ஈரத்தீ ( கோபிகை) - பாகம் 45!!
பாமதி அக்காவின் சித்தி திருகோணமலையில் தான் வசிக்கிறா, என்று ஒருமுறை பாமதி அக்கா சொல்லக்கேட்டது நினைவில் வந்தது.
"அப்ப...ஊரிலை எல்லாரும் சுகமோ அம்மா? "என்றேன்.
"ஓம் மோனை, எல்லாரும் நல்ல சுகம்," என்றவரிடம்
"திருகோணமலை உங்கட சொந்த இடமோ அம்மா....?" என்றேன்.
"அந்த ஊர் அடைக்கலம் தந்த ஊர், எந்தக்காலத்திலையும் மறக்க ஏலாது மோனை..."
உடனே மேகவர்ணன் அண்ணா,
"வரலாறு உங்களைப் போன்றவர்களைத்தான் எப்பவும் மறக்காது மாமி " என்றார்.
"எப்ப இங்கயிருந்து போனனீங்கள் அம்மா?" என்றேன் நான்.
"தொண்ணூறுகளுக்குப் பிறகுதான் மோனை, எங்கட இடம் யாழ்ப்பாணம் தானே...மயிலிட்டி, அப்ப ஆரம்ப காலங்களிலை கடற்கரையால வாற பிள்ளையளுக்கு நாங்கள் தானே உதவி, சும்மாவே, பிள்ளைகள் அந்த நேரம் என்ன பாடுபட்டவையள், பலதரப்பட்ட உதவிகளைச் செய்தனாங்கள்...
எங்கட பிள்ளைகள், நாங்கள் பாராமல் வேற யார் பாக்கிறது, தேசத்தை நேசிச்ச எங்கட குஞ்சுகளை எங்கட கைகளுக்குள்ள பொத்திவைச்சுப் பாதுகாத்தனாங்கள்,
பிறகு இஞ்ச விசயம் கசிஞ்சிட்டுது, உடனே, அவையளே என்னை, திருகோணமலைக்கு அனுப்பிப்போட்டினம், மற்றது அங்க அப்ப தேவையும் இருந்தது, காட்டுக்குள்ளாலை வாற பிள்ளைகள் பசியிலை இருக்கினம் எண்டதும் அவையளுக்கு சமைச்சுக் குடுக்க எண்டுதான் நான் வெளிக்கிட்டனான்.
கடற்கரையை அண்டி, இருந்த வாடிகளோட ஒரு குடிசையைப் போட்டுக்கொண்டு இருந்திட்டன்."
"அம்மா...அது வித்தியாசமான அனுபவமா இருந்திருக்கும்தானே...?"
"பின்ன...ஓம் பிள்ளை, அது ஒரு மனநிறைவான அனுபவம் தான்..., வெள்ளணளே மீன் தெரிஞ்சு குடுக்கப்போவன், அவையள் தாற மீனைக் கொண்டுவந்து பொரிச்சு, கறியும் வைச்சிட்டு பாத்துக்கொண்டிருப்பன், என்ர குஞ்சுகள் வாற அசுமாத்தம் ஏதும் இருக்கோ எண்டு, சில நேரங்களிலை சாப்பாட்டைப் போட்டு எடுத்துக்கொண்டு போய், அவையள் சொல்லுற இடத்திலை வைச்சிட்டு வருவன், அது ஒரு காலம்தான் மோனை...."
பெருமூச்சை வெளிவிட்டு, தன்னை ஆசுவாசப்படுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.
அந்த நாளிலை சரியான கஸ்ரமும்தான், சில நேரங்களிலை சமைக்க அரிசி கூட இருக்காது, ஒருநாள் பக்கத்து வாடியிலை போய் களவெடுத்துக்கொண்டு வந்து சமைச்சனான் கண்டியளோ, அடுத்தநாள் அவையளிட்ட, அரிசி எடுத்த விசயத்தைச் சொல்லிப்போட்டு, திருப்பிக்குடுத்தனான்...
எத்தனை பிள்ளையள் ....இரவு என்ர கையாலை வாங்கிச்சாப்பிட்ட பெடி, விடிய கண்ணுக்கு முன்னாலை உயிரை விட்டது, ஆரோ காட்டிக் குடுத்துட்டுதுகள்...
ஆனா...ஓடிப்போய் , கட்டி அணைச்சு அழக்கூட முடியாத நிலை..."
அவ்வளவு தியாகத்துக்கும் அர்த்தம் இல்லாமல் போட்டுது...அதுதான் கவலை...
அவரின்ரை கனவை நிறைவேற்ற எத்தினை பிள்ளையள் உயிர்த்தியாகம் செய்ததுகள்...ஆனால் எங்கட இனத்துக்குள்ள இருந்த கோடரிக்காம்புகளாலை இப்பிடி ஒரு நிலைமை வந்திட்டுது,
துரோகம் வெண்டுட்டிது...வேற என்னத்தைச்சொல்ல....நீதி செத்த தேசத்திலை இப்ப நிர்க்கதியா நிக்கிறம்..., இனி தமிழனுக்கு எது நடந்தாலும் கேக்கப்பாக்க ஆளில்லை,
அபின், கஞ்சா, போதை, ஊழல், மோசடி எண்டு மலிஞ்சுகொண்டு போகுது, எங்கட அரசியல்வாதிகள் ஒரு சதத்துகும் உதவமாட்டினம், அவர் நம்பித்தான் அரசியல் பொறுப்பைக் குடுத்தவர், ஆனால் நடந்ததோ தலைகீழா...
காலம் எங்களைக் கைவிட்டிட்டுது மோனை...காலம் எங்களைக் கைவிட்டிட்டுது...." வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி சொன்ன பாமதி அக்காவின் சித்தியின் வார்த்தைகள் அங்கிருந்த அனைவரையுமே அழவைத்துவிட்டது.
பாமதி அக்கா தேம்பித்தேம்பி அழவும் அருகில் சென்று அவவை அணைத்தபடி, பின் முதுகில் சாய்ந்து கொண்டேன்.
சீலன் அண்ணா பாமதி அக்காவையே பார்த்துக் கொண்டிருந்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை