் முன்னின்று நடத்தினார்.
தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம் 1972 அக்டோபரில் தனது நாடாளுமன்ற இருக்கையைத் துறந்ததை அடுத்து நவரத்தினம் நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவரானார்.தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதித் தலைவர்களில் ஒருவராக நவரத்தினம் இருந்து செயல்பட்டார்.
1977 தேர்தலில் நவரத்தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் சாவகச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு யூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நவரத்தினம் உட்பட அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை பகிஸ்கரித்தார்கள். செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்கள்.
ந.ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார். 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார்.
1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபை முதல்வராகவும் தெரிவானார்.
2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தென்மராட்சி பகுதியில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.
2006 நவம்பர் 10 வெள்ளிக்கிழமை அன்று காலை 7:00 மணிக்கு ரவிராஜ் தெண தொலைக்காட்சியில் நடந்த ஒரு நேரடி நேர்காணல் ஒன்றில் பங்குபற்றிவிட்டு வீடு திரும்பி பின்னர் மீண்டும் வீட்டை விட்டு தனது வாகனத்தில் வெளியேறிய போது காலை 8:45 மணியளவில் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்டவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் இரண்டு இனந்தெரியாதோரால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் உயிரிழந்தார்.இதன் பின் நீண்ட இடைவெளியின் பின் இனறு இளம் தலைமுறையினர் இருவர் பாராளுமன்றம் செல்கின்றனர்.
கருத்துகள் இல்லை