கடல் பறவை - சுரேஷ் தர்மா!!
வெள்ளலைகள் ஒன்றையொன்று துரத்தியபடி ஓடிவந்துகொண்டிருந்தன. காலையின் கடற்கரைத்தோற்றம் எழில் கொட்டும் காட்சியாக இருந்தது.
சூரியச்செவ்வொளி கடலெங்கும் பரவி புது ஒளியூட்டிக்கொண்டிருந்தது.
வாடிக்குள்ளே படுத்திருந்து கடலையே வெறித்துக்கொண்டிருந்தேன். அங்கமெல்லாம் ஒருவித சோர்வு வந்து ஒட்டிக்கொண்டிருந்தது.
இந்தக்கடல் மீதுதான் எவ்வளவு காதல் எனக்கு...
பிறந்து வளர்ந்த போது கடலை நேசித்ததை விட வேங்கையாக நின்ற போதுதான் அதிகமாக நேசித்தேன். கடலுக்குள்ளேயே என் நேரங்களைத் தொலைத்தேன், கடலைக் காக்கிற பொறுப்பில் அதி தீவிரமாக இருந்தேன்..ஆனால் இப்போது..என் கடல்....
அது ஒரு வாழ்க்கைதான்...
கண்களில் இருந்து கண்ணீர் தன்பாட்டில் வழிந்தது.
சில நாட்களாக கடலுக்குப் போகவில்லை, கையில் ஒரு சதம் காசும் இல்லை, வீட்டுக்கு வேறு பணம் அனுப்ப வேண்டும்.
முதல் நாள் மனைவி அலைபேசியில் சொன்னது காதில் வந்துவந்து போனது.
"மூத்தவனுக்கு கொப்பிகள் வாங்கவேணும், அதோட தனியார்கல்வி நிலைய காசும் கட்டவேணும், பிறகு வகுப்புக்கு விடாயினம், கெஞ்சிக்கூத்தாடி ஒரு மாதிரி அங்க சேர்த்தனான், இப்ப காசு கட்டேல்லை எண்டால்...
சின்னனுக்கு பால்மா வேற முடிஞ்சுது, ஒரே அழுகை, பாலைக்குடுத்தாலும் இருந்தால் தானே பசி அடங்கும். எனக்கெண்டால் விசராக்கிடக்கு, காதுத்தோடுதான் கிடக்கு, அதையும் அடைவு வைச்சுத்தான் இதுகளைப் பாக்கவேணும் போல கிடக்கு..." மனைவி சொல்லிக்கொண்டே போக, நான் மௌனமாகவே இருந்தேன்.
"என்னப்பா...பேசாமல் இருக்கிறியள்...இருக்கிறியள்தானே அழைப்பில.... "
"ம்...சொல்லு..." என்றேன்.
"நான் என்ன கதையே சொல்லுறன்..ம்..சொல்லு எண்டுறியள்..." அப்போதும் அவளிடம் மறுத்து எதுவும் சொல்லாமல் இருந்தேன்.
என் மனநிலை விளங்கியது போல, அவளே தொடர்ந்தாள்.
".காலமை கானகனுக்கு நல்ல அடி," மனைவி சொன்னதைக் கேட்டதும்
சிறு இடியொன்று விழுந்தது போல என்னுடைய இதயம் வலித்தது.
"ஏன் அடிச்சனி" என்று சண்டை போடுவேன் என் நினைத்தாளோ என்னவோ சிறிது நேர இடைவெளியில்,
"காலமை பக்கத்து வீட்ட போய், பணிஸ் கேட்டு வாங்கினவனாம்...அவன்தான் சொன்னவன்...இருந்த ஆத்திரம் எல்லாம் அவனிலை தீர்த்திட்டன்..." அவள் சொல்ல,
என் இதயக்கூட்டில் அமிலம் ஊற்றியது போன்று பொங்கி எழுந்தது வலி.
என்னையறியாமலே கண்களில் கண்ணீர் கோடாக வழிந்து கொண்டிருந்தது...
"பாவப்பட்ட என்னைப்போன்ற நிலையில் இருக்கிற அப்பனுக்குப் பிறந்ததால இந்தப் பிள்ளையளும் பாவப்பட்ட பிறவிகளாகிவிட்டதே..." மனம் கொதித்தது..
"மதியம் என்ன சமைச்சனி?" என்றேன்.
"ஒரு சுண்டு வரும், வெள்ளைப்பச்சை அரிசி கிடந்தது, அதையும் போட்டு கருவாடு நாலைஞ்சு கிடந்தது, அதோட மரத்திலை முருங்கையிலையும் பிடுங்கிப் போட்டு, சொதி வைச்சனான், இரவுக்கு சிவப்பு பச்சை அரிசி கொஞ்சம் கிடந்து ஊறவைச்சிருக்கன், சம்பலிடிக்கிற உரல்ல இடிச்சு கொஞ்சம் களி செய்து குடுக்கப்போறன்." என்றவள்,
"நீங்கள் என்ன சாப்பிட்ட? என்றாள்.
"இதிலை சோறும் கொடுவா குழம்பு வைச்சவங்கள், அதோட சாப்பிட்டன் " என்று மனமறிந்து பொய் உரைத்தேன்.
நேற்று இரவு , 'பெடியள் சேந்து சமைக்கிறம் அண்ண...சாப்பிடவாங்கோ' என்று கூப்பிடப் போய்ச்சாப்பிட்டதுதான் ..
காலமை இருந்து ஒரு சாப்பாடும் இல்லை...
வழமையா சம்மட்டியார் வீட்ட இருந்து வாறது...அவையள் ஏதோ பொங்கல் எண்டு வன்னிக்குப் போனதாலை இண்டைக்குச் சாப்பாடு வரேல்லை...
'"மனைவி கயல்விழி பாவம்....சூதுவாது தெரியாதவள், ஏதோ இருக்கிறதைச் சமைத்து பிள்ளைகளின் பசி ஆற்றும் வல்லமை கொண்டவள், ஆடம்பரங்களுக்கெல்லாம் ஆசைப்படாத வெகுளி...நான் சாப்பிடவில்லை என்று தெரிந்தால் தானும் பட்டினி கிடக்கிற அன்புக்காரி... '
"சரி....எப்ப வாறியள்..." என்றாள் குரலில் ஒரு வித நளினத்தோடு.
"வருவன்...வருவன்...வை..." என்றேன்.
மனைவி கணவனை அழைக்கிறாள்...ஓடிப்போக முடியாமல் வறுமை தடுக்கிறது...
பெருமூச்சு வெளிவந்தது என்னிடமிருந்து.
என் சின்ன மகள், ஐந்து மாத கைக்குழந்தை, தாயின் மடியில் இருந்து மழலையில் அங்கும் இங்கும் புரள்வது அலைபேசி வழியே கேட்டது.
"அப்பா... இவன் கானகன் கதைக்கிறான்..." என்றாள் அவசரமாக.
"அப்பா. ...." எட்டு வயதான மகனின் குரலில் எப்பவுமே நான் எனது உயிர் நண்பன் கானகனை உணர்வதுண்டு.
"என்னப்பா....அம்மா அடிச்சதா....சரி...அப்பா வரும்போது பணிஸ் வாங்கிவாறன்...சரியா.தங்கச்சியைக் கவனமாப் பார் என்ன.." என்று விட்டு அதிகம் பேச முடியாது அலைபேசியை வைத்தேன்.
குரல் கம்மியது எனக்கு. பிள்ளைகளை நினைக்க இயலாமையில் தவித்தது மனம்...
மகனுக்கு நான் அடிப்பதே இல்லை, காரணம், அவனுடைய பெயர்தான்...
கானகன் என்பது விதையாகிப்போன எனது உயிர் நண்பனின் பெயர்.
கானகனின் நினைவு சுழன்று எழுந்தது மனதில்.
கானகனும் நானும் ஒன்றாகப் பயிற்சி எடுத்தோம்...ஒன்றாக களங்கள் பல கண்டோம்...ஒரு கடல் சண்டையில், எனது மடியிலேயே அவனது இறுதி மூச்சு நின்று போனது....
அவனது நினைவாகவே எனது மகனுக்கு கானகன் என்று பெயர் வைத்தேன்.
நினைவுகள் தந்த வேதனை மனதை அரிக்க, நிமிர்ந்து அமர்ந்தேன்.
வீட்ட இருந்து வந்து ஒரு கிழமையாச்சு, வந்த நாளில் இருந்து தொழில் இல்லை...காத்து மோசமா அடிச்சதிலை ஒருத்தரும் கடலுக்குப் போக முடியேல்லை...மற்றவர்களோடு கூலிக்குப் போகிற நமக்கு, இப்படியான நேரங்களில் கடும் நெருக்கடி ஆகிவிடும்.
ஒரு காலத்தில் கடலோடு அலையாடி கடலோடு உறவாடி வாழ்ந்தவன் நான்...
யாழ்ப்பாணம் குறுநகர் கடற்கரை கிராமம் தான் எங்கள் சொந்த இடம்...அப்பா கடற்தொழிலாளி...
பிறந்து வளர்ந்த காலத்திலேயே கடலோடுதான் வாழ்க்கை.
வாலிப வயது வந்த போது தேசக்காதல் பிடித்துக்கொண்டது. நல்லூர் வீதியிலே நாவறண்டு யாகம் செய்தவனின் அடிநெஞ்சின் வரிகளை நெஞ்சிலே சுமந்து கொண்டு போராடப்புறப்பட்ட போது வயது பதினெட்டு.
மீன் குஞ்சு போல கடல் மடியில் தாவிய வேகம் கண்டு கடற்புலிகள் அணியில் இணைக்கப்பட்டேன்.
பயிற்சிகளை முடித்து அந்த அணியில் சிறந்த வீரனாக வெளிவந்து, அதன் பிறகு கடலன்னையிடம் செய்த சாகசங்கள் எத்தனை...எத்தனை...
விசேட ரோந்து அணியின் பொறுப்பாளராக ஒரு அணியின் தலைவனாக ஆனந்தக்களிப்போடு இருந்த நாட்களை நினைத்தால் ....
எத்தனை விழுப்புண்கள்...இறுதிப்போரின் கடைசி நாட்களில் ஒற்றைக்காலைக்கூட இழந்தாச்சு.
மீண்டும் கண்கள் கரித்து கண்ணீர் வழிந்தது.
சரணடைதல் என்கிற எதிராபாராத நிலைப்பாட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் தட்டுத்தடுமாறி, வேறு வழியின்றி அந்த முடிவுக்கு உடன்பட்ட போது, மனம் இரணமாகத்தானே வலித்தது.
புனர்வாழ்வில் இரண்டு ஆண்டுகள் போக, வெளியே வந்தால் இந்தச் சமூகம் அத்தனை சுலபமாக எங்களை ஏற்றுக்கொண்டு விடவில்லையே.
ஏதேதோ வேலைகளுக்குப் போய், அது முடியாமல் கடைசியில் கடலன்னை மடியிலேயே தஞ்சம் என்று விழுந்தாச்சு.
இப்பவும், 'காலில்லாதவன்' என்று விட்டு எல்லோரும் கூட்டிச் செல்வதில்லையே தொழிலுக்கு. பிரான்ஸிஸ் சம்மட்டியார்தான் இரக்கம் பார்த்து அழைத்துச் சென்றவர்.
அவருடன்தான் இன்றுவரை தொழில் செய்வதும்.
நினைவுகளை உலுக்கிக்கொண்டேன்.
ஒரு ஐயாயிரம் ரூபா கடனாகவேனும் வாங்கி அனுப்பலாம் என்றால் ஏற்கனவே வாங்கின காசு குடுபடாமல் கிடக்கு...
அண்ணனின் பிள்ளைகளாக, இருந்த போது வாழ்க்கையின் நீள அகலமோ , வறுமையின் வடுக்களோ தெரியவில்லை..
இப்போது,
மனிதர்களை மனிதர்களே மதிக்காத மடத்தனத்தைப் பார்க்கிற போது, 'இந்த மக்களுக்காகவா உயிரைக்கூட மதிக்காது போராடினோம்' என்று எண்ணத்தோன்றுகிறது.
புரண்டு படுத்திருந்த என்னை மீண்டும் வந்த அலைபேசி அழைப்பு உலுக்கியது.
சட்டென்று திரும்பி எழும்ப முடியாமல் இல்லாத கால் பக்கம் சுரீலென்று வலி தோன்றியது.
நான் எழுந்து அமர்வதற்குள் அழைப்பு நின்றுபோயிருந்தது.
'சரி...திரும்ப எடுத்தால் கதைப்பம்..'.என்று நினைத்தபடி இருக்க, மீண்டும் ஒலி எழுப்பியது அலைபேசி.
எடுத்துக் காதுக்கு கொடுத்தேன்.
"தூயவன் அண்ணா...வணக்கம்..." என்று ஒலித்த கம்பீர குரலில் திடுக்கிட்டுப்போய்,
"ஆர்...?" என்றேன்.
"நான்தான் அண்ணா....மகிழன்.." .என்றது எதிர்முனை.
'மகிழன்....'
நான் யோசிக்கவும்
"அண்ணா...நான் தம்பி அண்ணா." ..என்றதும் நினைவுகள் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஓடி, கடலோரத்தில் என்னைச் சுற்றி இருந்தவர்களை இழுத்து வந்தது.
"டேய்...நீ..."
"ஓமண்ணா ." ..கரகரத்து ஒலித்தது அவனுடைய குரல்
"டேய்....எங்கையடா இருக்கிறாய்...?"
"அண்ணா...நான் கனடா வந்திட்டன்...உங்களைத் தேடினனான் அண்ணா..."
"சந்தோசமடா...நல்லது...மகிழ்ச்சியா இரு..." என்றேன்.
பத்து வருடங்களுக்கு முன்னான வாழ்வில் என்னோடு இருந்தவன். அண்ணா....அண்ணா என்று எப்பவும் கூடவே திரிவான்......நான் என்றால் அப்பிடி ஒரு பாசம் அவனுக்கு, தன்னுடைய வீரச்சாவடைந்த அண்ணனைப்போலவே நான் இருப்பதாக கூறுவான். தன் வீட்டாரையும் அதே அன்பைக் காட்ட வைத்தவன்.
ஒரு நொடிக்குள் உலகையே சுற்றிவிடும் நினைவுகள் மகிழனின் ஞாபகங்களையும் ஒரு நொடியில் மீட்ட வைத்தது.
"அண்ணா...ஏப்பிடி இருக்கிறியள்?"
"ஓமடா.....நல்லா இருக்கிறன்..."
"அண்ணா...நீ எப்பவும் இப்பிடித்தான்...எவ்வளவு சோகம் எண்டாலும் வெளிய காட்டுறதே இல்லை..."
"ஏனடா அப்பிடிச் சொல்லுறாய்? நீ எப்பிடி இருக்கிறாய்?"
"நான் நல்லா இருக்கிறன்...நேற்று முகநூல் சினேகிதப்பெடியள் போட்டிருந்த படத்திலைதான் பாத்தன்...பிறகு தான் உடனே கதைச்சு இலக்கம் வாங்கினனான்...
அம்மா அப்பா எல்லாரும் கனடா வந்திட்டினம் அண்ணா.....அதுதான் இவ்வளவுகாலம் உங்கட தொடர்பு எடுக்கேலாமல் போட்டுது...அண்ணா...அந்தப் படத்திலை உன்னைப் பாத்திட்டு ஏங்கிப் போனன்..கடற்புலிகளில் கள வீரனாக, எதிரிக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த .எங்கட கடல் பறவை...சிறகிழந்து கிடக்கே. எண்டு..."
வாய் விட்டு விம்மியழுதேன்...
"அண்ணா...அழாதை....நான் எல்லாம் அறிஞ்சிட்டன்...கடல் உனக்கு உயிர்...அது எனக்குத் தெரியும்...கடலுணவுகளை விற்பனை செய்யிற பெரிய கடை தான் உனக்காகப் போட்டுத்தரப்போறன்...
இப்ப பெடியள் வருவாங்கள்...அவங்கள் வீட்ட கொண்டு போய் விடுவாங்கள்...பத்துநாள் நிம்மதியா அண்ணியோட பிள்ளையளோட நில்...அதுக்குப்பிறகு வந்து கடையைத்திற...சரியோ..."
"என்னடா சொல்லுறாய்?"
"அண்ணா...நீ எப்பிடி எங்களுக்கெல்லாம் அண்ணனா...அப்பாவா இருந்தனி...உன்னை விடுவமே நாங்கள்..எங்கட பெடியள் எல்லாரும் தொடர்பில இருக்கிறாங்கள்...நாளைக்கு எல்லாரோடையும் கதைக்கலாம்...
நாங்கள் துரோகத்தாலை தோத்துப்போனம் தான்...அதுக்காக...எங்கட ஓர்மம் ஒருநாளும் குறையக்கூடாது...குறையாது...நீ கவலைப்படாதை அண்ணா..."
மகிழன் எப்பவும் இப்பிடித்தான்...நினைத்ததை உடனே செய்து முடித்து விடுவான்....அவனுடைய குரலிலும் அதே கம்பீரம் இருந்தது.
அவன் சொல்லச்சொல்ல எனக்குள் நான் புதிதாகப் பிறந்து கொண்டிருந்தேன்...
எழுத்து - சுரேஷ் தர்மா
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை