காதல் கீதம்!!

 


கல்யாணத்தில் தோற்றாலும்

கனவுகளிடம் தோற்கக் கூடாது

என்பதைக் கற்றுக்கொண்ட 

பெண் ஒருத்தி மீண்டும்

காதலுற்று இருக்கின்றாள்.


தன் காதலை மீட்டுத்தந்த

காதலனுக்கு 

அவள் எழுதும் கடிதம்!


சாய்ந்து போன என் காதல் 

வானத்தை நிமிர்த்தி

சாயம் போன என்

வானவில்லுக்கு வண்ணமடித்தவனே

உன்னிடம் சொல்ல சில சேதிகள்

இருக்கிறது என்னிடம்


காதல் எனும் செடியில் இவர்கள் 

கட்டி வைத்திருக்கும்

கதைகள் ஏராளம் !


ஒரு செடியில் ஒரு பூ தான் என்றார்கள்

பின்னர் ஒன்று உதிர்ந்தால் 

இன்னொன்று  பூக்கட்டும் என்றார்கள்


நான் கேட்கிறேன்…!


ஒரு பூ தானே உதிர்ந்தால் தான்

இன்னொன்று பூக்க வேண்டுமா என்ன..? 

அந்தப் பூ எந்தன் வேரினைத்

தின்று கொண்டிருந்தது என்று

தெரிந்ததும் அதனை 

உதிர்ந்து போகச் சொல்லி 

ஆணையிட்டேன்!

பின்னர்தான் என் வேரெல்லாம்

பூ பூத்தது!


ஒரு நீண்ட கால பருவ மாற்றத்தில்

தன் இலைகளையெல்லாம்

உதிர்த்து விட்டு நிற்கும் 

ஒரு கிளைத்துப் போன விருட்சம்

வரவிருக்கும் வசந்த காலத்தைச்

சொல்ல துளிர் விட்டு வரும் 

ஒற்றை இலை 

அந்த இலை மரத்திற்குத் தரும்

நம்பிக்கை தான் உன் காதல் எனக்கு.!


வெறுங்கையோடு வருபவளுக்கு

நிறையக் கவிதைகளையும்,புன்னகையையும்

நிரப்பி அனுப்புபவனே

உன் நேசம் என்னை 

என்ன செய்திருக்கிறது தெரியுமா..?


மழை அடித்து ஓய்ந்த ஒரு 

மொட்டை மாடியைக் கூட

மனம் மயங்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

உன் காதல் சொல்லித்தந்த 

ரசனை அது..!


அடுத்தவர்களுக்காக கண்ணீர்

சிந்துவதில் ஆனந்தமடைகிறேன்

உன் காதல் கற்றுத் தந்த

ஈரம் அது ..!


முத்தமும் மோகமும் மட்டுமல்ல

புத்தமும் தர்மமும் கூட பேசுகிறோம்

உன் காதல் கட்டியணைத்த 

பாடம் அது..!


நான் காதலிக்கும் போதி மரமே..!


கடல், வானம் , நிலா , நட்சத்திரம்

இவையெல்லாம் எனக்கு 

என்னவாக இருந்ததோ 

அது அத்தனையுமாக நீ 

இருக்கிறாய் இப்போது


எந்தன் வாழ்வின் செளந்தர்யம் நீ !


என் கலையை

என ரசனையை

எந்தன் காதலை

ஏன் என்னையே எனக்கு

கண்ணாடி பிடித்துக் 

காட்டியிருக்கிறாய் 


கேட்கலாம் என்னை

புதிதாய் காதல் செய்யும் 

பருவப் பெண் போல் 

எதற்கு இத்தனை பீடிகை என்று:


காதலிப்பது எனக்கு

புதிதாக இல்லாமல் இருக்கலாம்

இந்தக் காதலில் தானே நான்

புதியவளாய் இருக்கிறேன் இன்று!


காதல் என் வாழ்வின் பூரணம்

என்பதை எப்படிச் சொல்வேன்?


பெண்ணடிமைத் தனத்திற்கும் 

அடிமைத்தனத்திற்கும் 

எதிரானவள் தானே நான் 

ஆனால் 

எந்த நிபந்தனையும் இல்லாமல்

உந்தன் காதல் முன்னால் 

மண்டியிடச் சம்மதித்திருக்கிறது 

என் மனம்!


நாத்திகம் பேசுபவள் தானே நான்

மீதமிருக்கும் காலம் எல்லாம் 

உன்னைக் காதலிக்கும் 

போதை தொடர இல்லாத

இறைவனைக் கூட இறைஞ்சி 

நிற்கிறேன் உன் காதலியாய் 

நான் என்றும் இருக்கவேண்டும் என்று. 


காதல் என்பது 

சுகித்தல், சகித்தல் இல்லை 

என்பதை எனக்குப் 

புரியவைத்தவனே உன் 

காதலியாய் என்னை 

இருக்கவிடு ..!




பகிர்வு


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.