தீ - சுரேஷ் தர்மா!!
வானம் இருண்டு கிடந்தது. பச்சை மரங்கள் பனி போர்த்தியது போல மங்கித் தெரிந்தன.
நேரம் காலை ஒன்பது மணி என்றது சுவரிலே தொங்கிய கடிகாரம்.
பிள்ளைகள் முன்பள்ளிக்கும் அம்மா சந்தை வியாபாரத்திற்கும் சென்றுவிட்டதால் வீடு யாருமற்று வெறிச்சோடியிருந்தது.
காலை வேலைகளை முடித்துவிட்டு யன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்த எனது பார்வை மாமரத்தில் ஓடிய இரண்டு அணில்களில் நிலை குத்தியது.
அந்த இரண்டு அணில்களும் ஒன்றையொன்று துரத்தி ஓடிக்கொண்டிருந்தன. அது ஒரு வித நளினமாக இருந்தது. முன்னால் சென்ற அணில் அங்கும் இங்குமாக வளைந்து செல்ல, பின்னால் சென்ற அணிலும் விடாமல் பின்னாலேயே சென்றது.
ஒரு கட்டத்தில் முன்னால் சென்ற அணில், பின் அணிலின் பிடிக்குள் அகப்பட்டுவிட, அதனை முன் கைகளால் தழுவிய பின் அணிலின் பிடிக்குள் மிக அழகாக அடங்கிக்கொண்டது முன் அணில்.
இந்த நிகழ்வு எனக்குள் இருந்த தாபத்தவிப்பை கிளறிவிட்டது. உடம்பில் ஏதோ ஒருவித உணர்வு வந்து ஒட்டிக்கொள்ள அடி வயிற்றில் அழகான உணர்வொன்று உடைப்பெடுத்தது.
ஆண்டுகள் ஐந்து கடந்து என் உடலில் ஏற்பட்ட இந்த உணர்வில் என்ன செய்வதெனத் தெரியாது அமர்ந்திருந்த கதிரையில் மெல்லச் சாய்ந்து கொண்டேன்.
என்னைப்போன்ற இளம் விதவைகளுக்கு இவ்வாறு ஏற்படுவதெல்லாம் மிகக்கொடிய தருணங்களே. கணவனை இழந்துவிட்ட பிறகு, பெரும்பாலும் முடிந்தவரை இந்த உணர்வுகளுக்கு இடம்கொடுக்காமல் வாழவே விரும்புகிறோம்... அல்லது பழக்கப்பட்டு விடுகிறோம்
கணவர் வானகன் இறந்து ஐந்து ஆண்டுகளாகிவிட்டன. அன்றில் இருந்து இந்த உணர்வுகளை மேலெழ விடாமல் பார்த்துக்கொண்ட எனக்கு, இன்று கண்ட அணில் காட்சிகள் ஆசையை உண்டாக்கி விட்டது.
வானகனுடனான வாழ்க்கை அழகான கோலம் போன்றது. எங்கள் கடந்தகாலமும் இல்லற வாழ்வின் நினைவுகளும் என்னிவ் உலாப்போக ஆரம்பித்தன.
. எங்கள் வீட்டில், நான் இரண்டாவது பிள்ளை என்றாலும் முதல் பிள்ளை போல இருக்கவேண்டிய நிலைப்பாடுதான் இருந்தது. காரணம் அண்ணா போராளி.
தேசத்தை நேசித்த அவனுடைய உணர்வுகளுக்கு அம்மாவும் அப்பாவும் தடையாக இருந்ததில்லை.
சிறுவயதிலேயே எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த கலைபண்பாட்டுக் கழகத்தினருடன் இணைந்து தெருக்கூத்து நாடகங்கள் நடிக்கவும் பாடல்கள் பாடவும் போகிற அண்ணா, நாளோட்டத்தில் அப்படியே போராட்டத்தில் இணைந்து விட்டார்.
எனக்கு கீழே இரண்டு தம்பிமார் ஒரு தங்கை என இருந்தனர். நோயாளியான அப்பா, அதிகம் வேலைகளுக்குப் போக மாட்டார். அம்மாதான் சந்தையில் தூள், முட்டை என்பவற்றை வியாபாரம் செய்து எங்களைப் படிக்கவைத்தவா. நானும் உயர்தரம் முடித்து விட்டு மருந்தகத்தில் வேலைக்குச் சேர்ந்து விட்டேன்.
அம்மாவின் வருமானத்திலும்
என்னுடைய உழைப்பிலுமாக எங்கள் குடும்ப வண்டி ஓரளவு ஓடிக்கொண்டிருந்தது.
அது போராட்ட காலம் என்பதால் தன்னிறைவான வாழ்க்கை இருந்தது. ஆடம்பரங்கள் அற்ற அந்த வாழ்க்கையில் ஒரு நிறைவு இருந்தது.
மருந்தகத்தில் வேலை செய்யும் காலத்தில் தான் வானகனைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. ஒருநாள் மதிய நேரம் இருக்கும். இரண்டு போராளி அண்ணாக்கள் எங்கள் கடைக்கு வந்தனர். . அதில் ஒருவர் மிகவும் சோர்ந்து இருந்தது போல தெரிந்தது. அவர்கள் எங்கள் கடைக்கு அருகில் உள்ள முகாமில்தான் தங்கியிருந்தனர்.
தலையிடி என்று விக்ஸ் டப்பி கேட்டு வாங்கியவர்களிடம் விலையைக்கூறி காசை வாங்கிவிட்டு நின்ற எனக்கு, மனம் கேட்கவில்லை.
""என்னண்ணா...இந்த அணாணா சோர்வாக இருக்கிறார்?", என்றேன்.
அவருக்கு தடிமன், காய்ச்சல்.... கூட வந்த அண்ணா சொல்லவும் அவரைப் பார்த்துவிட்டு இரண்டு பனடோல் எடுத்துவந்து அவரிடம் கொடுத்து,
"இந்தாங்கோ அண்ணா...."
இதை விழுங்குங்கோ " என்று கூறிக்கொடுத்தேன்.
*அவன் குளிசை போடமாட்டான் தங்கச்சி "என்றார் மற்ற அண்ணா.
நான் சிரிப்போடு அவரைப் பாரத்துவிட்டு பின்னர்,"அண்ணா குளிசை போடாமல் வருத்தம் நிக்காது... இதைப்போடுங்கோ* என்று தண்ணிப்போத்தலையும் வலுக்கட்டாயமாக அவரிடம் கொடுத்தேன்.
என்னை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு பேசாமல் குளிசையை விழுங்கினார்.
கூட வந்த அண்ணா, அவரைப்பார்த்து கொடுப்புக்குள் சிரித்ததை நானும் பார்த்தேன்.
சிறிது நேரம் இருந்துவிட்டு இருவரும் புறப்பட்டுச் சென்றனர்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அடிக்கடி இருவரும் பார்த்துக் கொள்வோம். முதலில் ஒன்றும் பேசாமல் சென்றவர் நாளடைவில் சிரிக்கத் தொடங்கினார்.
நானும் வேண்டும் என்றே 'அண்ணா... அண்ணா ' என்றே கூப்பிடுவேன்.
சின்னச்சிரிப்புடன் முறைத்துவிட்டுச் செல்வார்.
அந்த மெல்லிய சிரிப்பு எனக்கு ஏதோ ஒரு விதத்தில் மகிழ்ச்சியைக் கொடுத்தது. நாளோட்டத்தில் எங்கள் புன்னகைகள் சிறு உரையாடலாக மாறி, இதயங்களை இடம்மாறச் செய்தது.
இந்தக் காலத்தில்தான் அண்ணாவும் வீரச்சாவடைந்து விட்டார். அதிலிருந்து ஓரளவு நாங்கள் மீண்டு வர வானகனும் ஒரு காரணம்தான். மகனாக, தான் இருப்பேன் என்கிற தைரியத்தை என் பெற்றவர்களுக்கு கொடுத்தார் வானகன்.
ஆசையாக காதலித்து, மேலிடத்து அனுமதி பெற்று நடந்த எங்கள் திருமண வாழ்வு அழகாகத்தான் சென்றது. சில மாதங்கள் விசுவமடுவில் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்தோம். அவர் படையணி பணிகளையும் கவனித்து என்னையும் எந்தக்குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.
தொடர்ந்தும் நான் மருந்தகத்தில் வேலை செய்ய வேண்டும் என்றும் என்னுடைய வருமானத்தை என்னுடைய வீட்டிற்கே கொடுக்க வேண்டும் எனவும் வானகன் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
வானகன், கிட்டு பீரங்கி படையணி போராளி. வீரமும் விவேகமும் கொண்ட போராளியான வானகனின் வாரிசுகளாக பருதியும் பகலவனும் பிறந்தனர்.
அவர்கள் பிறந்த சந்தோசத்தை முழுதாக அனுபவிக்க முடியாமல் இடப்பெயர்வு வந்துவிட்டது.
கடைசி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற எறிகணை வீச்சில் வானகன் வீரச்சாவடைந்த பிறகு வாழ்க்கை எனக்கு சூனியமாகவே இருந்தது..
அதன்பிறகு சரணடைந்து இடைத்தங்கல் முகாம்களில் இருந்து மீளக்குடியேறி வந்த போது அப்பாவும் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். தொடர்ந்து நான் வேலைக்குப் போவதை விரும்பாத அம்மா, 'பிள்ளைகளை வளர்க்கிற வேலையைப்பார் நான் உழைக்கிறன்' என்று கூறிவிட்டா.
இரண்டு தம்பிமாரும் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையோடு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தனர். வானகன் இல்லாத வாழ்வில் ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன.
ஒரு மாவீரனின் மனைவியாக ஆசைகள் துறந்து வாழ முற்பட்டாலும் அவ்வப்போது மனதில் எழுகிற உணர்வை அடக்க பெரும் பாடுபட வேண்டியிருந்தது.
எங்களைப்போன்ற இளம் விதவைகளுக்கு வாழ்க்கை ஒரு சாபக்கேடு போன்றதே.
எண்ணங்கள் உலுக்கிய போதும் என்னுள் எழுந்த பேரலை அடங்க மறுத்தது.
மெல்ல எழுந்து சென்று வீட்டில் இருந்த ஒரே மர அலுமாரியைத் திறந்து வானகனின் சேட் ஒன்றை வெளியே எடுத்து கைகளில் வைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன்.
'வானகன்... என் உயிரோடு கலந்தவர்...வீணையின் நாதம் போல என் நெஞ்சுக்குள் இதம் தருவது அவருடைய நினைவுகளே'.
சேட்டை மார்போடு அணைத்தபடி அலுமாரியில் சாய்ந்து கொண்டேன். எங்கிருந்தோ வீசிய மெல்லிய காற்றில் அவருடைய வாசம் தவள்ந்து வந்தது.
என் மொத்த தவிப்பும் அதன் மீது முத்தமாக இறங்கியது.
.
"வானகன்... ஏன்... என்னை விட்டிட்டுப் போனீங்கள்....என்னையும் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாமே...."
என்னையறியாமல் உதடுகள் முணுமுணுத்தன.
எழுத்து - சுரேஷ் தர்மா
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை