யாழில் கடற்தொழில் அமைப்புக்களினால் போராட்டம் முன்னெடுப்பு!📸
இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி யாழ்; நகரில் போராட்டம் ஒன்றை இன்று (27) தீவக கடற்தொழில் அமைப்பு முன்னெடுத்தது.
தீவக கடற்றொழில் அமைப்புக்களான மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, வேலணை, புங்குடுதீவு உள்ளிட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
யாழ். பண்ணையில் உள்ள கடல்வள நீரியல் திணைக்களம் முன்பாக ஆரம்பமான போராட்டம் அங்கிருந்து, இந்திய துணைத்தூதரகத்திற்கு சென்று, அங்கிருந்து வடமாகாண ஆளுநர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.
இதன் பொழுது நிறுத்து நிறுத்து இழுவை மடி தொழிலை நிறுத்து !, தாண்டாதே தாண்டாதே எல்லை தாண்டாத !, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்! ,அள்ளாதே அள்ளாதே எமது வளத்தை அள்ளாதே!, வாழ விடு வாழ விடு எங்களை வாழ விடு ! ,எல்லை தாண்டி வந்து என் இனத்தை பட்டினி ஆக்காதே ஆகிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, இந்திய தீதரகத்திற்கு மகஜரை வழங்க யாழ் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி போராட்டகாரர்களுக்கு அனுமதி வழங்கினர். போராட்டக்காரர்களில் சிலர் இந்திய துணைதூதுவராலய அதிகாரிகளை சந்தித்து மகஜரை கையளித்தனர்.
இதேவேளை போராட்டக்காரர்கள் வருகை தந்த பாதைக்கு போக்குவரத்து பொலிஸார் கடுமையான பாதுகாப்பினை வழங்கியதோடு பொதுமக்களை குறித்த பாதையில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் பொலிசார் கண்ணீர் புகைகுண்டுகள் சகிதம் இந்திய தூதுவராலயத்திற்கு கடுமையான பாதுகாப்பினை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை