யாழ் சேவையிலிருந்து அகற்றப்படும் மினி பஸ்கள் !

யாழ் குடாநாட்டில் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும்


சிறிய ரக தனியார் (மினி பஸ்) பேருந்துகளை வரும் காலங்களில் சேவையில் இருந்து நிறுத்த வேண்டியுள்ளதாக வடக்கின் ஆளுநர் வேதநாயகன் 20.02.2025 நாளன்று தெரிவித்துள்ளார். 


குறிப்பாக இவ்வாறான சிறிய பேருந்துகளில் பயணிகள் அசௌகரியத்துடன் பயணிக்கவேண்டிய நிலைமை காணப்படுவதால் குறித்த காலப் பகுதிக்குள் பேருந்துகளை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.


அத்துடன் இதற்காக அத்தகைய பேருந்து உரிமையாளர்களுக்கு கடன் வசதிகளைப் பெற்றுக் கொடுப்பது உதவியாக இருக்கும் எனவும் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.


குறித்த அறிவுறுத்தலானது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் சு.ராஜேந்திரா, வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலர் செ.பிரணவநாதன், அமைச்சின் சிரேஷ;ட உதவிச் செயலர் இ.குருபரன், வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரன், பொதுமுகாமையாளர் ப.ஜெயராஜ், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, வட இலங்கை தனியார் போக்குவரத்து ஒன்றியத் தலைவர் சிவபரன் என பல்துறை அதிகாரிகள் முன்நிலையிலேயே அவர் இந்தக் கருத்தை அவர் கூறியுள்ளார்.


ஆளுநரின் இந்த கருத்தானது தனியார் பேருந்து சேவையை குறிப்பாக மினி பஸ் என மக்களால் அறியப்பட்ட சிறிய ரக பேருந்துகளை

இலக்கு வைத்து

ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலில் இருந்துகொண்டே கூறப்பட்டுள்ளது.


யாழ் மாவட்டத்தை பொறுத்தளவில் அரச பேருந்துகள் சேவையை முன்னெடுக்காத பல கிராமபுறங்களுக்கு கூட இந்த தனியார் மினி பஸ்கள் பல சிரமங்களுடன் முன்னெடுக்கின்றன.


அதேநேரம் அந்த சேவையை மிகப் பெரிய முதலீடில் குறிப்பாக வங்கிகளில் கடன்பெற்று, மனைவி பிள்ளைகளின் நகைகள் வீடுகளை விற்று அல்லது அடகுவைத்தே குறித்த சிறிய பேருந்துகளை கொள்முதல் செய்து சேவையுடன் தமது பொருளாதார ஈட்டலையும் அந்த உரிமையாளர்கள் முன்னெடுக்கின்றனர்.

அதுமட்டுமல்லாது பலருக்கு வேலைவாய்ப்பும் வழங்கி வருகின்றனர்.


அதேபோன்று மக்களுக்கான சேவையையும் சட்ட முறைகளுக்கேற்பவே செய்துவருகின்றனர்.


பல இலட்சம் முதலீடுகளை செய்து தற்போது சேவையில் இருக்கும் மினி பஸ்களுக்கு என்ன மாற்று என்ற விடையம் அல்லது பொறிமுறை குறிப்பிடவில்லை.


இவ்வாறான ஒரு பின்னணி இருக்க தற்போது வடக்கின் ஆளுநர் அந்த மினி பஸ்களை சேவையில் இருந்து நிறுத்த முயல்கின்றார்.


அத்துடன் இதற்காக அத்தகைய பேருந்து உரிமையாளர்களுக்கு கடன் வசதிகளைப் பெற்றுக் கொடுத்து அவர்களை மீண்டும் கடனாளியாக்கும் ஒரு தந்திரோபாயமாகவே இருக்கிறது. 


ஆளுனரின் இந்த நடவடிக்கையால் யாழ் நகரிலிருந்து மாதகல் சேந்தாங்குளம், பண்டத்தரிப்பு, அச்சுவேலி, 

சாவகச்சேரி,கொடிகாமம்,பருத்தித்துறை, அராலி, யாழ் நகர் - கச்சேரி என அதிக சேவையை முன்னெடுக்கின்ற பேருந்துகள் இல்லாதுபோய் வழித்தடத்தை இழக்க வாய்புள்ளது.


எனவே இவ்விடையம் தொடர்பில் மினிபஸ் உரிமையாளர்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.