பொங்கல் விழாவிற்கு என்று மந்திரங்கள் கிடையாதே!

 


மகரசங்கராந்தி அன்று தைப் பொங்கல் வருகிறது என்று சொல்வதில் சிக்கல் ஏதும் இல்லை. ஒவ்வொரு மாதப் பிறப்பும் ஒரு சங்கராந்திதான். ஆனால் மகரசங்கராந்தியைத்தான் தமிழர்கள் தைப்பொங்கலாக கொண்டாடுகிறார்கள் என்று சொல்வது தெரிந்தே செய்கின்ற அயோக்கியத்தனம். 


அண்மையில் கிரெகொரியன் புத்தாண்டு (ஆங்கிலப் புத்தாண்டு என்று அழைப்பது தவறானது) பிறந்ததை ஒட்டி யேர்மனியில் உள்ள இந்துக் கோயில் ஒன்றில் நடந்த பூசையின் பின்னர் 'மகரசங்கராந்தி என்று அழைக்கப்படுகின்ற தைப்பொங்கலும் வருகிறது' என்று அந்த ஆலய குரு பேசினார்.


மகரசங்கராந்தி என்பது மகரராசியை சூரியன் கடக்கின்ற நாள். அது ஒரு கொண்டாட்டம் கிடையாது. அடுத்த மாதம் கும்பராசியை சூரியன் கடக்கிறது. இப்படி 12 மாதங்களும் 12 ராசிகளை சூரியன் கடந்து சங்கராந்திகள் வந்து கொண்டே இருக்கும். மகரசங்கராந்தி கொண்டாட்டமாக இருந்திருந்தால் இந்தியாவை ஆள்கின்ற பிஜேபி அரசாங்கம் இந்தியா முழுமைக்கும் விடுமுறை விட்டிருக்கும். ஆனால் பொங்கல் நாள் அன்று தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக சிஏ தேர்வுகளை ஒன்றிய அரசு நடத்துகிறது.


தைப் பொங்கல் என்பது அறுவடைக் கொண்டாட்டம். உழவர் திருநாள். உழைக்கும் மக்களின் பெருநாள்.


இங்கே வெளிநாடுகளில் தைப் பொங்கலை தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். ஆனால் அங்கெல்லாம் யாரோ ஒரு ஆலயகுருவை முதன்மை விருந்தினராக அழைத்து வந்து, அவரை பூசை செய்ய வைத்தே விழாவை தொடங்குவார்கள். வந்தவரும் மகரசங்கராந்திக்கு சமஸ்கிருதத்தில் பூசை செய்து விட்டு போய் விடுவார்.


விவசாயம் துன்பத்தையும் மற்றவர்களில் தங்கியிருக்கின்ற வாழ்வையும் தருவது. அதை பிராமணர்களும், சத்திரியர்களும் செய்யக்கூடாது என்று மனுஸ்ருமிதி (10.83) சொல்கிறது.


தான் செய்யக் கூடாத உழவுத்தொழில் சம்பந்தமான விழாவிற்கு வருகின்றவர் எப்படி அதற்காகபூசை செய்வார்?  பொங்கல் விழாவிற்கு என்று மந்திரங்கள் கிடையாதே!


எல்லா மக்களுக்கும் பொதுவான அழைப்பு விடுத்து பொங்கல்விழாவை செய்கின்ற அமைப்புகள் மதம் கடந்தமுறையில் பொங்கல் விழாவை செய்ய வேண்டும்.


'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம், அதனால் உழந்தும் உழவே தலை' (1031) என்று தமிழர் நெறியான வள்ளுவம் உழவுத் தொழிலை போற்றுகிறது.


உழவுத் தொழிலைப் போற்றி தைப் பொங்கலை கொண்டாடுவோம்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.