சந்ததி காத்தருளும் சஷ்டிதேவி வழிபாடு !
கந்தசஷ்டி வழிபாடு: சந்ததி காத்தருளும் சஷ்டிதேவி வழிபாடு - இன்றே தொடங்குங்கள்!
சத்புத்திர பிராப்தி உண்டாவதற்கும்; குறைபாடுகளற்ற குழந்தை பாக்கியத்திற்கும்; பிறந்த குழந்தைகள் நோய்நொடிகளற்று வளர்வதற்கும்; அவர்களின் ஆயுள்தீர்க்கத்திற்கும் நாம் செய்யவேண்டிய அதீத சக்தி வாய்ந்த பரிகாரம் ஒன்றும் உள்ளது. அதுதான் கந்தசஷ்டி வழிபாடு.
சத்புத்திர பிராப்தி உண்டாவதற்கும்; குறைபாடுகளற்ற குழந்தை பாக்கியத்திற்கும்; பிறந்த குழந்தைகள் நோய்நொடிகளற்று வளர்வதற்கும்; அவர்களின் ஆயுள்தீர்க்கத்திற்கும் நாம் செய்யவேண்டிய அதீத சக்தி வாய்ந்த பரிகாரம் ஒன்றும் உள்ளது. அதுதான் கந்தசஷ்டி வழிபாடு.
ஒருவருக்கு எவ்வளவுதான் செல்வம் நிறைந்திருந்தாலும் குழந்தைச் செல்வம் இல்லையேல் வாழ்வு நிறைவு பெறுவதில்லை. முன்னோர் வழிபாடுகளில் ஏற்பட்ட தோஷங்கள், பித்ரு சாபங்கள், சர்ப்ப தோஷங்கள் முதலியவைகளால் வம்சவிருத்தியில் பாதிப்புகள் ஏற்படுவதாக சாஸ்திரநூல்கள் கூறுகின்றன. அது மட்டுமா..? இத்தகு தோஷங்களால் குறைப்பிரசவம், கருச்சிதைவு, சிசு மரணம், அங்கஹீனம் மற்றும் புத்தி ஹீனம் போன்ற குறைபாடுகளுடன் சிசு பிறத்தல் , ஆயுள் தோஷங்களுடன் கூடிய குழந்தைகள் பிறத்தல் போன்ற எவ்வளவோ பிரச்னைகள் நம்மை வருத்துகின்றன.
ஆயினும், சத்புத்திர பிராப்தி உண்டாவதற்கும்; குறைபாடுகளற்ற குழந்தை பாக்கியத்திற்கும்; பிறந்த குழந்தைகள் நோய்நொடிகளற்று வளர்வதற்கும்; அவர்களின் ஆயுள்தீர்க்கத்திற்கும் நாம் செய்யவேண்டிய அதீத சக்தி வாய்ந்த பரிகாரம் ஒன்றும் உள்ளது. அதுதான் சஷ்டி வழிபாடு.
சஷ்டிதேவி வழிபாடு அவசியம் ஏன்?
திதியை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த திதிகளுக்கு உரிய தெய்வங்களுக்கான விரதங்களை நோற்று வழிபாடாற்றுதல் நமது மரபு. பிரதமை தொடங்கி சதுர்த்தசி வரை உள்ள 14 திதிகளும் ஒரு மாதத்தில் இரு முறைகள் (சுக்ல பட்சம் & கிருஷ்ண பட்சம்) அமைகின்றன. ஒவ்வொரு திதிக்கும் உரியதாக ஒவ்வொரு தேவதா சொரூபம் சொல்லப்பட்டிருக்கின்றது.
இவர்களுக்கு திதி தேவதைகள் என்பது திருப்பெயர். இரண்டு பட்சங்களிலும் ஆறாவது தினமாக அமைவது 'சஷ்டி' திதி. பொதுவாக சஷ்டிவிரதம் முருகப்பெருமானுக்கு உகந்தது என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆயினும் திதிநித்யா தேவியர் வரிசையில் சஷ்டி திதிக்கு உரியவள் 'சஷ்டி தேவி'.
அம்பிகையின் போர்ப்படையில் அவளது சேனைகளை வழிநடத்திச் செல்லும் தேவசேனாதிபதியாக விளங்குபவள் இவ்வன்னை. கருவில் உருவானது முதல் பாலகர்பருவம் வரை குழந்தைகளைக் காத்திடும் தெய்வமாக இந்த சஷ்டி தேவி போற்றப்படுகின்றாள். பிள்ளைவரம் வேண்டுபவர்கள் சஷ்டி திதிகளில் இந்த அன்னையைத் தொழுதல் அவசியம்.
சஷ்டிதேவியை எப்படி வழிபடுவது?
சஷ்டி திதிகளில் தேங்காய் + வெல்லப் பூரணம் சேர்த்த மோதகம் அல்லது துள்ளுமாவுடன் வாழைக்கனிகளை நிவேதித்த பின்பு, குழந்தைகளுக்கு விநியோகிப்பதால் இந்த அன்னை மனம் மகிழ்ந்து அருளுகிறாள். நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் நிவாரணம் பெற்று நலமடைந்திட இவ்விதமாக பெண்கள் வேண்டுதல் நேர்ச்சை செய்வதும் நமது தொன்மரபு.
குழந்தைப்பேறு கண்ட வீடுகளில் சாந்தி செய்வதும் இவ்விதமான வழிபாடே. அந்நாட்களில் குழந்தைக்கு பெயர் சூட்டும் 'புண்ணியாகவாசன' தினத்தன்று வீட்டின் மூலையில் கொழுக்கட்டை, பழவகைகள், தேங்காய், தாம்பூலம் முதலியவற்றைப் படையலிட்டு அதற்கு நேர்மேலாக கூரையில் உள்ள ஒரு ஓட்டினையோ அல்லது சிறுபகுதியையோ நீக்கித் திறந்து வைத்து விடுவார்கள். ஆகாய மார்க்கமாக பயணிக்கும் சஷ்டிதேவி இந்த திறப்பின் வழியாக வீட்டின் உள்ளே வந்து படையலை ஏற்றுக்கொண்டு, பச்சிளம் குழந்தையை ஆசிர்வதித்துக் காத்திடுவாள் என்பது ஐதீகம். பிறகு பகல் பொழுது முடிந்த பிறகு மீண்டும் பழையபடி அடைத்து விடுவர். நாட்டுப்புறத்தார் வழிபாட்டில் குழந்தைகளுக்கான தெய்வமாகக் கொண்டாடப்படும் பேய்ச்சியம்மன் வழிபாடும் இதனை ஒத்தது ஆகும்.
புராணங்களில் சஷ்டி தேவி..!
ஒரு சமயம் ஸ்வயம்பு மனு என்கிற அரசன் நீண்டவருடம் தவமிருந்து பெற்ற குழந்தை பிறக்கும்போதே இறந்திருந்தது. அரசனும் மனைவியும் துக்கத்தில் ஆழ்ந்து மயானத்தில் வீழ்ந்து புலம்பினர். அப்போது அங்கு தோன்றிய சஷ்டிதேவி குழந்தையைத் தொட அவளின் அருளால் அது உயிர்பெற்றது. குழந்தையுடன் விண்ணில் பறக்க எத்தனித்த தேவியின் கால்களைப் பிடித்தபடி தம்பதியினர் மன்றாடினர். மனமிரங்கிய சஷ்டிதேவி குழந்தையை அவர்களிடமே அளித்தாள். மேலும் அக்குழந்தைக்கு 'சுவிரதன்' என்ற நாமகரணம் செய்வித்து நீண்ட ஆயுளையும் அருளிச் சென்றாள் என்கிறது புராணக்கதை.
சில தெய்வ நூல்களில் முருகப்பெருமானோடு உறைந்தருளும் இணை சக்தியான தெய்வயானை இந்த சஷ்டி தேவியின் அம்சம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
ஒருசமயம் காக்கும் கடவுளான திருமாலின் திருவிழிகளில் இருந்து ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது. அந்த நீர்த்துளியிலிருந்து உருவாகிய சக்தியானது, திருமகள் அருளால் பெண்ணுருவம் பெற்றது. இந்திரனுக்கு மகளாக அளிக்கப் பெற்ற அப்பெண் சக்திதான் சிவகுமரனைப் பதியாக அடைந்தாள். இந்திரனின் யானையான ஐராவதத்தினால் வளர்க்கப் பெற்றமையால் 'தெய்வயானை' என்றும்; தேவசேனாதிபதியான முருகனை மணம் புரிந்தமையால் 'தேவசேனா' என்றும் திருநாமம் கொண்டாள் இவ்வம்மை.
திருவிடைக்கழி (நாகை) தலத்தில் இவ்வன்னை சிவாம்பிகை வடிவில் தேவாசேனாம்பிகை எனும் திருநாமத்துடன் அமைந்திருப்பது வேறெங்கிலும் காணவியலா அரியதோர் அமைப்பு.
சஷ்டியில் இத்தனை விரதங்களா..?
பொதுவாக சஷ்டி திதி முருகப்பெருமானை வழிபடுவதற்கு உரிய தினம். ஆயினும் சில சிறப்பான சஷ்டி விரதங்களும் உண்டு. சஷ்டி விரதங்கள் அனைத்துமே 'இஷ்ட காரிய சித்தி' - க்காக நோற்கப்பெறும் விரதங்களாகவே அமைகின்றன. குறிப்பாக செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தினர், திருமணம் சாதகமாக அமைவதற்கு அவசியம் செய்யவேண்டியது இந்த சஷ்டி வழிபாடுதான்.
•கார்த்திகை மாதத்தின் பௌர்ணமியில் தொடங்கி அடுத்த வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள் விரதம் நோற்பதற்கு 'பிள்ளையார் சஷ்டி' என்பது பெயர். இது முழுமுதற்கடவுளான விநாயகருக்காக செய்யப்படும் பெரும் விரதம் ஆகும். இவ்விரதத்தினை முறையாக நோற்பவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் அளவிலாத நற்பலன்கள் கிடைத்திடும் என்பது உறுதி.
•புரட்டாசி மாதத்தில் வளர்பிறை சஷ்டி அன்று (நவராத்திரியில் அமையும் ஆறாவது தினம்) அம்பிகைக்கு நோற்கப்படும் விரதத்திற்கு 'லலிதா சஷ்டி' என்பது பெயர்.
•புரட்டாசி தேய்பிறை சஷ்டியில் கபில நிறப் பசுவினைப் பூஜிக்கும் தினமாக அமைவது கபிலா சஷ்டி ஆகும். சகல தேவதா திருப்தி மற்றும் அனுக்கிரகத்தினை வேண்டி செய்யப்பெறும் வழிபாடு இது.
•ஐப்பசி அமாவாசைத் தொடங்கி பிரதமை முதல் சஷ்டி வரை முருகப்பெருமானை வேண்டி விரதமிருப்பது கந்த சஷ்டி. இது பெரிய சஷ்டி (மகா சஷ்டி) எனப்படும்.
•ஆனி மாதத்து வளர்பிறை சஷ்டியில் செய்யப்பெறும் விரதத்திற்கு குமாரசஷ்டி என்பது பெயர். இது கார்த்திகை மாதத்தில் அமைவதும் உண்டு.
•இது மட்டுமல்லாது மார்கழித் தேய்பிறையில் அமையும் பைரவருக்கான செண்பக சஷ்டி, சர்ப்ப தோஷங்களைப் போக்கிடும் ஆடிமாதத்து அனந்த சஷ்டி என இன்னும் பல சிறப்பு வாய்ந்த சஷ்டி விரதங்களும் உண்டு.
குழந்தைச் செல்வம் இல்லாமல் மனம் வாடுபவர்கள் சஷ்டி தினங்களில் சர்ப்பத்துடன் இணைந்த முருகப்பெருமானின் திருவடிவத்தினை விரதமிருந்து பூஜிக்க வேண்டும்.
சர்ப்பமும் முருகப்பெருமானும் இணைந்து விளங்கும் 'குக்கே சுப்பிரமணியா' போன்ற ஆலயங்களுக்குச் சென்று வணங்குதல் நலம். இயலாதவர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள ஆலயங்களில் கல் நாகர்கள் மற்றும் முருகப்பெருமான் சந்நிதிகளில் சுத்த தீபமேற்றி வழிபடலாம். கன்னடர் மற்றும் தெலுங்கு இனத்து மக்கள் இவ்வாறான அனந்த சுப்பிரமணியர் வழிபாட்டினைச் சிறப்பாகச் செய்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
பிணி அகல சஷ்டியில் பாராயணம் செய்ய வேண்டியவை!
ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் தம் பிணியகல திருச்செந்தூர் பெருமான் சந்நிதியில் செய்தருளிய சுப்பிரமணிய புஜங்க ஸ்தோத்திரத்தினை மனமுருகி பாராயணம் செய்தாலோ அல்லது காதால் கேட்டாலோ அளவற்ற நன்மைகள் உண்டாகும்.
புஜங்கம் என்றால் பாம்பு. சுப்பிரமணியர் மீது பாடப்பெற்ற இந்த ஸ்தோத்திரத்தின் சந்தஸ் ஆனது பாம்பினைப்போன்றே வளைந்து நெளிந்து ஊர்ந்து செல்வது போல அமைக்கப்பெற்றுள்ளதால் இதற்கு 'சுப்ரமணிய புஜங்கம்' என்பது பெயர். சஷ்டி தினங்களில் இதனை மனமுருகிப் பாராயணம் செய்திட நோய்நொடிகள் பறந்து போகும். தவிர வேல்மாறல், சண்முகக் கவசம் போன்றவைகளும் அதீத நற்பலன்களைத் தரவல்லன. கந்தர்கலிவெண்பாவினை மனமுருகி ஓதிட
மன சஞ்சலங்கள் அகன்று நம்பிக்கை பிறந்திடும். முருகனருளால் நினைத்த கோரிக்கைகள் நிறைவேறிடும். முருகனைப்போற்றும் அன்பர்கள் தொடர்ந்து சுக்லபட்ச சஷ்டி விரதம் ஏற்று செய்வதும் உண்டு. அத்தகையவர்கள் இந்த ஐப்பசி கந்த சஷ்டியில் தொடங்கிடுதல் தொன் மரபு.
இத்தகு புண்ணியம் நிறைந்த சஷ்டி விரதகாலத்தில் முருகப்பெருமானுடன் சஷ்டி தேவியையும் வழிபட்டு நம் சந்ததியர் நலம் காக்க வேண்டி பிரார்த்தனை செய்திடலாமே.
கருத்துகள் இல்லை