அலையோடு நீராடு நூல் வெளியீடு!📸
நல்ல ஒரு நூல் வெளியீடு
புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியில் நடைபெற்ற அரியதொரு நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கி மகிழ்ந்தேன். அண்மைக்காலமாக முகநூல் பக்கங்களில் அறிமுகமாகி மூன்று கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்ட சங்கரி சிவகணேசனின் நான்காவது கவிதை நூலாகிய அலையோடு நீராடு என்ற நூல் வெளியீடு நடைபெற்றது. மண்டபம் நிரம்பிய ரசிகர் கூட்டம் என்பது ஒரு சிறப்பு. பல கவிஞர்கள், எழுத்தாளர்கள், ரசிகர்கள் வந்திருந்தமை இன்னொரு சிறப்பு. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராசா, முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கன், பேராசிரியர் சிவலிங்கராஜா, முதுநிலை விரிவுரையாளர் செல்வ அம்பிகை, முதுநிலை விரிவுரையாளர் ராஜேஸ்கண்ணா ஆகியோரும் அதிபர் திரிகரன் அவர்களும் கலந்து சிறப்பித்தமை இன்னொரு சிறப்பு.
இலக்கிய விழா என்றால் நவீனத்துவத்துடன் நடைபெறவேண்டும் என்றும் பாரம்பரியம் தேவையில்லை என்றும் ஒரு தவறான சிந்தனை நமது நவீன முற்போக்கு எழுத்தாளர்களிடையே உருவாகியுள்ள இன்றைய காலகட்டத்தில் இந்த விழா முற்றிலும் மரபுவழிப்பட்டதாகவும், நமது பண்பாட்டு அம்சங்களுடன் கூடயதாகவும் அமைந்தமை மனத்திற்கு இதமாக இருந்தது. சங்கரி மற்றும் சிவகணேசன் இருவரது குடும்பத்தினரும் தமிழ்ப்பற்றாளர்கள். தமிழ்த் தேசிய உணர்வுடையவர்கள் என்பது அடையாளம் காட்டப்பட்டது. தமிழ் வாழ்த்தாக, ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையா...... என்ற அவலமான பாடலைப் பாடாமல் பாரதியின் வாழ்க நிரந்தரம் என்று கம்பீரமாக ஆரம்பித்தபோதே திருப்தியாக இருந்தது.
விழா நாயகியின் மருமகன் வழங்கிய கணபதி வழிபாட்டு நடனம் மிக அருமையாக இருந்தது.
நூலாசிரியை சங்கரி வசதியான வெளிநாட்டு வாழ்க்கையைத் துறந்து தமது பிள்ளைகளை நம் நாட்டு சூழலில் வளர்க்கவேண்டும் என்ற இலட்சியத்துடன் இங்கு மீண்டும் கால்பதித்து வாழத் தொடங்கியமை பலராலும் சிறப்பாகப் பாராட்டப்பட்டது.
சங்கரியின் அப்பா பேராசிரியர் சிவானந்த மூர்த்தி எனது தந்தையாரின் மாணவர். சிவானந்த மூர்த்தியின் மைந்தர்கள் எனது மாணவர்கள். சிவகணேசன் எனது மாணவன். இது இவ்விரு குடும்பத்தினருக்கும் எனக்கும் உள்ள நெருக்கமான தொடர்பு. யுத்த இடப்பெயர்ச்சியின்பின் மீண்டும் வந்தபோது வாழ்விடம் கிடைக்காது தவித்த எனக்கு அடைக்கலம் தந்து என்னை வாழ்வித்தவர்கள் எனது மாணவர்கள்தான். அத்தகைய கும்பங்களில் சிவகணேசனின் குடும்பத்தவரும் குறிப்பிடத் தக்கவர்கள்.
நான் பல தடவை வியந்து நோக்கிய ஒரு விடயம் இரு குடும்பங்களின் பெயர்களிலும் சிவ என்பது நிறைந்திருக்கும். இவர்கள் புத்தூர் சிவன் கோவிலுடனும், அவர்கள் ஆவரங்கால் சிவன் கோவிலுடனும் தொடர்பானவர்கள். இரு குடும்பமும் இணைந்தமையால் சிவப்பொலிவு மேம்பட்டது.
சங்கரியின் கவிதைகள் மௌனமான மன உணர்வுகளின் வெளிப்பாடாகவும், இயற்கையை நேசிப்பவையாகவும், அழகிய சொற்கோவைகளாகவும் இருப்பது ஒருவகையான சிறப்பு. இன்னொரு புறத்தில் சமூக அவலங்களை அகவய நோக்கில் சுட்டிநிற்பவையாகவும் அதேநேரம் நம்பிக்கைத் தொனியோடு கூடியவையாகவும் இருப்பவை என்பதால் சமூகத்திற்கு வேண்டிய ஒன்றாக அமைகின்றன.
இன்னுமின்னும் பல கவிதைகளை இக்கவிமகள் தரவேண்டுமென வாழ்த்துகின்றேன்.என்று வாழ்த்துகளை தெரிவித்தார் சிவநாதன்த சர்மா அவர்கள்.




























.jpeg
)





கருத்துகள் இல்லை