லக்கி பாஸ்கர்!!

 


ஒரு அவமானம்தான் மனிதனின் பொருளாதாரத் தேடலுக்கான இலக்கை  நிர்ணயிக்கிறது .


ஒரு மனிதன் பல்வேறு சூழ்நிலைகளில் வார்த்தைகளால் கொச்சைப்படுத்தப்படுகிறான். நசுக்கி எறிந்துவிடும் கடுமையான சூழ்நிலையால் மனதளவில் துவண்டு வாடிப் போகிறான். அது அவனை தற்கொலை வரை அழைத்துச் சென்றுவிடுகிறது. அவமானம் ஒன்றுதான் ஒரு மனிதனை தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளச் செய்யும். அவமானங்களால் இப்பேருலகில் இறந்தவர்களின் பட்டியல் அளவிட முடியாததாக இருக்கும்.


லக்கி பாஸ்கர் என்ற துல்கர் சல்மான் 

திரைப்படம் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் இச்சமூகத்தால் எப்படி அல்லாடி தடுமாறிச் சாய்கிறான் என்பதை மையமாக கொண்டு உருவாகியிக்கும் கதை , நம் வாழ்வில் நடந்த துயரமான சம்பவங்களை நினைவுபடுத்துகிறது. 


வங்கியில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் லக்கி பாஸ்கர் வாங்கிச் செல்லும் சம்பளத்தில் குடும்பத்தை ஓட்ட முடியவில்லை. சுற்றிலும் கடன் வாங்கியிருக்கிறான் கடன்காரர்கள் வரும்போதெல்லாம் ஓடி ஒளிந்துகொள்கிறான். 


ஒரு வட்டிக்காரன் நடுரோட்டில் வைத்து பாஸ்கரின் சட்டையைக் கிழித்து அவன் காசே இல்லாத பர்ஸைப் பிடுங்கி எறிந்து அவனுடைய இரண்டு சக்கர வாகனத்தை பிடுங்கிச் செல்லும் காட்சியில் நம்நாட்டில் கடன் வாங்கி அல்லல்படும் எத்தனையோ குடும்பங்களின் நிலை காட்சியாக விரிகிறது .


வருமானம் இல்லாதவனின் நிலைமை எவ்வளவு கொடூரமானதென்பதை முதல் பாதியில் காட்டியிருக்கிறார்கள். படம் பார்க்கும் ஒவ்வொரு மிடில்கிளாஸ் குடும்பமும் கலங்கித்தான் போயிருக்கும். 


ஹர்ஷத் மேத்தாவின் நிஜக்கதைதான் படத்தின் அடிநாதம்.  மிடில்கிளாஸ் பாஸ்கரனின் புத்திசாலித்தனமான கதை சுவராஸ்யமாக இருந்தது ,  துல்கர் சல்மானுக்கு ஏற்ற கதாபாத்திரம் அவர் லக்கி பாஸ்கராக வாழ்ந்திருக்கிறார் .இந்தியாவை உலுக்கிய ஹர்ஷத் மேத்தாவின் பத்திர ஊழலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதை. 


ஒரு அவமானம்தான் ஒரு மனிதனின் பொருளாதாரத்தைத் தேட வைக்கிறது, அவமானங்கள் நிகழ்ந்தாலும் அதைத் துடைத்தெறிந்துவிட்டு கண்ணீரை குழிதோண்டி புதைத்துவிட்டு பணம் சம்பாதிக்க வேண்டும்.



வல்லம் பஷீர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.