அன்புள்ள மகனுக்கு!!

 



இந்த நள்ளிரவில் நான் எழுதும் கடிதம் உனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கலாம், மகிழ்வைத் தரலாம், சற்று கண்ணீரையும்  தரலாம்…


ஆனால் இந்த சந்தர்ப்பத்தை  நழுவ விட எனக்கு மனதில்லை. இனி ஒரு சந்தர்ப்பம் வருமா ? , 


தெரியவில்லை..


சிறு வயதிலிருந்தே உன் அண்ணனுக்கு எதிர் மாறான இயல்பு கொண்டவன் நீ…


எவ்வளவு துயரங்கள் இருந்தாலும், எவ்வளவு காயங்கள் இருந்தாலும் அதையெல்லாம் நினைக்காமல் வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என்ற கோட்பாடுடையவன் நீ..அப்படியே தான் நீ வாழவும் செய்கிறாய்..

அதில் எனக்கு பெருமிதமே.. 


குப்பைகளை மனதில் போட்டு மக்க வைத்து அதன் துர்நாற்றங்களை சுவாசிக்கக்கூடாது என்பதில் உறுதியானவன் நீ.. 


அதை எனக்கு கற்றுக் 

 கொடுத்தவனும் நீயே..


பள்ளியில் படிக்கையில் சராசரிக்கும் கீழான மாணவன் நீ..


அதுவும் கணிதம் உனக்கு வேப்பங்காய்…


இயற்பியலும், வேதியியலும் , உயிரியலும் , உன்னிடம் படாத பாடு பட்டு உன்னை விட்டு ஓட்டம் பிடிக்கும்…


ஒவ்வொரு முறையும்  ஆசிரியர் பெற்றோர் சந்திப்பில் உன்னைப் பற்றி ஆசிரியர்கள் வண்டி வண்டியாய் குறை கூறும் போதெல்லாம் அவர்களிடம் புன்னகையுடன் பதிலுரைப்பேன். 

என் மகன் நிச்சயம் சாதிப்பான். அவனைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் எனச் சொல்லி விட்டு வருவேன். 


உன்மேல் உள்ள நம்பிக்கையை விட , ஆசிரியர்களின் எதிர்மறை விமர்சனங்களின் தாக்கம் உன்னை துன்புறுத்திவிடக் கூடாது என்பதுதான் எனக்கு அச்சமாக இருந்தது..


பத்தாம் வகுப்பில் நீ சராசரி மதிப்பெண்கள் பெற்று தேர்வான போது எனக்கு எத்தனை மகிழ்ச்சி தெரியுமா..?


அதை நாம் வெகுவாக கொண்டாடினோம்..


உன்னை உட்கார வைத்துக் கேட்டேன். நீ பதினொன்றாம் வகுப்பில் என்ன படிக்க விரும்புகிறாய்? 


பதிலில் நான் அதிர்ச்சி அடையவில்லை, அம்மா , கணிதம் மட்டும் வேண்டாம், நான் பொருளாதாரம், கணிதவியல் , கணிப்பொறி படிக்கிறேன், என்றாய்..


ஹைதராபாத்தில் ரயில்வே ஜூனியர் கல்லூரியில் படித்தாய்..


கண்ணா இப்போதும் பெருமையாக எண்ணுகிறேன்..


மிக எளிதாக மிகச் சிறப்பாக படித்து பனிரெண்டாம் வகுப்பில் 89% சதவிகித மதிப்பெண்கள் அள்ளினாய். 


நான் உன் அருகில் இல்லை .

 நீயாகப் படித்தாய். 

உனக்குப்பிடித்த பாடங்கள் படித்தாய்..


ஹைதராபாத்தின் மிகச் சிறந்த பவன் கல்லூரியில் B Com படித்தாய்.. 


படிப்பிலும், பேச்சிலும், நடிப்பிலும், நடனத்திலும், அத்தனை போட்டிகளிலும் பரிசுகள் வாங்கி குவித்தாய்…


மாணவத்தலைவராகவும் 

தேர்ந்தெடுக்கப் பட்டாய்..


நீ வாங்கிய அத்தனை கோப்பைகளுக்கும் நம் வீட்டில் இடம் இல்லாது அலமாரியில் பாதி கோப்பைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன..


B Com முடித்ததும் கல்லூரி வளாக நேர்காணலில் தேர்ந்தெடுக்கப் பட்டு அமேசானில் விற்பனை அதிகாரியாகச் சேர்ந்தாய்.. 

உன்னைப் படிக்க வைக்க அப்போது பொருளாதார வசதி  இல்லை..


கண்ணீருடன் தான் இதை எழுதுகிறேன்…


உன் அண்ணன் பொறியியற் படிப்பு முடித்து மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற நேரம் அது..பெருஞ்செலவை சுமக்க வேண்டிய நேரமாயும் இருந்தது..


நீ சம்பாதிக்க ஆரம்பித்தாய், நானும் பள்ளி வேலையை விட்டு விட்டு தனிப்பயிற்சி மையம் ஆரம்பித்து வெறி பிடித்து வகுப்புகள் எடுத்து பொருளீட்ட ஆரம்பித்தேன்.. அண்ணன் பொறுப்புடன் படித்தான். நல்ல வேலையில் சேர்ந்தான். நாம் கொஞ்சம் வசதியாக நிம்மதியாக சாய்ந்து உட்கார்ந்தோம்..


பல பெரிய நிறுவனங்களில் பணி புரிந்தாய்.. ஆனால் நீ அறியாது  நானும் உன் அண்ணனும் பேசிக் கொள்வோம். உனக்கு உன் இளங்கலை படிப்பு மட்டுமே போதாது, ஓர் முதுகலை படிப்பு நிச்சயம் இருக்க வேண்டும் , படிக்க வைக்க அப்போது பண வசதி இல்லையே என குற்ற உணர்வில் தவித்தோம். உன்னிடம் பேசினோம்.


லண்டனில் சென்று படிக்கிறேனம்மா என்றாய்..


லண்டன் கிளம்பினாய்.. 


உன்பிரிவில் நான் நொறுங்கித்தான் போனேன்.. ஆனால் உன் வருங்காலம் பெரிதல்லவா?


இதோ ஆயிற்று , உன் அண்ணனின் பெரு முயற்சியில், உன் பெரும் உழைப்பில் லண்டனின் Queen  mary கல்லூரியில் நீ இன்று  (12/01/24) Digital marketing ல் முதுகலைப் பட்டம் வாங்கி இருக்கிறாய்..அதுவும் Distinction ல் வாங்கி இருக்கிறாய்..


வகுப்பில் நான் பாடம் 

எடுத்துக் கொண்டே, 

என் மாணவர்களுடன்....


 நீ கறுப்பு அங்கியும், தலைத்தொப்பியிடனும் பட்டம் பெற்றதை உன் லண்டன் கல்லூரி நேரலையில் மதுரையிலிருந்து கண்ணாரக் கண்டு களித்தேன்.. கண்களில் ஆனந்த கண்ணீர் தளும்ப உன்னை காட்டிக் கொண்டிருந்த அந்த பெரிய திரையை கட்டி அணைத்து வெகு நேரம் முத்தமிட்டேன்..


உன்னை வயிற்றில் சுமந்தபோது கிடைத்த இன்பம் கிடைத்ததடா 

அன்பு மகனே..


அங்கு வந்து நீ பட்டம் பெறுகையில் எழுந்து நின்று கரங்கள் அதிர ஓசை எழுப்பி என் மகன் ஜெயித்து விட்டான் எனக் கூவ வேண்டும் போலிருந்தது..


இங்கு என் மாணவப் பிள்ளைகளுக்கு தேர்வு நேரம். லண்டன் வருவது சரியல்ல என என்னை தேற்றிக் கொண்டேன்..


அன்பு மகனே, 

என் உயிரே, 

என் உணர்வே, 

என் மூச்சே,

இதோடு உன் பெருமைகளை நிறுத்திக் கொள்ளாமல்,  நீ மேன் மேலும் உயர்ந்து நம் தாய்த்திரு நாட்டிற்கு சிறிதளவேனும் உலக அரங்குகளில் பெருமை சேர்க்க வேண்டும்..


நான் அதைக் கண்ணாற 

காண வேண்டும்..


தோல்விகள் நிலையானதல்ல, வெற்றிகளும் நிலையானதல்ல என்பதை என்றும் நினைவிற் கொண்டு,  பொருள் ஈட்டல் வாழ்க்கையின் இரண்டாவது தேர்வாகவும் ,

 உனக்குப் பிடித்த பணியை நீ கைக் கொள்ளுவதென்பது முதலாவது தேர்வாகவும் வைத்துக் கொண்டு எதிர்ப்படும் தடைகளை  எகிறிக் குதித்து தாண்டி ஜெயித்துக் கொண்டே இரு என் செல்ல மகனே..


12.01.24

நள்ளிரவு 1:05


பகிர்வு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.