வீணா ஒரு வீணை - சுரேஷ் தர்மா!!
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சற்றுத் தாமதமாகவே படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்தேன்..
கண்களில் ஒரு வித எரிச்சல் மண்டிக் கிடந்தது. இரவு தூக்கம் குறைவு.
எப்போதுமே அப்படித்தான் என்றாலும் ஏனோ நேற்று அதிகாலை வரை, அருகிலேயே வரமாட்டேன் என அடம்பிடித்துவிட்டாள் நித்திரா தேவி.
உடம்பில் கண்காணிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டிருந்ததால் உடல் சற்று அசதியாகவும் இருந்தது.
மூன்று நாட்களுக்கு அவதானமாக இருக்குமாறும் குளிக்ககூடாது எனவும் வைத்தியர்கள் கூறியிருந்தனர்.
அலைபேசியைக் கையில் எடுத்துக்கொண்டே வெளியே வந்தேன்.
கூட்டித் துப்பரவு செய்யப்பட்டு வீடு சுத்தமாக இருந்தது, மாலினி அதிலெல்லாம் கெட்டிக்காரி.
அந்த வீட்டின் பாதி இடத்தில் மைத்துனி மாலினி குடியிருக்கிறாள்.
அவள், சில மாதங்களுக்கு முன்புதான் சுவிஸிற்கு வந்திருந்தாள். இருக்க இடம்தேடி அவள் அலைந்து கொண்டிருக்க, மாமா எனக்கு அழைப்பு எடுத்து,
'என்னுடைய வீட்டில் தங்கவைக்க முடியுமா?' எனக் கேட்டதால் வேறு வழியின்றிச் சம்மதம் சொல்லிவிட்டேன்.
மாமா மாமிக்கு. மாலினியை எனக்கே மணமுடித்து வைத்துவிட வேண்டும் என்கிற விருப்பம் இருந்ததை அவர்களின் பேச்சில் இருந்து புரிந்து கொண்டேன்.
மாலினி ஒரு முற்போக்குச் சிந்தனை உள்ள எழுத்தாளர். திருமணமாகி ஒரே வாரத்தில் கணவனைப் பிரிந்து விட்டாள்.
மாலினியின் கணவன் பூரணன் ஒரு வைத்தியர். தன் சொத்துகள் எல்லாவற்றையும் கொடுத்து மாமா, தன் ஒரே மகளான மாலினிக்கு வைத்தியர் பூரணனைத் திருமணம் செய்துவைத்தார்.
கடமையும் கண்ணியமும் இல்லாது பணி செய்த வைத்தியர் பூரணனின் ஒழுக்கக்கேடுகள் தெரிய வந்ததில் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு தன்னுடைய வீட்டிற்கே வந்துவிட்டாள் மாலினி.
பெரியவர்கள் பேசிப் பார்த்த போதும் சமரசங்களை ஏற்காத மாலினி ஒரே பிடியாக நின்று பூரணனிடம் விவாகரத்துப் பெற்று, தகப்பனார் கொடுத்த பணத்திலேயே வெளிநாடு வந்து விட்டாள்.
நான்கு வருடங்களுக்கு முன்பே மாலினியை என் வீட்டார் எனக்குத் திருமணம் செய்ய முயற்சித்தனர் எனினும்
திருமணம் என்கிற உறவில் அப்போது எனக்குப் பெரிதாக நம்பிக்கை இல்லாத காரணத்தால் அது பற்றி நான் அக்கறைப்படவில்லை.
அது ஒருபக்கம் இருக்க, அப்போது மாமாவுக்கும் மாலினியை எங்களைவிட வசதியான ஒரு இடத்தில் திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்கிற ஆசையும் இருந்ததால் அம்மாவின் முயற்சி நிறைவேறாமல் போய்விட்டது.
இப்போது அம்மா எப்படியான மனநிலையில் இருக்கிறாவோ என்பது கேள்விக்குறி.
அன்றாட வேலைகள் எல்லாவற்றையும் நானே பார்ப்பதில் ஏற்பட்ட சலிப்பு, இப்போது, ' திருமணம் செய்து கொண்டால் என்ன' என்கிற மனநிலையைத் தந்திருந்தது.
அது மட்டுமில்லாமல், மனைவி, குழந்தை என்கிற உறவுப் பிணைப்புகள் மீதும் ஒரு விருப்பு ஏற்பட்டிருந்தது.
சிந்தனைகளின் படர்தலுடன் வெளியே இருந்த இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டே தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்ப்பித்தேன்.
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நிகழ்வுகள் போய்க்கொண்டிருந்தன.
திடீரென ஒரு அலைவரிசையில் அந்த முகம் வந்து போகவும் சட்டென்று என் விழிகள் அப்படியே உறைந்து போனது.
அவளேதான்...வீணா....ஆடல்மங்கை,
என் நித்திரையில்லாத இரவுகளின் சொந்தக்காரி...
நேர்காணல் ஒன்றிற்குப் பதில் கூறிக்கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்ததும் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரான வாழ்க்கை, என் மனத்திரையில் படம்போல விரிந்தது.
ஒருமுறை ஊருக்குச் சென்ற போது, ஊரில் நடந்த சனசமூக நிலைய நிகழ்வொன்றில்தான் வீணாவை நான் முதல் முதலாகச் சந்தித்தேன்.
அந்த நிகழ்வில் அப்பாவும் அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார்.
ஊரில், அப்பா மிகவும் செல்வாக்கோடு வாழ்பவர். ஊரில் நடக்கிற பல்வேறு நிகழ்வுகளில் அப்பா சிறப்புக்குரியவராக இருப்பார்.
காரணம், பாடசாலையாகட்டும் சனசமூக நிலையமாகட்டும் கோயிலாகட்டும் அனைத்து இடங்களிலும் அப்பாவின் பங்களிப்பு இருக்கும்.
அப்படித்தான் சனசமூக நிலைய நிகழ்வுக்கு அப்பா அழைக்கப்பட்டிருந்த போது, அவரால் செல்லமுடியாத காரணத்தால நான் போகும்படி ஆகிவிட்டது
அங்கு தான் ஒரு நடனத்தாரகையாக வீணாவைச் சந்தித்தேன். வீணாவுடைய நளினமான நடனத்தில் நான் என்னையே மறந்துவிட்டேன்.
அப்படி ஒரு அங்க அசைவும் பாவமுமாக அவளது நடன நிகழ்வு பார்த்தவர்களைக் கவர்ந்திருந்தது.
அன்று இடம்பெற்ற முதல் சந்திப்பில் வீணாவைப் பாராட்டிவிட்டு வீடு வந்து சேர்ந்த எனக்குள் அவள் ஒட்டிக்கொண்டு வந்திருப்பது எனக்கும் புரியாமல் இல்லை.
மீண்டும் 'வீணாவைச் சந்திக்கிற சந்தர்ப்பம் வாய்க்குமா' என்பது எனக்குள்ளேயே கேள்வியாக இருக்க, நாட்கள் ஒடிக்கொண்டிருந்தன.
நான் படித்த பாடசாலையில் எங்கள் வகுப்பு மாணவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதற்காகவேதான் நண்பர்கள் பலர் திட்டமிட்டு வருகை தந்திருந்தனர். நானும் அந்த நிகழ்விற்காகவே முக்கியமாக ஊருக்குச் சென்றிருந்தேன்.
நிகழ்விற்கு முதல் நாள் ஒழுங்குபடுத்தல்கள் பற்றிய பார்வையிடுதலுக்காக நண்பன் சுகுமாரோடு சென்றிருந்த வேளை, உயர்தர மாணவிகளுக்கு நடனம் பழக்கியபடி நின்ற வீணாவைக் கண்டதும் எனக்குள் ஏற்பட்ட அந்த உணர்வைச் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.
மின்னல்கள் வந்து என்னில் மோதியது போல, நீர்த்தாரைகள் என்னைக் குளிர்வித்தது போல, அப்படி ஒரு உணர்வில் திழைத்துப் போனேன்.
நண்பன் ஒழுங்குபடுத்தல்களைக் கவனிக்கிற ஆசிரிய நண்பர்களோடு உரையாடிக்கொண்டிருக்க, என் விழிகள் அவளையே வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
முதலில் வீணா என்னைக் காணவில்லை. பத்து நிமிடங்கள் கடந்தபிறகு தான் நிமிர்ந்து பார்த்தாள்.
அவளுடைய விழிகள் எனக்காக மீட்டிய நளினங்கள் எனக்குப் புதிதாக இருந்தது.
நண்பனிடம் "பார் ..வருகிறேன்..." என்று சொல்லிவிட்டு அவளருகில் சென்றேன்.
மாணவிகளை அனுப்பிவிட்டு, தனியே நின்ற வீணாவிடம்
"வணக்கம் வீணா..."
"வணக்கம்..." எந்தப்பின் சேர்ப்பும் இல்லாமல் வீணா ஒரு குயிலின் இசையோடு கூறியபோது உதடுகள் விரிந்தன எனக்கு.
"உங்கட நடனம் மட்டுமில்லை...குரலும் நல்லாத்தான் இருக்கு" நான் கூறியதும் நாணத்தோடு ஒரு புன்னகையை உதிர்த்த வீணாவை அந்தக்கணமே எனக்கு பிடித்துப் போயிற்று.
"வீணா...உங்களோடு நிறைய கதைக்க வேணும்..."
நான் சொல்லவும் எதுவுமே பேசவில்லை முதலில்.
தர்மசங்கடமாக என்னைப்பார்த அவளிடம்,
"என்னடா...திடீரென்று வந்து இப்படிச் சொல்கிறானே ..." என்று தோன்றுகிறதா என்றேன்.
தலையை இடம்வலமாக ஆட்டிய வீணா,
" இந்தாங்கோ...என்னுடைய இலக்கத்தை எடுங்கோ..." என்றாள் அலைபேசியை நீட்டியபடி.
அவளுக்கு என் மீதிருந்த நம்பிக்கை, அவளுடைய வெள்ளந்தியான போக்கு இரண்டுமே என்னை ஒரு கணம் தடுமாற வைத்துவிட்டது.
அலைபேசியை வாங்கி அவளுடைய இலக்கத்தைப் பதிவு செய்துவிட்டு அவளிடம் கொடுத்துவிட்டு எதுவும் பேசாமல் தலையை ஆட்டி விட்டு வந்தேன்.
அன்று மாலையே, வீணாவுக்கு அழைப்பெடுத்து ஒரு சில வார்த்தைகள் பேசிய போதுதான்,
'வீணா...ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் வளர்ந்ததும் அவளுக்கென்று உறவுகள் யாரும் இல்லை என்பதும் தெரிந்தது.
அன்று இரவு மூன்று மணி வரை, அலைபேசியில் குறுந்தகவல்கள் அனுப்பிக் கொண்டிருந்தோம்.
திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்பதையும் ஆனால் குழந்தை.., அதுவும் பெண் குழந்தை என்றால் பிடிக்கும் எனபதையும் கூறினேன்.
அவள் எதுவும் பேசாமல் இருந்தாள்.
மறுநாள் ஒன்றுகூடல், அதற்கடுத்த நாளே நான் சுவிஸிற்குப் புறப்படுவதாக இருந்தேன்.
ஒன்றுகூடலும் பிறகு ஆண்கள் மட்டுமான பொழுதுபோக்குமாக நேரம் மூன்று மணியாகிவிட, வீட்டிற்கு வர விரும்பாமல் வீணாவுக்கு அழைப்பு எடுத்தேன்.
அவள், அன்று, எறிகணை வீச்சில் பலியான பெற்றோரின் நினைவுதாள் என்பதால், ஊரிலிருந்து சற்றுத் தள்ளியிருந்த அவளுடைய பெற்றோரின் பூர்வீக வீட்டிற்கு வந்திருப்பதாகக் கூறவும், உடனே வீணாவைப் பார்க்க வேண்டும் போன்ற தவிப்பில் அவளிடம் முகவரி கேட்டு, காரில் புறப்பட்டு விட்டேன்.
அது கடல்நீரேரியோடு இணைந்த சிறு கிராமம். பெரும்பாலும் முதியவர்கள் மட்டுமே அந்தக் கிராமத்தில் குடியிருந்தனர்.
வீணாவின் பெரிய பாட்டி வீடு சற்றுத்தள்ளி இருந்தது.
நான் அங்கே போன போது வீணா வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தாள்.
அழுதிருக்க வேண்டும், கண்கள் சிவந்து முகம் வீங்கியிருந்தது அவளுக்கு.
என்னைக் கண்டதும் ஒரு குழந்தை போல, ஓடி வந்து என் கைகளைப் பற்றிக்கொண்ட அவளை இழுத்து அணைத்துக் கொண்டேன்.
வீணா .....ஒரு நடன மாதுவாக நான் இரசித்த அவள், அன்று ஒரு அழகிய கீதமாக தன்னையே எனக்குத் தந்தாள்.
அவள் சொன்ன ஒரு அழகான விடயம், 'எனக்காக ஒரு வந்தியத்தேவன் வருவான் என்று காத்திருந்தேன்....நீங்கள் தான் அந்த வந்தியத்தேவன் என்று அறிந்த போது, பூரித்துப் போனேன்..." என்பது.
மறுநாள் நான் புறப்பட்டுவிட்டேன்...வந்த பிறகு என்னுடைய பழைய வாழ்க்கைக் கோலம், வீணாவைச் சற்று பின்னே தள்ளியிருந்தது.
பலமுறை அவளுடைய அழைப்புகளை நிராகரித்துமிருந்தேன்.
அப்போதுதான், அம்மாவும் மாலினியைத் திருமணம் செய்வது பற்றி அலைபேசியில் கதைத்துக்கொண்டிருந்தா.
அம்மாவின் நியாயமான ஆசையை நிறைவேற்ற வேண்டியது கடமை என்றும் ஒரு பக்க மனம் என்னை உலுக்கியது. ஆனாலும் அம்மாவிடம் மறுப்புத் தெரிவித்து விட்டு, கதையோடு கதையாக வீணாவிடமும் இதனைக் கூறியிருந்தேன்.
அன்றைய நாள் எனக்கும் வீணாவுக்குமான பேச்சு கொஞ்சம் கடுமையாக மாறிவிட்டது. எப்போதும் சாந்தமாகவே இருக்கும் வீணா கடுமையாகவே கதைத்துக் கொண்டிருக்க எனக்கு கோபம் வந்துவிட்டது.
நானும் மாலினியுடனான திருமணம் உறுதியாகிவிட்டது என்று கூறிவிட்டேன்.
அதுவே எங்களுக்கான கடைசி உரையாடலாகிவிட்டது.
அதன்பிறகு ஐந்து வருடங்களாகி விட்டது ...வீணாவுடனான தொடர்பு கிட்டவில்லை.
'சில நாட்களில் கோபம் குறைந்ததும் அவளே எடுக்கட்டும்' என நினைத்து விட்டுவிட்டேன்.
ஆனால் ஒரு மாதத்தின் பின்னர் அழைப்பு எடுத்த போது, வீணாவின் தொடர்பு கிடைக்கவே இல்லை.
எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது என்றாலும் அப்போதும் கோபம்தான் வந்தது.
'ஒரு பெண்ணுக்கு இவ்வளவு ஆங்காரம் ஆகாது' என்கிற எண்ணம் எனக்குள் ஒரு தீயாகப்பரவியது.
அதன் பிறகு, நானும் என் பாட்டில் வாழ ஆரம்பித்து இதோ ...
ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன.
எண்ணச்சிறகுகள் அறுந்துவிட, தொலைக்காட்சியில் விழிகளைப் பதித்தேன்.
திடீரென்று வீணாவைப் பார்த்ததும் எனக்குள்ளே பொங்கி எழுந்த நினைவுகள் ஆர்ப்பரித்து அடங்கின.
வீணா தலைநகரில் மிகப்பெரிய நடனப்பள்ளியை நடத்திக் கொண்டிருந்தாள். அதை ஒவ்வொன்றாக காட்டினார்கள்...ஒவ்வொரு மாணவர்களாக தங்கள் நடன அபினயத்தினை வெளிப்படுத்திக்கொண்டிருக்க, இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
இடையில் வந்த அந்தச் சின்னக்குழந்தை...
என் மகள் என வீணா அறிமுகப்படுத்திய குழந்தை....
அப்படியே என்னுடைய சாயலில்....பெயர்கூட...இருவருமாக பேசிக்கொண்டதுதானே...
"ஆர்த்தீ..." என்று வீணா கூப்பிடவும் தன்னுடைய உருண்டை விழிகளாலேயே பாவத்தை வெளிப்படுத்திய அந்தக்குழந்தை...
எனக்குள் இருந்து அனலின் தகிப்பு ஒன்று வெளிப்பட்டது. இத்தனை வருடங்களா வீணா சுமந்து வளர்ப்பது குழந்தையை மட்டுமல்ல...நம் காதலையும்தானே...
எந்த தொலைக்காடசி, என்ன தொடர்பிலக்கம் என்று அனைத்து தகவல்களையும் எடுத்து, வீணாவின் தொடர்பிலக்கத்தையும் எடுத்துவிட்டுக் காத்திருந்தேன்.
வீணாவோடு கதைப்பதற்கு சற்றுச் சங்கடமாக இருந்தது. அந்தக் குழந்தை என்னுடைய மகளா இல்லையா என்கிற குழப்பம் வேறு...
எப்போதோ அக்கா அனுப்பியிருந்த என்னுடைய சிறுவயதுப் படத்தையும் நான் படமெடுத்து வைத்திருந்த தொலைக்காட்சியில் வந்த குழந்தையின் படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.
அச்சு அசலாக இரண்டும் ஒரே மாதிரி இருந்தது.
"எப்படி ....எப்படி வீணாவிடம் கேட்பது...?"
இதே கேள்வி என்னைக் குடைந்துகொண்டிருந்தது.
இலக்கியக் கூட்டம் ஒன்றிற்குச் சென்ற மாலினி மாலை வேளையில்தான் லீட்டிற்கு வந்தாள்.
நடந்த அத்தனையையும் மாலினியிடம் சொல்லிவிட்டு தலையைக் கையில் பிடித்தபடி அமர்ந்திருந்தேன்..
உண்மையில் வீணாவை நான் வெறுக்கவில்லை. அப்போது, திருமண வாழ்க்கையைத்தான் வெறுத்தேன்...
வீணாவின் இலக்கத்தை என்னிடமிருந்து வாங்கிய மாலினி, தானே கதைப்பதாக கூறவும் நானும் முதலில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் சட்டென்று ஏதோ தோன்றவும் நானே அந்த இலக்கத்திற்கு அழைப்பை எடுத்தேன்.
எதிர்முனையில் "ஹலோ.." என்றது வீணாவேதான்...
எதைக்கேட்பது...எதை விடுவது என்பது புரியாமல் நான் மௌனம் காக்க,
"உங்கள் மகள் நலமாகவே இருக்கிறாள்..." தானே சொல்லிவிட்டு குலுங்கி அழத்தொடங்கினாள்.....
மனதில் மழைச்சாரல் பரவியது.
வீணா இவ்வளவு காலம் சுமந்திருப்பது என் மகளை மட்டுமல்ல...என் மீதிருந்த காதலையும்தான்...
இன்றைய காலத்தில் வீணாவைப்போல காதலைச் சுமக்கிற பெண்களாக எத்தனைபேர் இருக்கிறார்கள்....
சிந்தனை ஓடியது எனக்குள்ளே.
சுரேஷ் தர்மா
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை