தரமான விடுதிகள் யாழ்ப்பாணத்தில் இல்லை!!
தரமான விடுதிகள் யாழ்ப்பாணத்தில் இல்லை - கண்காட்சியில் பங்கேற்க முடியாத நிலையில் பல நூறு தொழிலதிபர்கள் – கண்காட்சி ஏற்பாட்டுக் குழு அதிர்ச்சித் தகவலாக தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025 ஆரம்பமாகியுள்ள நிலையில் குறித்த கண்காட்சியில் இன்னும் பல வர்த்தகர்களும் தொழிலதிபர்களும் பங்கேற்க இருந்த நிலையில் அவர்கள் தங்குவதற்கேற்ற வகையில் ஆடம்பர விடுதிகளோ தங்குமிடங்களோ யாழ்ப்பாணத்தில் இல்லாத காரணத்தால் அவர்கள் வாராது தவிர்த்துள்ளனர்.
இது வருவாயை மட்டுமல்லாது யாழ்ப்பாணத்தின் தரத்தையும் குறைத்துள்ளதாக யாழ்ப்பாணம் உலக வர்த்தக கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவினர் கடந்த 22 ஆம் திகதி ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது பலமுறை சுட்டியதை அவதானிக்க முடிந்தது.
அவர்களது குறித்த கருத்தானது யாழ்ப்பாணம் இன்னமும் தரக் குன்றிய நிலையில் இருப்பதாகவே காண்பிக்கப்படுகின்றது மட்டுமல்லாது சிலர் திரைமறைவில் இருக்கும் ஒரு சில சக்திகளின் பின்னணியில் இருந்துகொண்டு தமது சுய இலாபத்துக்கான தேவைகளுக்காக எமது யாழ் மாவட்டத்தை தரக்குறைவாக காண்பிப்பதாகவே புலப்படுகின்றது.
தங்குவதற்கு எற்ற தங்குமிடங்கள் இல்லை என இவர்கள் கூறும் நிலையில் புலம்பெயர் தேசத்திலுள்ளவர்கள் பலர் தத்தமது சொந்த பணவலிமையை காட்டுவதற்காக நடுத்தர தரத்தர ரெஸ்ரூரன்கள், விடுதிகள் என ஏராளமான ஆடம்பர தங்குமிடங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றன.
அவ்வாறாயின் அவற்றை எல்லாம் தரக்குறைவானவை என்று இந்த ஏற்பாட்டுக் குழுவினர் கருதுகின்றார்களா? அல்லது தமது தகுதிக்கு ஏற்றவகையில் அவை அல்ல என வகைப்படுத்தகின்றனரா என்ற கேள்வியும் எழுகின்றது.
இதேநேரம் கடந்த காலங்களிலும் இவ்வாறான வர்த்தக கண்காட்சிகள் குறிப்பாக யாழ்ப்பாணம் சர்வதேச கண்காட்சிகள் பல யாழ்ப்பாணத்தில் நடத்திருக்கின்றன. இந்த சந்தர்ப்பம் ஒவ்வொன்றிலும் யாழ்ப்பாணத்தை வர்த்தக சந்தையாக மாற்றுவதற்கான ஏற்பாடுதான் இது என கூறப்பட்டே நடந்து முடிந்திருக்கின்றன. ஆனால் முடிந்த அந்த கண்காட்சிகளால் யாழ் மாவட்டம் இன்னமும் பாரிய அளவில் வர்த்தக மையமாக மாறியதற்கான எந்தவொரு தடையமும் இல்லாத நிலையிலேயே காணப்படுகின்றது.
மாறாக குறித்த கண்காட்சிகளை யாழ்ப்பாணத்தில் வைப்பதானது தென்னிலங்கை வியாபாரிகள் தமது பொருட்களை யாழ்ப்பாண மக்களுக்கு விற்பனை செய்வதற்கான ஒரு உத்தியாக பார்க்கப்படுகின்றதே தவிர, யாழ்ப்பாணத்தில் பாரிய முதலீடுகளை கொண்டுவந்து முதலீடுகள் செய்வதற்கான ஒன்றாக இருந்திருக்கவும் இல்லை இருக்கப் போவதும் இல்லை.
வர்த்தக சங்க ஏற்பாட்டுக்குழுவின் குறித்த கருத்தின் பிரகாரம் ஒத்திசைந்து போவாமானால் கூட, யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்களில் சுங்க பிரிவுகளை நிறுவி பாரியளவில் இறக்குமதிகளை யாழ்ப்பாணத்தில் செய்வதற்கு முடியாமல் கடந்த கால அரசுகள் ஏன் திண்டாடின என்ற கேள்வியையும் தோற்றுவிக்கின்றது.
இவர்கள் கூறுவதுபோன்று யாழ்ப்பாணத்து சந்தையில் சர்வதேச பொருட்களையும் சர்வதேச சந்தையில் யாழ்ப்பாணத்து உற்பத்திகளையும் கொண்டு செல்வதற்கான ஒரு களமாக இது இருக்குமானால் இலகுவாக ஏற்றுமதி செய்யும் வகையில் ஏன் மேற்குறித்த துறைமுகத்தையும் விமான நிலையத்தையும் இயங்கவிடாது இந்த வர்த்தக சமூகம் தடுக்கின்றது என்பதை கூறுவார்களா?
இதேநேரம் யாழ்ப்பாணத்து மக்களிடம் பணம் அதிகளவில் புரள்கின்றது. அவர்கள் புதிதாக ஒன்றை காண்பித்தால் அதை எப்படியானாலும் வாங்குவதற்கு பின்னிற்க மாட்டார்கள் என்று இந்த வர்த்தக துறையினருக்கு நன்கு தெரியும்.
இதேவேளை இம்முறை காட்சியறைகளுக்கான கட்டுப்பணமும் அதிகளவில் பல்லாயிரக் கணக்கில் உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பார்வையாளர்களுக்கான உள்நுழைவு பற்றுச் சீட்டுப் பணமும் கடந்த ஆண்டைவிட 50 ரூபாவால் உயர்த்தி 150 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
இதேநேரம் இம்முறை கடந்த காலத்தை விட அதிகளவான விளம்பர பதாதைகள் குறித்த திடலின் இருபுறமும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.
இது யாழ் மாநகர சபைக்கான விசேட வருமானமாக இருந்தாலும் அது சரியான பொறிமுறையின் கீழ் நிகழ்சி நிரல்ப் படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது. ஏனெனில் இவ்வாறான சந்தேகம் மக்களிடையே எழுவதற்கு கடந்த காலங்களில் கண்காட்சிகளால் ஏற்பட்ட குழறுபடிகளும் அவை தொடர்பில் வெளியான செய்திகளுமே காரணம்.
ஆக தமிழ் மக்களின் குறிப்பாக யாழ்ப்பாணத்து மக்களின் “வீக்பொயின்ரை” சாதகமாக்கி தமது வருமானத்தையும் இலக்காக கொண்டுதான் யாழ்ப்பாணத்தை நோக்கி தமது வியாபார நடவடிக்கைகளை வர்த்தக கண்காட்சி என்ற போர்வையில் நகர்த்தி வருகின்றார்களே தவிர யாழ்ப்பாணத்தை இலங்கையின் அடுத்த வர்த்தக நகரமாக்குவதற்காக அல்ல என்பதே உண்மை.
ஜே.கே.
கருத்துகள் இல்லை