ஒரே சீனக் கொள்கையை கையிலெடுத்த “அனுர” தரப்பு !
ஒரே சீனக் கொள்கையை கையிலெடுத்த “அனுர” தரப்பு – வடக்கு - கிழக்கில் இருப்பை வலுப்படுத்தும் இந்தியா - வலிகளை சுமக்கும் பரிதாப நிலையில் மக்கள்.
திபெத்தின் அரசியல் நிலை குறித்து, இலங்கையின் முன்னைய அரசாங்கங்கள் அமைதியாக இருந்துவந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதி அனுர தலைமையிலான அரசாங்கம் கடந்த அரசாங்கங்களின் மௌனிப்புகளுக்கும் அரசியல்ல் நகர்வுகளுக்கும் நிறுத்தல் புள்ளியிட்டு ஒரே சீனா கொள்கைக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது.
அனுர தரப்பின் இந்த நிலையானது இலங்கையின் அயல் நாடான இந்தியாவுடனான பிணைப்பில் பாரிய விரிசலை உருவாக்கியுள்ளதுடன் இலங்கையின் நலன்களிலும் அது பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முன்பதாக ஜிசாங் என்ற திபெத் மற்றும் ஜின்ஜியாங் என்ற உய்குர் தொடர்பான பிரச்சினைகளில் சீனாவை ஆதரிக்கவும், இந்த இரண்டு பிரச்சினைகளையும் ஒரே சீன கொள்கையுடன் இணைக்கவும் இலங்கையின் புதிய அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
திபெத் சீனாவின் ஒரு பகுதி என்றும், சீனாவைப் பிரிக்க தாங்கள் விரும்பவில்லை என்றும் திபெத் பிரச்சினையை ஒரே சீனா கொள்கையுடன் இணைக்கும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு அறிக்கையின், இலங்கையின் நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகின.
இதேநேரம் சீனாவின் ஆட்சேபனைகள் காரணமாக, கண்டியின் புனித தந்தம் மற்றும் அனுராதபுரத்தின் ஸ்ரீ மகா போதி ஆகியவற்றை வழிபட தலாய் லாமா விடுத்த வேண்டுகோளை, இலங்கை அரசாங்கங்கள் நிராகரித்தன. ஆனால் திபெத்தின் அரசியல் நிலை குறித்து, இலங்கையின் முன்னைய அரசாங்கங்கள் அமைதியாக இருந்தன.
அதுமட்டுமல்லாது கடந்தகாலங்களில் திபெத் பிரச்சினையை இலங்கையுடனான கூட்டு அறிக்கைகளில் கொண்டு வருவதற்கான சீனாவின் முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
இந்த நிலைக்கு இந்தியாவுடனான இலங்கையின் பிணைப்புக்கு பாதகங்களை ஏற்படுத்திவிடும் என்ற நோக்கத்தின்பாலானதாகவே அரசியல் அவதானிகளால் பார்க்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த வாரம் பீய்ஜிங்கில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் இடையே நடந்த உச்சிமாநாட்டு அளவிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், "இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் முக்கிய நலன்கள் மற்றும் முக்கிய கவலைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் பரஸ்பர ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
குறிப்பாக இலங்கை, சீனாவின் ஒரே - சீனா கொள்கையை ஆதரிக்கிறது மற்றும் "தாய்வான் சுதந்திரத்தை" எதிர்க்கிறது. ஜிசாங் மற்றும் ஜின்ஜியாங் தொடர்பான பிரச்சினைகளில் இலங்கை சீனாவை "உறுதியாக ஆதரிக்கிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாது தற்போது வெளியிடப்பட்டுள்ள இரண்டு நாடுகளுக்கான கூட்டறிக்கையில், திபெத் மற்றும் உய்குர் என்ற சொற்களுக்கான குறிப்புகளை கைவிட்டுள்ள சீனா, அவற்றுக்குப் பதிலாக ஜிசாங் மற்றும் ஜின்ஜியாங் என்ற பெயர்களைப் பயன்படுத்தியுள்ளது.
இதன்மூலம் சீனா, தாய்வான் பிரச்சினையை திபெத் பிரச்சினையுடன் சமன்படுத்தி, அதை 'ஒரே சீனா கொள்கையின்' கீழ் கொண்டு வந்துள்ளது என்று இராஜதந்திர ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை இலங்கை ஜனாதிபதியின் சீனாவுக்கான அரசமுறை விஜயத்திற்கு முன்னதாக, 'ஒரே சீனா' கொள்கையின் நீண்டகால நிலைப்பாட்டை இலங்கையின் அமைச்சரவை அங்கீகரித்திருந்தது.
எனினும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன பயணத்துக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட 'ஒரே சீனா' கொள்கைக்கான அமைச்சரவை ஒப்புதலில் ஜிசாங் மற்றும் ஜின்ஜியாங் பற்றிய குறிப்புகள் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த காலங்களில் சீனாவின் பால் தமது எதிர்ப்புகளை காண்பித்துவந்த ஜே.வி.பி தரப்பினர் இன்று தமது கொள்கை நிலைப்பட்டை மாற்றிக்கொண்டுள்ளதுடன் முழுமையாக இந்திய எதிர்ப்பு நிலையை உருவாக்கி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை 2022 களில் மிக நொருக்கமாக சீனாவுடன் மிக நெருக்கமான உறவை கொண்டிருந்த ராஜபக்ச தரப்பினரை ஆபத்தில் கைவிட்டு பார்வையாளராக பார்த்திருந்த நேரத்தில் இலங்கையை ஆற்றுப்படுத்தியது இந்தியா என்பதையும் மறந்துவிடுதலாகாது.
அதுமட்டுமல்லாது இலங்கையின் எல்லையில் அதுவும் கை நீட்டும் தூதரத்தில் இருக்கும் இந்தியாவின் நலன்களை கேள்விக் குறியாக்குவதும் இலங்கையின் நலன்களுக்கு ஏற்றதல்ல.
இதேவேளை தமிழ் மக்களின் நலன்களில் இந்தியா அதிக அக்கறை காட்டுவதாக தென்னிலங்கையில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு பின்னணி இருந்துவரும் நிலையில் அனுர தரப்பின் இந்த நிலைப்பாடு அதை வலுவாக்கும் நிலையும் உருவாகியுள்ளது. ஆனால் தமிழர் தரப்பில் அதற்கு நேர் மாறான புரிதலே இருந்துவருகின்றது.
இந்நிலையில் இந்தியா தனது இறையாண்மையின் நலன்களை கருத்திற் கொண்டு இலங்கையின் வடக்கில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துவது இந்தியாவுக்கு அவசியமாகின்றது. அதற்கான செயற்பாடுகளிலும் இந்தியா மிகவும் துரிதமாக ஈடுபடுவதையும் காண முடிகின்றது.
இதேநேரம் இந்த வல்லரசுகளின் அதிகாரப் போட்டியில் தோல்வியுறுபவர்கள் சீனாவாகவோ அன்றி இந்தியாவாகவோ இருக்கப் போவதில்லை. மாறாக இலங்கை என்ற தேசமும் மக்களும் தான் என்பதை உணருவதும் அவசியமாகும்.
முன்பதாக மாற்றம் என்ற தொனிப்பொருளை முன்வைத்து மக்களை ஓரலையாக திரட்டி ஆட்சி அதிகாரத்தை கையிலெடுத்த ஜனாதிபதி அனுர தரப்பு அரசாங்கம் இன்று அதில் சிறிதளவேம் வெற்றி காணமுடியாத நிலையில் இருக்கின்றனர்.
இதனால்NPP என்ற தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்குமாறு மக்களை வலியுறுத்திய குழுக்களை, மக்கள் இன்று மாற்றம் எங்கெ? என்ற கேள்வியை கேட்க தொடங்கியுள்ளனர். இதுமட்டுமல்லாது வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு நிலப்பாட்டில் தோல்வி கண்ட அனுர தரப்பினருக்கு வரவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் ஆதரவு வழங்க தயாரில்லை என்றும் மக்கள் பொது வெளியில் பேசுவதை அவதானிக்க முடிகின்றது.
அந்தவகையில் இலங்கை 2022 களில் பட்ட அனுபவங்களை பாடங்களாக கொள்ளப்படாவிட்டால் அதன் விழைவுகளை சுமக்க மக்கள் தயாராக இருக்க வேண்டியதும் காலத்தின் தேவை.
கருத்துகள் இல்லை