அனல் - சுரேஷ் தர்மா!!
ஆதவன் உச்சி வானில் நின்று சிரித்துக்கொண்டிருந்தான். அருகிலிருந்த அலைபேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தேன்.
சரியாக பன்னிரண்டு மணி என்று காட்டியது அது. வயிற்றிலிருந்து பசியின் அழைப்பு மெல்ல எழத்தொடங்கியது. இன்று நடந்த அமளியில் காலை உணவையும் சாப்பிடவில்லை. நான் மட்டும் இல்லை வீட்டில் யாருமே சாப்பிடவில்லை.
ஒரு துக்கம் நடந்துவிட்தென்று துயரப்படவும் முடியவில்லை. இது வரை இருந்த ஆக்கினை போய்விட்டதென்று ஆறுதல்படவும் முடியவில்லை. அப்படி ஒரு நிலைiமையில் இருக்கிறோம்.
முற்றத்துப் பலா மரத்தடியில் இருந்தபடி, வீட்டுக்குள்ளே பார்வையை ஓட விட்டேன். தங்கை மதுமதி விறாந்தைத் தூணுக்கு அருகில் சிலைபோல அமர்ந்திருந்தாள்.
அம்மா, அருகில் அமர்ந்தபடி தூரத்து வெளியை வெறித்துக்கொண்டிருந்தா. வீட்டிலிருந்த மற்றவர்களும் ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்திருந்தனர்.
காலையில் மேகவி சொன்ன வார்த்தைகள் என்னுள்ளே ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியிருந்தது.
"மேகவியம்மா.. பிள்ளையின்ரை அப்பா இறந்திட்டார்..."
"அதுக்கென்ன...."
சட்டென்று அந்தக் குழந்தையின் வாயில் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் எங்களை நிலைகுலைய வைத்துவிட்டது.
"என்னம்மா..இப்பிடிச்சொல்லுறாய்...
என்ன இருந்தாலும் அவர் அப்பபா எல்லோ.. நாங்கள் செத்தவீட்ட போகவேணும்...போவம்..
வெளிக்கிடுங்கோ.."
"அப்பாவோ....அதை நீங்கள் தான் சொல்லுறியள் அவர் எப்ப எண்டாலும் எனக்கு அப்பா மாதிரி என்னட்டை நடந்தவரோ?
ஒருநாளும் இல்லை...என்னோடை படிக்கிற பிள்ளையளின்ரை அப்பாமார் எல்லாம் என்ன மாதிரி பாசமா இருக்கினம்
ஏத்திக்கொண்டுவந்து விடுவினம். பிறகு ஏத்த வருவினம்... அப்பாதான் எல்லாம் வாங்கித்தாறவர் எண்டு லச்சு கூடச் சொல்லுறவள்...
ஒவ்வொத்தரும் அவையளின்ரை அப்பாமாரைப்பற்றி கதைகைதையாகச் சொல்லுறவை.....எனக்கு உவர் அப்பா இல்லை....நான் வரமாட்டன்..."
உரக்க கத்திய மேகவியின் வார்த்தைகள் சுவரில் மோதி எங்கள் அத்தனை பேருடைய செவிப்பறையிலும் எதிரொலித்தது.
நாங்கள் பேச்சற்றவர்களாக நின்றுகொண்டிருந்தோம். மாமன்மாராக நாங்கள் பாசம் காட்டிய போதிலும் அவளுடைய மனதில் தகப்பனுக்கான ஏக்கம் ஏதோ ஒரு வகையில் இருந்திருக்கிறது . அதை நிறைவேற்றாத தன் தகப்பன் மீது அவளுக்கு கோபமும் வெறுப்பும் ஏற்பட்டதில் தவறேதும் தெரியவில்லை எனக்கு.
தகவல் வந்த நேரத்தில் இருந்து சுவரை வெறித்துப் பார்த்தபடி மௌனமாக இருந்த தங்கை மதுமதி எதுவும் பேசவில்லை.
"அப்பிடிச் சொல்லக்கூடாதம்மா....
என்ன இருந்தாலும்..." அம்மாதான் மெல்லச் சொல்லத்தொடங்கினா.
"இல்லை..இல்லை..நான் வரமாட்டன்...வரமாடமட்டன்..நீங்கள் போங்கோ..." கிரீச்சிட்டது மேகவியின் குரல்.
தன் கருத்தை வைராக்கியமாகச் சொன்னபடி அதற்காக வாதாடிய அந்தக் குழந்தை மனதிடம் வேறு எதுவும் சொல்ல முடியவில்லை.
"சரி...நாளைக்குத்தான் எடுக்கிறதாம்..இப்ப பிள்ளையைக் குழப்பாதேங்கோ....." என்றுவிட்டு உள்ளே போய்விட்ட அம்மாவின் முகத்தில் ஆயிரம் யோசனைகள் குவிந்துகிடந்தன..
ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் என்னும் உறவில் சேர்கிற போது சொந்தங்களும் பந்தங்களும் கூடி நின்று இன்பத்தில் இதமடைகிறதே. வாழ்த்தி மகிழ்கிறதே அதுவே அவர்கள் பிரிகிற போது மற்றவர்களுக்கு வலியும் துயரமும் என்றாலும் தனித்தனியானவர்கள் என்றால் பிரச்சனை அவர்களோடு முடிந்துவிடுகிறது. அதுவே அவர்களுக்கு பிள்ளைகள் உள்ளதென்றால் உண்மையில் அதிகம் பாதிப்படைவது அந்தப் பிள்ளைகள் தான் என எண்ணிக்கொண்டேன்.
தகப்பன் என்பது ஒரு பாதுகாப்பு நிலை. .தகப்பன் என்பது ஒரு அக்கறையான பந்தம்..அது பொய்யாகிப்போகிற போது பிஞ்சு மனங்களில் வெம்பலும் வேதனையும் ஏற்படுகிறது. அது ஆழ0மாகப் பதிந்துவிட்டால் மேகவி போலத்தான் பிள்ளைகள் வெறுப்பின் உச்சிக்குச் சென்றுவிடுகிறார்கள்.
மேகவி என்னுடைய மருமகள். எங்கள் குடும்பத்தின் பெண் வாரிசு. எங்களையெல்லாம் மகிழ்ச்சியில் முக்குளிக்க வைக்கவென்றே பிறந்த சொத்து அவள். பத்து வயது நிரம்பிய பாலகி. எப்போதும் துறுமுதுறுவென்றிருக்கும் மேகவியின் அறிவோ ஆழமானது. அப்படி ஒரு கெட்டிக்காரி. பாட்டும் நடனமும் படிப்பும் ஓவியமும் அவளின் பிஞ்சுக்கரங்களுக்குள் வந்து குவிந்திருந்தது.
என்னுடைய தங்கையின் மகளான மேகவி இரண்டு வயதுக்குழந்தையாக இருக்கும் போதே தகப்பன் வாசம் தொலைத்துவிட்டு மாமன் மார்பில் துயிலத்தொடங்கியவள். அவள் பிறந்த நொடியில் இருந்து அதிகமாக எங்கள் வீட்டில்தான் வளர்ந்தவள். இரண்டு வயதிலிருந்து முழுவதும் எங்களோடுதான்....
தங்கை மதுமதிக்கு கிடைத்த வாழ்க்கை சரியாக வாய்க்கவில்லை. அதன் தொடர்ச்சியாக, தகப்பன் இருந்தும் தந்தையற்ற நிலையில் வளர்ந்த மேகவி மீது எங்கள் அத்தனை பேருக்குமே பாசமும் அக்கறையும் அதிகம்தான்.
'அவளை ஒரு நேரமும் கலங்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்...' என்பதே என்னுடைய எண்ணமாக இருந்தது.
மதுமதிக்கு பெற்றவர்கள் பெரியவர்களாக பார்த்துத்தான் திருமணம் நடந்தது. பெண் பார்க்கவந்தபோது நல்லவனாகத்தான் கதைத்தான் நரேன். சற்று உயர்ந்த எடுப்பான தோற்றம் கொண்ட அவனுடைய கபடப்பேச்சில் நாங்கள் அத்தனைபேரும் மயங்கிப்போனதென்னவோ உண்மைதான்.
திருமணம் நடந்ததில் இருந்து தன்னுடைய குணங்களைக் காட்டத்தொடங்கிய அவனை முடிந்தவரை பொறுத்து வாழ்ந்த என் தங்கை இயலாத போதுதான் தனித்துவாழ முடிவெடுத்து எங்களிடமே வந்து சேர்ந்தாள்.
சீதனத்துக்காகவும் என் தங்கையின் அழகிலும் ஆசைப்பட்டிருக்கிறானே தவிர அன்பான வாழ்க்கை பற்றி அவன் நினைக்கவே இல்லைப் போல.
திருமணமான அன்றே, தங்களுடைய வீட்டுக்குப்போகவேண்டும் என்று தொடங்கியது பிரச்சினை ....அதற்குப்பிறகு தொட்டதற்கெல்லாம் பிரச்சினைதான்...
மூன்று வருடங்கள் அவனோடு போராடி அது முடியாமல் போன பிறகுதான் அவன் வேண்டவே வேண்டாம் என்று எங்களிடமே வந்துவிட்ட தங்கையையும் மகள் மேகவியையும் நாங்கள் தான் பார்த்துக்கொண்டோம்.
பிரிந்து வாழ்ந்த நாட்களிலும் கூட தன்னுடைய மகளைப் பார்க்ககவேண்டும் என்றோ...அவர்களைக் கூட்டிச்செல்லவேண்டும் என்றோ நினைக்கவில்லை அந்த நரேன்.
'விட்டது தொல்லை ' என்பது போல இருந்துவிட்டவனை அவர்களாலும் ஏதும் சொல்லமுடியவில்லை.
ஆரம்பத்தில் ஓரிரு முறை பெரியவர்கள் கதைத்துப்பார்த்தார்கள் தான்..ஆனால் நரேன்...எதற்குமே இறங்கிவரவில்லை.
அவனுடைய பிடிவாதமும் இரக்கமற்ற, அன்பற்ற செயலும் இன்று அவன் பெற்ற மகளே, 'அவனுடைய மரணத்திற்கு அழமாட்டேன், அவர் அப்பா இல்லை ' எனச்சொல்லுகிற நிலையைக் கொடுத்துவிட்டிருக்கிறது. இவர்களுக்கெல்லாம் திருமணம் ஒரு விளையாட்டுச் சடங்கு. அதன் அடையாளமாகப் பிறக்கிற குழந்தைகள் பாவைப்பிள்ளைகள் என்கிற எண்ணம்.
"அண்ணா .இந்தாங்கோ.. சாப்பிடுங்கோ...." மூத்த தங்கையின் அழைப்பில் திடுக்கிட்டு விழித்து கடிகாரத்தைப் பார்த்தேன். நேரம் இரண்டு மணி ஆகிவிட்டிருந்தது.
"எல்லாரும் சாப்பிட்டாச்சே...?" என்றபடி சாப்பாட்டை வாங்கினேன்.
"சின்னனுகளுக்கு குடுத்திட்டன்... மற்ற ஆக்கள் இனித்தான் சாப்பிட வேணும்... நீங்கள் முதல்ல சாப்பிடுங்கோ... குளிசை போடுறது... நல்லா நேரம் போட்டுது.." என்ற பெரிய தங்கையின் அக்கறையில் மனம் நெகிழ்ந்தவனாக சோற்றுக் கவளங்களை உருட்டி உண்ணத் தொடங்கியபடி சத்தம் வந்த திசையைப் பார்த்தேன்..
தூரத்தில் அண்ணனோடும் தம்பியோடும் சிரித்தபடி விளையாடிக்கொண்டிருந்தாள் மேகவி.
எழுத்து - சுரேஷ் தர்மா
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை