வயல்வீடு - எழுத்து - சுரேஷ் தர்மா!!
பச்சைப் பசேலென இருந்த வயலுக்கு நடுவே இருந்தது அந்த வீடு. ஒற்றை அறை, ஒரு சமையல்கூடம் என சிறிய அளவில் இருந்த அந்த வீட்டில் இதுவரை யாரும் வந்து அதிகநாட்கள் தங்கியதில்லை. அது எங்கள் பூர்வீக வீடு.
இங்கு வந்ததேயில்லை நான். அப்பாவுக்கு உரிமையுள்ள பூர்வீக வயலில் வீடு உள்ளதென்பது தெரியும் என்றாலும் இங்கு வருகிற வாய்ப்போ விருப்போ எனக்கு இருக்கவில்லை.
இப்போது தான். என் மன ஆற்றாமையைத் தணிப்பதற்காக நான் இங்கு வந்து தங்கியிருக்கிறேன்.
பெற்வர்கள் இருவரும் விமானக்குண்டு வீச்சில் ஒன்றாக இறந்துவிட, அம்மம்மாவோடுதான் இருந்து வளர்ந்தேன்.
பாசத்தையும் கண்டிப்பையும் அளவாக காட்டியவர் என் அம்மம்மா.
எனக்கு இருபத்தைந்து வயதாகிறது.
இளமைத்துடிப்பில் இதம்காணுகிற பருவம். ஆனால் என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த விரக்தி காரணமாக தனிமையை நாடி வயல் வீட்டுக்கு வந்திருக்கிறேன்.
பெற்றவர்களை இழந்த துயரத்தை அம்மம்மாவின் அன்பிலும் இடைவிடாத படிப்பிலுமாக சமப்படுத்திக்கொண்டிருந்தேன்.
சாதாரணதரம், உயர்தரம் இரண்டிலும் சிறந்த பெறுபேறு பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக படிப்பிற்குச் சென்றேன்.
அங்கு என் கல்விக் காலத்தில் ஏற்பட்ட மன விரக்தி கொஞ்சம் கொஞ்சமாக என்னை விழுங்கி உயிரை மாய்க்கிற அளவிற்கு மன அழுத்தத்தை உண்டு பண்ணியிருந்தது.
அதன் தொடர் தாக்கமே இந்தத் தனிமையான வாழ்க்கைத் தெரிவு .
ஒவ்வோரு மனிதர்களுக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் வாழ்க்கை மீது சலிப்பு ஏற்பட்டு விடுகிறது.அந்தச் சலிப்பு தனிமையைத் தேடவைக்கிறது.
யாரோ கூப்பிடுகிற சத்தம் கேட்டதால் சிந்தனைகள் கலைய, பெருமூச்சோடு எழுந்து வெளியே வந்தேன்.
சிதம்பரம் தாத்தா வெளியே நின்றுகொண்டிருந்தார்.
அப்பாவின் பெரியப்பா முறையானவர், இந்தக் காணியில் அப்பாவின் அப்பாவோடு அவருக்கும் பங்கு இருந்தது. ஆனால், இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னர்தான் அவர்கள் விற்க இருந்த மீதிப்பங்கிற்கும் காசைக்கொடுத்து வாங்கி அப்பா தன்னுடைய பெயரில் முழுக்காணியையும் பதிவு செயிதிருந்தார்.
திடீரென சிதம்பரம் தாத்தாவைக் கண்டதும் எனக்கு சிறிது எரிச்சலாகவே இருந்தது. ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
"வாங்கோ...." என்றேன் பொதுப்படையாக.
மெல்ல அனுங்கி அனுங்கி வந்தவரின் கையில் சிறு பை இருந்தது.
சிதம்பரம் தாத்தாவின் வீடு, இங்கிருந்து நான்கைந்து மைல் தொலைவில் இருந்தது. இவ்வளவு காவமும் இந்தக் காணியை அவர்கள்தான் பராமரித்து வந்தனர்.
அதனால்தான் நானும் என்னுடைய எரிச்சலை அடக்கிக் கொண்டு உள்ளே நடந்தேன்.
சிதம்பரம் தாத்தாவுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். இருவரும் திருமணம் செய்து அருகருகே வீடுகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர்.
தாத்தா மிகவும் கண்டிப்பானவர், நான் அவரை அதிகம் கண்டதில்லை என்றாலும் காணுகிற நேரங்களிலும் அவர் சிரித்த முகமாக இருந்து நான் பார்த்ததே இல்லை.
உள்ளே வந்தவர் வீட்டை ஒருமுறை சுற்றிவரப் பார்த்தார். பார்த்துவிட்டு வீட்டின் வாசல் பக்கமாக இருந்த சீமெந்து திட்டில் அமர்ந்து கொண்டார்.
"பரவாயில்லை...வீட்டைச் சுத்தமாகத்தான் வைத்திருக்கிறாய்..." என்றார்.
நான் உள்ளே சென்று கோப்பியை ஆற்றிக் கொண்டுவந்து கொடுத்தேன்.
நடுங்கும் கரங்களால் அதனை வாங்கியவர், மெல்ல மெல்லப் பருகத் தொடங்கியபடி,
"மித்திரன்..." என்றார்.
நான் பதில் கூறாது நிமிர்ந்து அவரைப் பார்த்தேன்.
"நான் ரெண்டு மூன்று நாளைக்கு இஞ்ச தங்கட்டே?" என்று கேட்கவும் எனக்கு விசரே வந்துவிட்டது.
"இதென்னடா....சோதனை...நான் தனிமையை விரும்பி இங்க வர, இவர்.." மனம் முறுமுறுத்தது.
என்னுடைய மௌனம் அவருக்கு எதை உணர்த்தியதோ,
மித்திரன்...திடீரெண்டு நீ ஏன் இஞ்ச வந்தனி? என்றார்.
"எனக்கு கொஞ்ச நாளைக்கு தனிய இருக்கவேணும் போல இருந்தது அதுதான, ஆனால் உங்கட வயசுக்கு அப்பிடி எண்ணம் வராதுதானே..." என்றேன் கேளவியாக.
,
"காதல் தோல்வியோ ? " என்றார்.
நான் எதுவும் பேசவில்லை...
'கிழவருக்கு வேற வேலை இல்லை...' என்கிற எண்ணம்தான் ஓடியது.
"காதல் ஒரு அபரிமிதமான உணர்வு கண்டியோ...உண்மையா காதலிக்கிறவைக்கு இந்த உலகத்திலை கண்ணீர் தான் கிடைக்கிறது. என்ர கனகம்மாவுக்கும் நான் கண்ணீரைத்தான் குடுத்தனான்..." என்றுவிட்டு சற்று மௌனமானார்..
எனக்கு மனம் கேட்கவில்லை...அருகில் சென்று அமர்ந்து கொண்டேன். இப்போது அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
என்னையே பார்த்தவர்,
"மித்திரன், என்ர மனிசிக்கு நான் எண்டால் அப்பிடி ஒரு பாசம், ஆனால் எனக்கு அவளை அவ்வளவுக்குப் பிடிக்காது, காரணம்...வேற ஒண்டும் இல்லை...அவள் என்ர அளவுக்குப் படிக்கேல்லை...கதைச்சபடி சீதனம் தராமல் அவளின்ரை தகப்பன் ஏமாத்திப்போட்டார்...இதுகள்தான்..."
எரிச்சல் மறைநது அவருடைய கதையைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள் ஏற்பட்டது. அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
பேச்சை நிறுத்தி சற்று தன்னை ஆசுவாசப்படுத்நியவர்,
"அவள் வாழ்ந்த வரை எனக்கு எந்தக் கவலையும் இருக்கவில்லை, அவள் போன பிறகு எனக்கு நிம்மதியே இல்லை" என்றவர்,
"இப்ப மருமகள்மார் ஏனோ தானோவெண்டு தான் கவனிக்கினம், வேற வழி இல்லாமல் தாறதைச் சாப்பிடுறன்...முதல் எல்லாம், கனகம்மா இருக்கேக்க, எனக்கு ராஜ வாழ்க்கைதான்....ஆனால் ஒரு நாளும் நான் அவளை மனுஷியாவே பாத்ததில்லை...வீட்டிலை அவளும் ஒரு பொருள் மாதிரி இருந்தவள்...கடமைக்கும் ஆசைக்குமாக மட்டுமே வாழ்ந்திட்டன்...இப்ப நினைக்க, நெஞ்சு கொதிக்கிது, வாழக்கிடைச்ச வாய்ப்பை இழந்திட்டனே என்று ஆற்றாமையாக இருக்கு...
அவள் வேளைக்கே போய்ச்சேந்திட்டாள்...நான் கிடந்து சீரழியிறன்...
வாழ்க்கை ஒரு முறை தான் ஐயா..
கிடைச்ச வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்திடவேணும்..." தாத்தா சொன்னவைகள் சரிதான்...ஆனால் என்னுடைய வாழ்க்கையில் தலைகீழாகத்தானே நடந்தது.
தன் கண்ணீரைத் துடைத்தபடி அவர் என்னைப் பார்த்தார்.
இப்போது என்னுடைய முறை....
"சுருக்கம் நிறைந்த அந்த வயோதிப முகத்தின் ஏக்கத்தை என்னால் நிராகரிக்க முடியவில்லை.
"பல்கலைக்கழகத்தில படிக்கேக்க காவியா என்று ஒரு பிள்ளையை விரும்பினனான்...அவவும் விரும்பினவா,
படிப்பிலையும் நல்ல கெட்டிக்காரி, அழகானவள், எனக்குச் சமனாக அவளும் படிச்சவள்,
ஆனாவ் படிப்பு முடிஞ்ச கொஞ்ச நாளிலையை வேற ஒரு கலியாணம் கட்டி வெளிநாட்டுக்குப் போட்டா...." என்றேன் விட்டேற்றியாக.
அவர் மெல்லிய சிரிப்புடன்,
" நீ அதிகமாக அன்பு காட்டி தனிமைப்பட்டிருக்கிறாய்...நான் அன்பு காட்டாததிலை தனிமையை விரும்பி வந்திருக்கிறன்...
மித்திரன் அந்தப் பிள்ளையை நீ மிகுந்த நேசத்தோட காதலித்திருக்கிறாய். .ஆனால் விதி சதி செய்து விட்டது.
சரி....யோசியாதை, ஒன்று தட்டிப்போகுது என்றால் அதைவிடச் சிறப்பாக இன்னொன்று வரப்போகுது என்றுதான் அர்த்தம், அன்பை, காதலை, அழகு , வசதி என்கிற அளவுகோல் கொண்டு கணிப்பிடாதே...அது மனதிலிருந்து பொங்கி வழிகிற அன்பில் வரவேண்டும்" என்றார்.
நான் உதட்டைச் சுழித்தேன்....
அவர் கேள்வியாகப் பார்க்க, "பாப்பம்...பாப்பம்... " என்றேன் பெருமூச்சை வெளிவிட்டபடி.
"ஐயா...ஆரம்ப காலங்களில் மடலேறு காதல்...ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது என்றால் அவன் அந்தப் பெண்ணின் ஊருக்கு வந்து, அந்த ஊரின் ஆரம்ப எல்லையில் ஒரு மடலோடு குதிரையில் தனித்து நிற்பானாம்,
ஆண்கள் அப்படி நின்றால் அந்த ஊரவர்களுக்குத் தெரிந்து விடுமாம்...இவன் இந்த ஊரில் யாரோ ஒரு பெண்ணை விரும்புகிறான் என்று...
உடனே ஊர்ப்பெரியவர்கள் கூடி, அவனிடம் கேட்க, அவன் விபரம் சொன்னதும் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று, இன்ன ஊரைச்சேர்ந்த இன்னார் மகன் உங்கள் வீட்டு மகளைக்கேட்டு மடலேறியிருக்கிறான் என்பார்களாம்...
அதன் பிறகு பெண் வீட்டாரும் சம்மதம் என்றால் மணமுடித்து அனுப்புவார்களாம்.
அதற்கடுத்த தலைமுறையில் பிடித்திருக்கிறது என்பதைப் தனக்குப்பிடித்த பெண்ணிடம் கேட்டுத் திருமணம் செய்தார்கள்..
காதலில் தோற்றுப்போனால் தேவதாஸ் கோலம் கொண்டார்கள்..
இப்போதோ...அவரில்லாவிட்டால் இவர்...இவரில்லா விட்டால் அவர் என்கிற நிலைப்பாடாகிவிட்டது..
அவர் சொன்னதில் நியாயம் இருந்தது. அது சரியாகவும் இருந்தது.
உண்மையில் மூத்தவர்களின் அனுபவம் என்பது இளையவர்களுக்கான வழிகாட்டல் என்பது புரிந்தது.
அவர் சொன்னவற்றை ஆர்வமாகவே கேட்டேன்...
"'நான் ஒரு ரெண்டு நாளைக்கு இஞ்ச நிக்கிறன், பிறகு வீட்ட போறன்' என்றார்.
எனது தனிமை பறிக்கப்படும் என்கிற யோசனை இருந்தாலும் மறுக்க முடியாத நிலைமையில் சம்மதமாகத் தலையை ஆட்டினேன்.
எழுந்து உள்ளே வந்தவர் , "அசதியாகக்கிடக்கு...படுக்கப்போறன்" என்றார்.
நான் அவருக்கான தலையணை, பாய் இரண்டையும் எடுத்துக் கொடுத்து அவரைப் படுக்கச் செய்தேன்.
"அன்பு காட்டுவதற்கு அழகு தேவையில்லையே...." இப்போது என்னுடைய எண்ணங்களும் இப்படி ஓடியது .
அன்று மதியம் உணவு சமைத்து தாத்தாவுக்கும் கொடுத்தேன்.
மாலையில் இருவருமாக அதிக நேரம் கதைத்துக் கொண்டிருந்தோம். அந்த இனிய அனுபவம் எனக்கும் பிடித்திருந்தது.
இரவு இருவரும் ஒன்றாகவே படுக்கச் சென்றோம்...
ஏனோ எனக்கு அவருடனான பொழுதுகள் நீளவேண்டும் என்ற எண்ணமே தோன்றியது.
என்னுடைய மனமும் அத்தனை நாட்களாக இருந்த இறுக்கத்தைவிட்டு இலேசாக மாறியிருந்தது.
காலையில் பறவைகளின் ஒலியுடன்தான் நான் கண்விழித்தேன்...
எழுந்து வெளியே வந்து சுற்றிலும் பார்வையைப் படரவிட்டேன்...
பரந்த வயலும் அதன் அழகும் என்னை இன்னும் ஆசுவாசப்படுத்தியது.
தனிமையில் மட்டுமே கிட்டும் என நினைத்த நிம்மதி, தாத்தாவின் வார்த்தைகளால் கிட்டியிருந்தது.
நெற்கதிர்கள் வீச்சருவாள்கள் போல மின்னிக்கொண்டிருந்தன.
அழகான காட்சித் தரிசிப்புக்குப் பிறகு உள்ளே வந்து தேநீரை ஆற்றிவிட்டு சிதம்பரம் தாத்தாவிற்கு கொடுப்பதற்காக தட்டி எழுப்பினேன்
அவரிடம் எந்த அசைவும் இல்லை...நன்றாகத் தடவிப் பார்த்தேன்,
உடல் குளிர்ந்திருந்தது...
எனது உடல் நடுங்கியது...
ஒருவாறு உள்ளே சென்று அவருடைய வீட்டுக்கு அழைத்து விபரத்தைச் சொல்லிவிட்டு வாசலில் வந்து நின்று திரும்பிப் பார்த்த போது, பெரும் பூதம் போல நீண்டிருந்தது நான் விரும்பிய தனிமை..
.
எழுத்து - சுரேஷ் தர்மா
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை