யாழ் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு ரஸ்ய படையில் இணைப்பு!
இலங்கையில் முகவர்களின் போலி உறுதிமொழிகளை நம்பி ஐரோப்பா செல்ல முற்பட்ட யாழ் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு ரஸ்ய படையில் இணைப்பு!
இலங்கை அரசியல்வாதிகளும் இதற்கு உடந்தையாக இருப்பதாக அறியமுடிகின்றது.
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ரஷ்யா ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றவேளை கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 04.10.2024 அன்று பயணித்த குறித்த இளைஞர் அவரது சகோதரி பிரான்ஸ் நாட்டில் இருப்பதால் அங்கு செல்ல முயற்சித்துள்ளார்.
அந்த இளைஞனுக்கு ரஷ்ய விமான நிலையத்தில் தரை இறங்கி அங்கிருந்து முகவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய விமான நிலையத்தில் தரையிறங்கிய இளைஞனுடன் முல்லைத்தீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரும் குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் பயணித்துள்ளனர்.
இவர்கள் அனைவரையும் ரஷ்ய விமான நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல வேண்டுமென இவர்களை கூட்டிச் சென்ற முகவர் தெரிவித்துள்ளார். அங்கு இவர்களை பொலிசார் கைது செய்வார்கள் அதன் பின் அவர்களை இலகுவாக வெளியே எடுத்துகொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். பின்னர் இவர்களை இராணும் கைது செய்தது இவர்களை அங்குள்ள இராணுவ முகாமில் தங்க வைத்து 2 கிழமைக்கும் மேலாக சாட்டுப்போக்கு சொல்லி அதன் பின் ஆளுக்கு 30 இலட்சம் கொடுத்தால் தான் ரஷ்ய இராணுவத்தினர் அவர்களை விடுதலை செய்வார்கள் என்று அவர்கள் குடும்பத்தினரிடம் இருந்து மீண்டும் தலா 30 இலட்சம் ரூபா வாங்கியுள்ளனர். அதன் பின் விடுதலை செய்வதாக தெரிவித்து ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட கடிதத்தில் கையெழுத்து வாங்கிவிட்டு ரஷ்ய இராணுவத்தின் ஒரு வருட கட்டாய சேவைக்காக சீருடைகள் வழங்கி 15 நாட்கள் பயிற்சியின் பின்னர் உக்ரைனின் எல்லையில் போருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக குருநகர் பகுதியை சேர்ந்த கோமஸ் அதிஸ்ரராஜா மிதுர்ஷன் என்ற 25 வயது இளைஞன் தாயாருக்கு தனது புகைப்படங்களைத் பகிர்ந்து நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து தாயார் தனது மகனையும் ஏனையவர்களை மீட்பதற்கு ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு மனு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
எனவே முகவர்ளின் போலி உறுதி மொழிகளை நம்பி ரஷ்யா ஊடாக ஐரோப்பிய தேசங்களுக்கு வருபவர்கள் மிகுந்த அவதானத்துடன் நடக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள்.
கருத்துகள் இல்லை