கணியன் - சுரேஷ் தர்மா!!
கீழ்வானம் மெல்லச் சிவந்து கொண்டிருந்தது. ஆதவனின் வருகைக்கான ஆயத்தங்கள் ஒவ்வொன்றாக ஆரம்பிக்க, புறாக்கள புடவை விரித்தது போன்ற தோற்றத்தில் ஒரு சேனையாகப் பறந்து சென்றன.
"நாங்கள் என்ன குறைச்சலோ" என்பது போல பின்னாலேயே பச்சைக் கிளிகளும் ஆகாய வெளியில் பச்சிலைகளை எடுத்துப்போட்டது போல , தமது பறத்தலை ஆரம்பித்திருந்தன.
கைகளை நீட்டிச் சோம்பலை முறித்தபடி எழுந்து அமர்ந்து கொண்டேன். .
எனக்குச் சற்றுத்தள்ளி விறாந்தையில் படுத்திருந்த மனைவி மாதுமையை எழுப்ப நினைத்து, " இஞ்சேரப்பா...மா..." வாய் வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டேன்.
*இரவு, கைகாலெல்லாம் உழையுது எண்டு கன நேரமா உழட்டிக்கொண்டு படுத்தவள் ...நேற்று தோட்டத்துக்கை முழு நேரமா கச்சான் பிடுங்கினது...பாவம் படுக்கட்டும்....* என நினைத்தபடியே தலையணைக்கு அருகில் சுருட்டி வைத்திருந்த எனது துண்டை எடுத்து தோளில் போட்டபடி அந்த இரும்புக் கட்டிலின் ஒருபக்கச் சட்டத்தில் கையை ஊன்றி எழுந்து கொண்டேன்.
நடக்கும் போது தான் தெரிந்தது, கால் விரல்களுக்கிடையே செம்பாட்டுப் புழுதி சரியாக களராத மாதிரி சிவப்பு பிசிறுகள் போல ஒட்டிக்கொண்டிருந்தன.
நேற்று இருட்டிப்போன பிறகு குளிச்சது, வடிவா கால் உரஞ்சுப்படேல்லை, நல்ல காலம் மாதுமை காணேல்லை" என்று எனக்குள்ளேயே நினைத்துக் கொண்டு காலைக்கடமைகளை முடிப்பதற்காக நடந்தேன்.
நடக்கும் போதே, வேலியோடு நின்ற வேப்பமரத்தில் ஒரு குச்சியை உடைத்து எடுத்துக் கொண்டு கிணற்றடி மேடையில் அமர்ந்த படி, வேப்பங்குச்சியின் தோவை உரித்து சற்றுத் தள்ளி நின்ற வாழை மரத்தின் அடியில் போட்டுவிட்டு பல்லை விளக்கத்தொடங்கவும் பட்டியில் நின்ற கணியன் "ம்மா..." என்று உரத்த குரலில் கூப்பிடவும் சரியாக இருந்தது.
"கொஞ்சம் பொறு....அம்மா இன்னும் எழும்பேல்லை...அசந்து படுத்திருக்கிறா...எழும்பின உடனே தவிடு கரைச்சு வைப்பா...." என்று சொல்லிக்கொண்டே கிணற்றடிக்கு நடந்தேன்.
குனிந்து பார்த்கேன். பளிங்கு போல தெளிந்திருந்த கிணற்று நீரில் என் உருவம் அப்படியே தெரிந்தது.
*சர்....* என்று கப்பியில் சுழன்ற வாளி, கிணற்று நீரில் அமிழ்ந்து நிறைந்தது. நைலோன் கயிற்றைப் பிடித்து மெல்ல வாளியை மேலே எடுத்து தண்ணீரை அருகில் இருந்த அலுமினிய வாளியில் நிறைத்தேன்.
சில்..என்று குளிர்ந்த நீர் கால்களில் பட்டதும் இதயம் இதமானது.
"கிணற்று வாளியில் முகம் கழுவக்கூடாது...." எப்போதோ ஒரு காலத்தில் அப்பு சொன்னது என் சிந்தனையில் வந்து போனது, அந்தக் காலத்தில் பெற்றவர்களும் பெரியவர்களும் சொல்லித்தந்த விசயங்கள் ஆழ்மனதில் தங்கி ஒரு அழியாத சித்திரமாகத் தங்கி விடுகிறது.
முதலில் கால்களைத் தேய்த்து நன்றாக கழுவினேன்....
இது இப்படியே இருந்தால் பிறகு,
மாதுமைக்குத்தான் வேலைகூட , தானே அந்த வேலையைச் செய்து விடுவா....
மாதுமைக்கு கால் கை மிகச் சுத்தமாக இருக்க வேண்டும்...
கால்களில் மண் படிந்து கிடந்தால், அது கிடக்கட்டுமப்பா...பிறகும் தோட்டத்துக்கை தானே போறது...என்றால்,
' அதுக்காக.....அப்பிடியே விடுறதே...தோட்டத்துக்கை நிக்கிற வரைக்கும் தான் அந்த வேலை, தோட்டத்தாலை வந்திட்டால் வடிவா கழுவி எண்ணெய் பூசி கால்கையை சுத்தமாக்க வேணும்...." என்பா ஒரு ஆசிரியரின் கண்டிப்புடன்,
எனக்கு தலைக்கு எண்ணெய் வைப்பது முதல் குளிப்பதற்கு சுடுநீர் கலந்து தருவது வரை மாதுமைதான் எல்லாம் செய்வா.
அதோட நிற்காது, "உங்களுக்கு ஏலாமல் அலுப்பாக இருக்கும்...இனி நானே கால்களைக்கழுவி எண்ணெய் பூசுறன்.. சரியா..." நிறைந்த பாசத்துடன் மாதுமை சொல்கிற போது, சுரக்கின்ற அந்த தாயன்பு என்னை அப்படியே உருகிப் போகச் செய்துவிடும்....
கால்களை உரஞ்சியபடியே...மாதுமையைப் பற்றிய எண்ணங்கள் என்னை நிறைக்க, அப்படியே எழுந்து அருகில் இருந்த தொட்டியில் அமர்ந்தேன்.
மாதுமை....
எனக்கொரு வரமாய் வாய்த்த தேவதை....
2009 இல் நடந்த இறுதிப் போரில் மனைவியையும் ஒரே மகனையும் ஒரே நேரத்தில் இழந்து விட்டவன் நான்.
தனிமையான வாழ்வில் ஏனோ தானோவென்று ஒரு பைத்தியக்காரன்போல வாழ்ந்து கொண்டிருந்தேன்.
சிறுவயது முதலே தோட்டம் செய்வது, வயல் விதைப்பதுதான் தொழில். இடையே தேசக்கடமைகளையும் செய்து முடித்தேன்.
முள்ளிவாய்க்காலில் என் மனைவியையும் மகளையும் எறிகணை வீச்சில் இழந்த போது உலகமே இருண்டு போன உணர்வுதான் எனக்கு.
மீள்குடியேற்றம் வந்த போது மிஞ்சியிருந்தது அந்த தோட்டக்காணியும் வயல் காணியும் தான்.
மீளக்குடி அமர்த்தப்பட்ட போது, வந்திறங்கி
ஓ...வென்று இருந்த காணியில் தனிமையில் நின்ற போது வாழ்க்கை பெரிய வெறுமையாகத்தான் இருந்தது.
நிம்மதியான அமைதியான வாழ்க்கையின் சுவடுகள் அழிந்து அவலத்தின் சின்னமாக நிற்பது போல உணர்ந்தேன்.
அகதி வாழ்வில்தான் எனக்கு மாதுமையின் அறிமுகம் கிடைத்தது.
இடம்பெயர்ந்து வவுனியா - செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாமில் இருந்த காலத்தில் எனது தறப்பாள் கொட்டகைக்கு மறுபுறத்தில்தான் மாதுமையின் குடும்பம் இருந்தது.
மாதுமையின் கணவன் ஒன்றுக்கும் உதவாத ஊதாரி. யாரோ ஓரிரு உறவினர்கள் அனுப்பிய வெளிநாட்டுக் காசில் விலாசமாக வாழ்ந்து கொண்டிருந்தான்.
காணும் போது ஒரு சிரிப்பு மட்டுமே எனக்கும் மாதுமையின் கணவருக்குமான நட்பின் அடையாளம்.
என்னைச் சூழ்ந்திருந்த அந்தச் சோகம் ....அது தந்த இயலாமை, அந்த நெருக்கடி வாழ்வில் எற்பட்ட நோய்கள், இவைகளால் பெரும்பாலும் உள்ளேயே படுத்தபடி இருக்கும் நான் மாதுமைமைக் கண்டதே இல்லை.
ஆனால் கொட்டகையின் மறுபக்கத்தில் நடக்கும் பேச்சும் ஏச்சும் சண்டையும் என்னைத் தூங்க விடாமல்செய்யும்.
எப்போதும் கணவனின் அதிகாரமும் மனைவியின் அடங்கிப் போதலும் சில நேரங்களில் எனக்கு எரிச்சலையும் சில நேரங்களில் கோபத்தையும் கொடுக்கும்.
"இந்தப் பெண் வாய் திறந்தால் தான் என்ன...ஏன்தான் இப்படி பேசா மடந்தையாக இருக்கிறாளோ...இப்படி இருந்து எதைச் சாதிக்கப் போகிறாள்..." என எனக்குள் நானே நினைப்பதும் கோபத்தில் மனம் துடிப்பதும் உண்டு.
வீரிட்டு அழும் குழந்தை ஒலி, என்னை ஏதோ செய்யும். எறிகணை வீச்சில் பலியான என் மகனின் நினைவு வந்து இதயத்தைத் துண்டு துண்டாக உடைக்கும்.
ஒரு நாள் காய்ச்சலும் சத்தியுமாக அவதிப்பட்டுக்கொண்டிருந்த எனக்கு அன்றைய சண்டை பெரும் துன்பத்தைத் தந்தது.
."தம்பி., ஏலாமல் படுத்திருக்கிறன்...கொஞ்சம் சத்தம் போடாமல் இருங்கோ..." என்றேன்.
"ஆரடா...அது...நான் என்ர வீட்டிலை சத்தம் போடுறன்..என்னை ஆர் கேக்கிறது..." எனறு பிரச்சனை திசை திரும்பி விட்.டது.
என்னால் எதுவும் பேச முடியவில்லை...தலை தூக்க முடியாத அளவுக்கு காய்ச்சலும் தலைவலியுமாக இருந்தது.
' சே...என்ன மனுசனடா...' என்று எண்ணத் தோன்றியது.
எழுந்திருக்க முடியாத அந்த அசதியிலும் முயன்று குரலை உயர்த்தி,
' தம்பி...தலைவலியும் காய்ச்சலும்...தயவு செய்து நிம்மதியா படுக்க விடுங்கோ" என்றேன் சற்று சமாதானமாக.
' என்ர வீட்டிலை என்ர விருப்பத்துக்கு ஏற்றபடிதான் நான் இருப்பன்...இஞ்ச ஆரும் ஒண்டும் கதைக்கேலாது....." அடாவடித்தனமான அவனுடைய பதிலில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
'அதிகமாக குடித்திருக்கிறான் போல....' என நினைத்துக் கொண்டு
பேசாமல் அமைதியாக இருந்தேன். என்னுடைய அமைதி அவனுக்கு எரிச்சலை கிளப்பியிருக்க வேண்டும்...
அவனுடைய எண்ணங்களும் சிந்தனைகளும் பற்றி அறியாதவன் என்பதால் நான் மௌனமாக இருக்கவும்
"ஆரடி அது...உனக்காக கதைக்கிறான்...உனக்கு பரிஞ்சு கதைக்கிறான் எண்டால் காரணம் இல்லாமல் இருக்காது..." அவனுடைய இந்தக் கேள்வியில் நானும் உறைந்து போனேன்..
அவனுடைய மனைவியும் உறைந்துதான் போயிருக்க வேண்டும்..
பேச்சற்ற மௌனமும் சிறு கேவல் அழுகை ஒலியும் கேட்டது.
எந்தப் பெண்ணுக்குமே கேட்க கூடாத வார்த்தைகள் இவை.
'ஒரு பெண்ணின் கண்ணீர் இவனைப் போன்ற ஆண்களுக்கு எவ்வளவு இலகுவாகிவிட்டது...பாவம் அந்தப் பெண்..' என் மனம் அந்த முகம் தெரியாத பெண்ணுக்காக பரிதாபப்பட்டது.
நான் ஏதாவது கதைக்கப்போக அது அந்தப் பெண்ணுக்குத்தான் துயரமாக முடியும் ' என நினைத்தபடி மெல்ல எழுந்து வெளியே வந்து, சற்று தள்ளியிருந்த ஒன்றுகூடல் கட்டடத்திற்குள் சென்று ஒரு ஓரமாகப் படுத்துக் கொண்டேன்.
வேறு சிலரும் அங்கு படுத்திருந்தனர், சிலர் நோயாளராகவும் சிலர் சாதாரணமானவர்களாகவும் இருந்தனர்.
அன்று பகல் பொழுது முழுவதையும் அங்கேயே போக்கிவிட்டு, பொழுது சாயத்தொடங்கிய நேரம்,
அருகில் இருந்த சமையல் கூடத்தில் இரவு உணவுக்காக சமைத்திருந்த றொட்டியிலும் இரண்டை வாங்கிக்கொண்டு எனது தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தேன்.
பக்கத்தில் சத்தம் எதுவும் கேட்கவில்லை. நானும் சத்தமிடாமல் கொண்டு வந்த உணவைச் சாப்பிட்டுவிட்டு படுக்கையில் விழுந்தேன்.
மறுநாள் அதிகாலையிலேயே நான் ஒன்றுகூடல் மண்டபத்திற்குச் சென்றுவிட்டேன். மதிய உணவையும் அங்கேயே சாப்பிட்டு , உறங்கிவிட்டு, மாலையில் வந்த போது, மாதுமையின் கணவன் பெரிய சத்தமாக சண்டையிட்டுக்கொண்டிருந்தான்.
'இதென்னடா...துன்பம்...' என்றெண்ணியவாறு உள்ளே நுழையவும்
"உன்ரை ஆள் வந்திட்டான்....போல...." என்ற சத்தம் செவிகளில் வந்து மோதியது.
இவனோடு சண்டை போடுவதோ, பதிலுக்கு கதைப்பதோ பெரிய விசயமில்லை, ஆனால்
நாங்கள் இருந்த இடம் என்ன, வாழ்ந்த வாழ்வென்ன...., எங்களுடைய தரத்தை நாமே தாழ்த்திக்கொள்வதா...." என நினைத்தபடி எதுவும் விளங்காத மாதிரி உள்ளே சென்று அமர்ந்து கொண்டேன்.
ஏதேதோ வார்த்தைகள்...அவனுடைய வாயிலிருந்து வந்து கொண்டிருந்தன. அந்த வார்த்தைகளால் அந்தப் பெண்ணின் மனம் வெந்து வேகிக் கொண்டிருக்கும் என்பதும் புரிந்தது.
வார்த்தைகளற்ற அவளுடைய மௌனம் அவளுடைய மன வேதனையின் உச்சத்தை சொல்லாமல் புரிய வைத்தது.
இரண்டு மூன்று நாட்கள் அந்த வீட்டில் சண்டை ஓயாமல் நடந்தது.
அதை, சண்டை என்று சொல்லமுடியாது, அவன் மட்டுமே தர்க்கம் செய்து கொண்டிருந்தான்.
தண்ணிக்கு வரிசையில் நின்ற போது ஒரு ஆண் பின்னால் நின்றானாம், அதற்கொரு சண்டை,
சாப்பாடு எடுக்கச் சென்ற போது, சமையல் கூடத்தில் நிற்வர்களிடம் கதைத்துவிட்டாளாம், அதற்கொரு சண்டை,
வெளியே அவள் உடைகள் காயவைத்த போது யாரோ ஒருவன் பார்த்தபடி சென்றானாம், அதற்கொரு சண்டை...
எனக்கு அதை எல்லாம் கேட்க விசித்திரமாகவே இருந்தது. நானும் என் மனைவியும் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துக் கொண்டேன்...
இல்லறம் என்பது இனிய பந்தம், அதை எப்படி எல்லாம் தூக்கிப்போட்டுப் பந்தாடுகிறார்கள்....
நினைத்தபடி அன்றைய இராத்திரி உறங்கிப் போனேன்.
நடு இரவில் பக்கத்து கூடாரத்தில் கேட்ட அமளிதுமளியில் எழுந்து அமர்ந்துவிட்டு, என்ன ஏதென்று பார்க்கலாம் என்றாலும் அவன் பிறகு ஏதும் சொன்னாலும் எனப் பேசாமல் இருந்தேன்.
சிறிது நேரம் வரை, இருந்தாலும் பிறகு மனம் கேட்காமல் வெளியே வந்து அடுத்த பக்கமாகச் சென்று எட்டிப் பார்த்தேன்.
"என்ன...ஏதும் வருத்தமோ?"
சுடுநீரை ஆற்றியபடியே சட்டென்று நிமிர்ந்து பார்த்த அந்தப் பெண்,
"நெஞ்சுவலி...அவருக்கு" என்றாள்.
அப்போதுதான் நான் மாதுமையை முதல் முதலாகப் பார்த்தேன்.
அவளுடைய விழிகளுக்குள் நிறைந்து கிடந்த நிராசையும் வெறுமையும் அந்த மெல்லிய வெளிச்சத்தில் அப்படியே தெரிந்தது.
ஒரு ஆண் குழந்தை மாதுமையோடு ஒண்டியபடி இருந்தான்..
மகன் போல...ஆறு ஏழு வயதிருக்கும்...தாயின் பக்கத்தில் ஒட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
சற்றுத்தள்ளி இறப்பர் பாயில் படுத்திருந்த அவளுடைய கணவன் நெஞ்சுவலியில் துடித்துக் கொண்டிருந்தான்.
"சுடுதண்ணியைக் குடுங்கோ....வாறன்...ஆரும் ரெண்டு பேரைக்கூட்டிக்கொண்டு..."என்றபடி சுற்றி நடந்து, அடுத்த கொட்டகை தம்பியையும் அவனுடைய மனைவியையும் அழைத்துக்கொண்டு உள்ளே வரவும் மாதுமையின் கணவன் நினைவின்றி மயங்கிப்போனான்...
மாதுமை பெருங்குரலில் கத்தவும் நாங்களும் விரைந்து ஓடிவந்து பார்த்த போதுதான் நிலைமையின் தீவிரம் புரிந்தது.
உடனடியாக ஓடிச்சென்று முன்னால் இருந்த அலுவலகத்திற்கு அறிவித்து, அவர்கள் வைத்தியசாலைக்கு அறிவித்து மாதுமையும் கணவனோடு சேர்த்து வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லப்பட்டதும் மகனையும் சேர்த்து அனுப்ப கேட்டோம்.
அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை.
"சரி...நான் பார்த்துக் கொள்கிறேன்" எனக்கூறி அவர்களை அனுப்பிவிட்டு மாதுமையின் மகனையும் அழைத்துக்கொண்டு எனது கூடாரத்திற்கு வந்தேன்.
கணவனோடும் போக வேண்டும்...மகன் தனிய...யாரென்றே தெரியாத என்னோடு...
மாதுமை தவித்து நின்ற கோலம் உண்மையில் என் மனதை என்னவோ செய்தது.
எனது கொட்டகைக்குள் இருவரும் வந்ததும் எனது பாயில் இன்னொரு தலையணையையும் வைத்து
'படு' என்றேன் அவனுடைய மெலிந்த கரங்களைப்பிடித்தபடி.
மறுபேச்சின்றிப் படுத்துவிட்டான்.
மெல்ல மெல்ல நான் அவனைத் தடவிக்கொண்டிருக்க, அந்த சுகத்தில் கண்டயர்ந்து உறங்கிப் போனான்.
ஆழ்ந்து உறங்கும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவன் ...மாதுமையின் சாயலைக்கொண்டு பிறந்திருந்தான். எனக்குள் என் மகன் மீதான ஏக்கம் பீறிட்டு எழுந்தது.
எனது தலையணையைச் சரி செய்து விட்டு அவனுக்கு மிக அருகில் நெருக்கமாகப் படுத்தபடி அவனை அணைத்துக் கொண்டே அப்படியே தூங்கிப் போனேன்.
அன்று மாலையில் தகவல் வந்தது மாதுமையின் கணவன் ஈரல் பழுதடைந்திருந்ததால் இறந்துவிட்டதாக.
யாரோ உறவினர் வீடு வவுனியாவில் இருந்ததால் அங்கேயே உடலைக் கொண்டு சென்றிருந்தனர்.
உறவினர்கள் வந்து மாதுமையின் மகனை அழைத்துச் சென்றனர்.
ஒருவாரம் கழித்து மாதுமை மீண்டும் வந்த போது சுற்றியிருந்த கூடாரத்து உறவுகள் சென்று துக்கம் விசாரித்தார்கள்.
நான் போகவில்லை...மாதுமையின் கணவனைப்பற்றி அருகே இருந்தவர்களுக்குத் தெரியும் என்றாலும் இளம் விதவையான அவளுக்கு எந்தக் கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.
இதன் காரணமாகவே புதிதாக அமைத்த கூடாரங்களில் ஒன்றுக்குப் பதிவு செய்து அன்று மாலையே எனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டேன்.
அந்த ஒரு நாள் மாதுமையின் மகன் தந்து போன பிள்ளை வாசம் என் நெஞ்சில் அப்படியே பதிந்து போயிருந்தது.
அதன் பிறகு எப்போதாவது அந்தப் பக்கம் போகும் போது மாதுமையின் மகனைப் பார்த்து, அவனுடைய கையில் ஏதாவது சாப்பிடும் பொருட்களைக் கொடுத்துவிட்டு வருவேன்.
மீள்குடியேற்றம் என்று எல்லோரும் அவரவர் இடத்திற்கு அனுப்பப்பட, நானும் என் சொந்த இடமான கிளிநொச்சிக்குப் போய்விட்டேன்.
இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன.
ஒருநாள் வைத்தியசாலையில் இருந்த நண்பனின் மகளைப் பார்ப்பதற்காக அவனோடு போன போது, பக்கத்துக் கட்டிலில் இருந்த மாதுமையையும் மகனையும் கண்ட போது, எனக்குள் மடிந்து கிடந்த ஏதோ ஒன்று உயிர் பெற்ற ஆசுவாசம் ஏற்பட்டது.
நண்பனின் மகளுக்கு காய்ச்சல் என்று அனுமதித்திருந்தனர். அந்தச் சிறு குழந்தையைப் பார்த்துவிட்டு மாதுமையின் பக்கமாகத் திரும்பி,
"என்ன வருத்தம் மகனுக்கு?" என்றேன்.
மெல்லத் திரும்பி, என்னைக்கண்டதும் புருவம் உயர்த்தி யோசித்த மாதுமை அடையாளம் கண்டு கொண்டது போல, சிரிக்கவும் தலையை ஆட்டி என் அறிமுகத்தை முடித்துவைத்தேன்.
"காலில ஒரு கட்டு..." சொன்ன மாதுமையின் விழிகளில் ஈரக்கசிவு.
அந்த நேரத்தில் தாய்மையின் தாளாத கனிவை நன்றாக உணர்ந்து கொண்டேன்.
மாதுமையின் அந்த விழிகளுக்குள் நிராசை அப்படியேதான் இருந்தது.
சுருண்டு படுத்திருந்த மகனின் கன்னங்களை இலேசாகத் தட்டியதும் அவன் விழித்துக்கொண்டான்.
" வலிக்கிறதா..." என்றேன்.
படுத்தபடி தலையை ஆட்டினான்.
"என்னைத் தெரிகிறதா?" என்றேன்..கண்டு கொண்டதன் அடையாளமாக அவனுடைய பூமுகத்தில் புன்னகை விரிந்தது.
அப்படியே அவனை அள்ளி எடுத்து என் மார்போடு இறுக்கி அணைத்துக் கொள்ள வேண்டும் போன்ற தந்தைத்துடிப்பில் தவித்துப் போனேன் நான்.
அவனுடைய கைகளைத் தடவி, விட்டு, என்னிடம் இருந்த 1000 ரூபா தாள் ஒன்றை எடுத்து அவனது விரிந்திருந்த கைகளுக்குள் வைத்தேன்.
அங்கும் இங்கும் கையை அசைத்தவன் என்னுடைய ஆழ்ந்த பார்வையில் என்ன உணர்ந்தானோ அப்படியே பொத்திக் கொண்டான்...
அதன்பிறகும் வங்கியில் ஒருமுறை கண்ட போது மாதுமை பேசாமல் போனது கொஞ்சம் சங்கடமாக இருந்தது என்றாலும் ஒரு இளம் விதவை தனக்குப் போர்த்திக் கொண்ட பாதுகாப்பு கவசம் அது என்று பேசாமல் போய்விட்டேன்.
இன்னொரு நாள், இருள் சூழ்ந்து பொழுது சாய்ந்த ஒரு பொழுதில் மகனைக் கையில் பிடித்தபடி மாதுமை வீதியில் நடந்து போவதைக் கண்ட போதுதான், ஓடிச்சென்று விசாரித்தேன்.
பக்கத்து வீட்டில் உள்ள ஒரு குடிகாரனால் தன்னால் அங்கு வாழமுடியவில்லை எனவும் அவனுடைய கட்டுக்கதைகளை நம்பி அவளுடைய உறவுகளும் அவனையே திருமணம் செய்து வைக்க நினைப்பதாகவும் சொல்லிவிட்டு வீதியில் நின்று விம்மியழ முடியாது அவள் பட்ட துயரம்...
"என்னையும் இவனையும் எங்கையாவது ஒரு ஆதரவற்றோர் இடத்தில் சேர்த்து விடுறீங்களா?" மாதுமை துயரத்தோடு கேட்ட போது நான் பேச்சற்றவனாகிப் போனேன்.
நேரம் பொழுது சாய்ந்து கொண்டிருந்தது.
"இப்பஎங்க...விடுறது...இருட்டப்போகுது..." எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை...மனமெல்லாம் பாரமாகிக்கிடந்தது, யாருடைய வீட்டிலும் இந்தக்காலத்தில் விடவும் முடியாதே...அதைவிட...எப்படிக் கூட்டிச் சென்று விடுவது...
நினைக்கும் போதே, பக்கத்துவீட்டு பரிமளம் ஆச்சியின் நினைவு வந்தது. ஆச்சி மிகவும் நேர்மையானவர், சிறந்த முற்போக்குச் சிந்தனை கொண்டவர்...
"சரி...இப்ப வாங்கோ...பக்கத்து லீட்டு ஆச்சியோடை இருங்கோ...நாளைக்கு நான் இல்லம் ஒன்றிலை கூட்டிக்கொண்டு போய் சேர்த்து விடுறன்..."
மறுபேச்சின்றி மகனை ஒரு கையில் பிடித்தபடி எனது சைக்கிளின் பின்னால் நடக்கத்தொடங்கிய மாதுமையைப் பார்த்த போது நெஞ்சு வெடித்துவிடும் போன்றதொரு துயரம் ஏற்பட்டது.
'இனி என்ன நடந்தால் என்ன' என்கிற துயரம் அந்த நடையில் இருந்தது. மாதுமையின் மகனை துவிச்சக்கர வண்டியில் தூக்கி ஏற்றிவிட்டு மெல்ல ஓடியபடி பரிமளம் ஆச்சியின் வீட்டை அடைந்தேன்.
மாதுமையின் முகம் வீங்கியிருந்த கோலம், மாதுமையின் உடையின் கசங்கல் இவை எல்லாவற்றையும் வைத்து நடந்ததை நான் சொல்லாமலே ஓரளவு ஊகித்த ஆச்சி, எதுவும் கேட்காமலே
"உள்ள வா மோனை" என அழைத்துச் சென்றுவிட்டா.
மறுதாள், தாங்கள் இருவரும் ஆச்சியுடனே இருக்கப் போவதாக மாதுமை சொன்ன போது நானும் சற்று நிம்மதி அடைந்தேன்.
நாட்கள் ஓடின...மகனை பாடசாலையில் சேர்க்கிற பொறுப்பை கவனித்துச் செய்து கொடுத்தேன்.
மாதுமையின் மைந்தன் அதிக நேரம் என்னோடுதான் இருந்தான்...பட்டுப்போயிருந்த என்னுடைய இதயத்தில் அவன் பாலூற்றினான்....
மாதுமையும் சாதாரணமாக என்னோடு பேசிப்பழக ஆரம்பித்திருந்தா,
மாதுமையும் மகனும் ஆச்சியோடு இருந்ததில் எனக்கும் நிம்மதியாக இருந்தது. "இவர்கள் இருவரும் ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்பதா..." என்கிற நினைப்பே முதல்நாளில் கசந்து வழிந்தது..
ஓரளவு வாழ்க்கை இயல்பான போதுதான் பரிமளம் ஆச்சி நோய்வாய்ப்பட்டார். அவரது கடைசி நாட்களில் நானும் மாதுமையும் அவரை நன்றாகவே பார்த்தோம்.
உயிர் விடும் கணங்களில், அந்த பகுத்தறிவும் பக்குவமும் கொண்ட மூதாட்டி, மாதுமையை என்னிடம் ஒப்படைத்துவிட்டு இறந்துவிட, எங்கள் மூவருக்குமான ஒரு வாழ்க்கை ஆரம்பமானது.
வீட்டில் நின்ற சிவலைப்பசு போட்ட நாம்பன் கன்றுக்குட்டிக்கு 'கணியன்' என்று பெயரிட்டது மாதுமையின் மகன்தான்.
இதோ...சாரணர் பாசறைக்குச் சென்றிருக்கிறான் மாதுமையின் மகன்.
''என்ன...அப்பிடியே இருக்கிறியள்...' மாதுமை கேட்கவும்தான் சுயநினைவிற்கு வந்தேன்...
"சும்மாதான்....பழைய யோசினை..." ஏன்றபடி நான் எழுந்து கிணற்றடியைவிட்டு வரவும்
'இவன் கணியன் கத்திக்கொண்டே இருக்கிறான்... தவிடு கயைச்சு வைச்சிட்டு வாறன்..." என்றபடி மாட்டுக்கொட்டகையை நோக்கிச் சென்ற மாதுமை, ஏதோ நினைத்து என்னைத் திரும்பிப் பார்க்கவும் நானும் புன்னகைத்தேன்.
எண்ணங்களில் இருந்து விடுபட்டு உள்ளே வந்து நீரைக் கொதிக்க வைத்தபடி நிற்கவும் அலைபேசி ஒலித்தது...
எடுத்துக் காதுக்கு கொடுத்தேன்.
"இண்டைக்கு ஆறு மணிக்கு பள்ளிக்குடத்திலை வந்து நில்லுங்கோ..." பொறுப்பாசிரியர் சொன்னதுதான் தாமதம்....
எனக்குள் ஆனந்த அலைகள் குமிழி குமிழியாக எழுந்தன.
இருபது நாட்களாயிற்று அவன் மோய்...
"பரவாயில்லை...தைரியமாகப் போய் வந்துவிட்டான்...' நினைத்தபடி வெளியே வந்து மாதுமைக்கு குரல் கொடுத்தேன்.
" தம்பி இண்டைக்கு வந்திடுவானாம்....'
"ஓ...சரிசரி...உங்களுக்குத்தான் ஏக்கம் கூட"
மாட்டுக் கொட்டகையில் நின்றபடி தலையாட்டிக்கொண்டு சொன்ன மாதுமையைப் புன்னகையோடு பார்த்தேன்.
ஆச்சியோடு இருந்த காலத்தில், ஒருநாள், மாதுமையின் உறவுகள் வந்து அவர்களை அழைத்துச் செல்ல முற்பட்டபோது, என்னை இறுக்கிக்கட்டிப்பிடித்துக்கொண்டு மாதுமையின் மகன் அழுத அழுகை....
பெருமூச்சு வெளிப்பட்டது என்னிடமிருந்து.
ஓரிரு தடவைகள் வீட்டுக் கஸ்ரத்தையும் மாதுமையின் மகனின் படிப்பையும் முன்னிட்டு கணியனை விற்க நினைத்த போதும் மாதுமையின் மகன் விடவில்லை.
அவனே தன்னுடைய பெயரை வைத்து அவனே பார்த்துப்பார்த்து வளர்த்த கன்று அது.
அவனென்றால் கணியனுக்கும் பெரும் கொண்டாட்டம்தான்...
அன்று மாலை மாதுமையின் மகனை ஏற்றி வருவதற்காகச் சென்ற நிலையில்
அத்தனை பேரும் அவனைப்பற்றியே, அவனுடைய திறமைகளைப்பற்றியே கதைத்தனர்...
நான் நிமிர்ந்து பார்க்க,
"அப்பா.....நீங்கள் தான் என்னுடைய நாயகன் " என்றான் பதின்நான்கு வயதான கணியன் சைக்கிளில் ஏறியபடியே...
இதுவரை அவன் 'அப்பா' என்று சொன்னதில்லை.
நான் என் மகனை இழக்கவே இல்லை என்கிற நினைப்பு ஆழமாக என் மனதில் வேரூன்றியது.
சிரித்தபடியே சைக்கிளை ஓடிக்கொண்டிருந்தேன்...
சைக்கிள் இறக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்தது.
எழுத்து - சுரேஷ் தர்மா
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
சுரேஷ் தர்மா
கருத்துகள் இல்லை